லட்சுமி ஹோம்ஸ்ட்ராம்

லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் (Lakshmi Holmström 1935 - மே 6, 2016)[1] பிரித்தானியா தமிழ் எழுத்தாளர். நவீனத் தமிழ்ப் புனை கதைகள், கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தமிழின் சிறப்பை உலகறியச் செய்து வந்தவர். மௌனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ந. முத்துசாமி, அம்பை, பாமா, இமையம் போன்றவர்களின் படைப்புகளை மொழிபெயர்த்தவர். சுந்தர ராமசாமியின் "குழந்தைகள் பெண்கள் ஆண்கள்" என்ற புதினத்தையும் ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளார்.

இங்கிலாந்து, கனடா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மொழிபெயர்ப்புப் பட்டறைகளை நடத்தித் தமிழ் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்வதற்குப் புதியவர்களை ஊக்குவிப்பதில் பெரும் பங்காற்றி வந்தவர். தமிழ்க் கவிதைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் லண்டனிலும் பிற இடங்களிலும் தமிழரல்லாதவர்கள் மத்தியில் வாசித்துக் காட்டியுள்ளார். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காவியங்களையும் வசன நடையில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டிருக்கிறார். நவீன தமிழ் இலக்கியங்கள் பற்றியும் பல கட்டுரைகளை ஆங்கில இதழ்களில் எழுதியுள்ளார்.

விருதுகள்

  • பாமாவின் கருக்கு, அம்பையின் காட்டில் ஒரு மான் ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக ஹட்ச் கிராஸ்வோர்ட் புக் (Hutch Crossword Book) விருதை முறையே 2000, 2006ஆம் ஆண்டுகளில் பெற்றார்.
  • தமிழுக்கு இவர் ஆற்றிவரும் வாழ்நாள் பங்களிப்பிற்காக, கனேடியத் தமிழ் இலக்கியத் தோட்டம் 2007ஆம் ஆண்டுக்கான இயல் விருதையும் 1,500 டாலர் பரிசையும் வழங்கியது.

மேற்கோள்கள்

  1. "மொழிபெயர்ப்பாளர் லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் மறைந்தார்!". உலக தமிழ்ச் செய்திகள். பார்த்த நாள் 7 மே 2016.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.