யோன் யங்
யோன் வாட்ஸ் யங் (John Watts Young, ஜான் வாட்ஸ் யங்; செப்டம்பர் 24, 1930 – சனவரி 5, 2018) என்பவர் அமெரிக்க விண்ணோடியும், கடற்படை அதிகாரியும், கடற்படை வானோட்டியும், வான்வெளிப் பொறியியலாளரும் ஆவார். 1972 ஆம் ஆண்டில் அப்பல்லோ 16 விண்கலத்தில் நிலவுக்குச் சென்று நிலவில் நடந்த 9-வது மனிதர் என்ற சாதனையைப் படைத்தார். அத்துடன் அதிக ஆண்டுகள் விண்வெளி வீரராகப் பணியாற்றியவர் என்ற சாதனையையும் இவர் படைத்தார். இவரது 42 ஆண்டுகால சேவையில் நாசா சேவையில், ஆறு விண்வெளித் திட்டங்களில் பங்கு கொண்டு சாதனை புரிந்தார். ஜெமினி திட்டத்தில் ஜெமினி 3, ஜெமினி 10 ஆகிய பயணங்களிலும், அப்பல்லோ திட்டத்தில் அப்பல்லோ 10, 16 ஆகிய பயணங்களிலும், விண்ணோடத் திட்டத்தில் எஸ்டிஎஸ்-1, 9 ஆகிய பயணங்களிலுமாக இவர் ஆறு விண்வெளிப் பயணங்களில் வெற்றிகரமாக பங்குபற்றியுள்ளார்.[1][2]
யோன் வாட்சு யங் John Watts Young | |
---|---|
![]() | |
நாசா விண்ணோடி | |
தேசியம் | அமெரிக்கர் |
பிறப்பு | செப்டம்பர் 24, 1930 சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, அமெரிக்கா |
இறப்பு | சனவரி 5, 2018 87) ஹியூஸ்டன், டெக்சஸ், அமெரிக்கா | (அகவை
வேறு பணிகள் | அமெரிக்கக் கடற்படை வானோட்டி |
பயின்ற கல்வி நிலையங்கள் | ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், 1952 |
தரம் | ![]() |
விண்வெளி நேரம் | 34நா 19ம 39நி |
தெரிவு | 1962 நாசா குழு 2 |
மொத்த விண்வெளி நடைகள் | 3 |
மொத்த நடை நேரம் | 20ம 14நி 14செ |
பயணங்கள் | ஜெமினி 3, ஜெமினி 10, அப்பல்லோ 10, அப்பல்லோ 16, STS-1, STS-9 |
திட்டச் சின்னம் | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
ஓய்வு | டிசம்பர் 31, 2004 |
1965-ஆம் ஆண்டில் ஜெமினி திட்டத்தின் முதலாவது மனித விண்வெளிப் பயணத் திட்டமான ஜெமினி 3 இல் முதற்தடவையாகப் பயணம் செய்தார். பின்னர் அதே திட்டத்தில் 1966 இல் ஜெமினி-10 விண்கலத்தில் முதன்மை வீரராக சென்றார். 1969 இல் ஏவப்பட்ட அப்பல்லோ 10 விண்கலத்தில் சென்று சந்திரனைத் தனியே சுற்றி வந்த முதலாவது மனிதர் என்ற சாதனையைப் புரிந்தார். அப்பல்லோ 16 விண்கலத்தில் சென்று சந்திரனின் தரையில் தரையுலவியை இயக்கினார். இரு தடவைகள் சந்திரனுக்குச் சென்ற மூவரில் இவரும் ஒருவர் ஆவார். அத்துடன், 1981 இலும் பின்னர் 1983 இலும் மேற்கொள்ளப்பட்ட விண்ணோடப் பயணங்களிலும் முதன்மை வீரராகச் சென்றார். யங் 2004 ஆம் ஆண்டில் நாசாவில் இருந்து பணி ஓய்வு பெற்றார். 2018 சனவரி 5 இல் காலமானார்.[3]
மேற்கோள்கள்
- "Biographical Data: John W. Young (Captain, USN Ret.)". NASA.gov (August 2010).
- Speck, Emilee (24-09-2016). "Moon-walking astronaut John Young turned 86 on Saturday". Orlando Sentinel. http://www.orlandosentinel.com/news/space/go-for-launch/os-nasa-astronaut-john-young-turns-86-20160923-story.html.
- "Alumnus and American Hero John Young Dies at Age 87" (en).