ராஜ பார்வை (திரைப்படம்)
ராஜ பார்வை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மாதவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அமாவாசய சந்துருடு எனும் பெயரில் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டது.
ராஜ பார்வை | |
---|---|
இயக்கம் | சிங்கீதம் சீனிவாசராவ் |
தயாரிப்பு | கமல்ஹாசன் சந்திரஹாசன் (ஹாசன் பிரதர்ஸ்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பருன் முகர்ஜி |
படத்தொகுப்பு | வி. ஆர். கோட்டகிரி |
வெளியீடு | 10 ஏப்ரல் 1981 |
நீளம் | 3954 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைக்கரு
பார்வையற்ற ஒரு இந்து இளைஞனுக்கும், பணக்கார கிருத்துவப் பெண் ஒருத்திக்கும் விளைகிற காதலையும் அதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் விவரிக்கிறது. இறுதியில், தேவாலயத்தில், மற்றொருவனுடன் அவளுக்குத் திருமண ஒப்பந்தம் நிகழவிருக்கையில், அவளது விசும்பல் ஒலியின் மூலம் அவளுக்கு விருப்பமில்லை எனத் தெளிவாக அறிந்து கொள்ளும் நாயகன், தன் நண்பனின் உதவியுடன் அவளை அழைத்துச் சென்று விடுகிறான். இதற்கு அப்பெண்ணின் தாத்தாவின் ஆசிகளும் உண்டு!
நடிகர்கள்
- கமல்ஹாசன் - ரகு
- மாதவி - நான்சி
- எல். வி. பிரசாத் - நான்சியின் தாத்தா[1]
- சந்திரஹாசன் - ரகுவின் தந்தை
- கே. பி. ஏ. சி. லலிதா - ரகுவின் மாற்றாந்தாய்
- தனுஷ்கொடி - நான்சியின் தந்தை
- ஒய். ஜி. மகேந்திரன் - சீனு
- டெல்லி கணேஷ் - ஜார்ஜ்
- சித்ரா - சுலோசனா
- வி. கே. ராமசாமி - சுலோசனாவின் தந்தை
- இராஜலட்சுமி பார்த்தசாரதி - பார்வையற்றோர் பள்ளி தலைமையாசிரியர்.
- சாருஹாசன் - சர்ச் பாதிரியார்
- சிறப்பு தோற்றம்
பாடல்கள்
இளையராஜா அவர்கள் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். பாடல் வரிகள் கண்ணதாசன், வைரமுத்து மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | அந்தி மழை பொழிகிறது ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வைரமுத்து | 4:35 |
2 | அழகே அழகு தேவதை ... | கே. ஜே. யேசுதாஸ் | கண்ணதாசன் | 4:28 |
3 | விழி ஓரத்து கனவு ... | கமல்ஹாசன், பி.எஸ். சசிரேகா | கங்கை அமரன் | 3:39 |
சுவையான தகவல்கள்
- இளையராஜாவின் இசையில் பாடல்கள் இன்னிசை மழையாகவே இருந்தன. குறிப்பாக, வசந்தா என்னும் கருநாடக இசையொற்றிய அந்தி மழை என்னும் பாடல் மிகவும் பிரபலமானது. கமல் வயலின் நிகழ்ச்சியாக இசைத்தடம் ஒன்றும் இதில் இடம் பெற்றிருந்தது. பந்துவராளி என்னும் கருநாடக இசையைப் பின்பற்றி முதல் பகுதியிலும், மேலை நாட்டுப் பாணியில் இரண்டாவது பகுதியுமாக மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
- ஒரு பத்திரிகையின் நேர்காணலில் இதை ஒரு குடும்பப்படம் என கமல் விவரித்திருந்தார். ஹாசன் பிரதர்ஸ் என்று குடும்பப் பெயரின் கீழ் தயாரித்தது மட்டும் அன்றி, அவரும் அவரது தமையன் சாருஹாசனும் இதில் நடித்திருந்தனர். அவரது குடும்பத்தில் பலரும் இப்படத்தில் ஏதோ ஒரு வகையில் தொடர்புற்றிருந்தனர் என்று கமல் கூறினார்.
- மிகப் பிரபலத் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குனருமான எல்.வி.பிரசாத் இதில் மாதவியின் தாத்தா வேடம் ஏற்றிருந்தார்.
- கமலின் முதல் சொந்தப் படமாகவும் அவரது நூறாவது படமுமான இது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அக்கால கட்டத்தில் மடை வெள்ளமெனக் காதல் கதைத் திரைப்படங்கள் வெளி வந்தமையும் (அலைகள் ஓய்வதில்லை, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை போன்றவை) ஒரு காரணமாக இருக்கலாம்.
- மிகச் சாதாரணமான ஒரு காதல் கதையை சிறப்பான முறையில் வடிவமத்திருந்தமைக்கு சிங்கிதம் ஸ்ரீனிவாசன் மட்டும் அல்லாது, கமலின் பங்களிப்பும் மிகப்பெரும் அளவில் உண்டு. தனது நூறாவது படமாக இதைக் கொண்டிருந்த கமல், பார்வையற்ற இளைஞன் வேடத்தில் திறம்பட நடித்திருந்தார். அவருடைய பல பரிமாணங்களையும் அறிவித்த படங்களூள் முதன்மையான சிலவற்றில் ராஜபார்வையும் அடங்குவதானது.
மேற்கோள்கள்
- "அழியாத கோலங்கள்" (in ta). Kungumam. 18 May 2015. http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=8724&id1=6&issue=20150518.