யூனானி மருத்துவம்
யூனானி மருத்துவம் (யுனானி மருத்துவம்) என்பது கிரேக்க-அராபிய வைத்திய முறையாகும்.[1] இவ்வைத்திய முறைமை மனித உடலில் காணப்படும் நான்கு வகையான பாய்மங்களான கோழை Phlegm (Balgham), குருதி (Dam), மஞ்சள் பித்தம் Yellow bile (Safra), கரும் பித்தம் Black bile பற்றிய இப்போகிரடிசின் படிப்பினைகளை மையமாகக் கொண்டுள்ளது.[2]
பெயர்
யூனானி என்ற சொல் அரபு, இந்தி, பாரசீகம் மற்றும் உருது மொழிகளில் கிரேக்கத்தைச் சேர்ந்தது எனப் பொருள் படும். இது சின்னாசியாவின் கடற்கரைக்கு வழங்கிய கிரேக்க மொழிப் பதமான அயோனியா என்பதில் இருந்து மருவியதாகும். யூனான் என்பதன் பொருள் கிரேக்கம் என்பதாகும். இலங்கையில் சிங்கள மொழியில் முஸ்லிம்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் யோனக என்ற சொல், முற்காலத்தில் கிரேக்கர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. சிங்களத்தில் யோனக என்பதும் தமிழில் யவனர் அல்லது சோனகர் என்பதும் அதே கிரேக்கர்களைக் குறித்ததாயினும் பின்னர் அது அரபியருக்கு வழங்கலாயிற்று. இச்சொற்கள் அனைத்தும் யூனான் என்ற சொல்லிலிருந்து பிறந்தனவே.
வரலாறு
அப்பாசியக் கலீபா மஃமூனின் ஆட்சிக் காலத்தில் ஏனைய மொழிகளிலிருந்த அறிவியல் நூல்கள் அரபு மொழியிற் பெயர்க்கப்படுவது இசுலாமியப் பேரரசினால் ஊக்குவிக்கப்பட்டது. அது மாத்திரமன்றி, பைத்துல் ஹிக்மா (அறிவு இல்லம்) என்ற ஒர் அமைப்பு பக்தாதிற் தோற்றுவிக்கப்பட்டு அறிவியல் தொடர்பான செய்திகள் குறித்துக் கலந்துரையாடவும் கருத்தாடவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அக்காலத்தில் வளமான இலக்கியங்களையும் அறிவு நூல்களையும் கொண்டிருந்த கிரேக்கம், இலத்தீன், சமசுகிருதம் போன்ற மொழிகளிலிருந்து ஏராளமான நூல்கள் அரபு மொழியிற் பெயர்க்கப்பட்டன. அவ்வாறு கிரேக்க மொழியிலிருந்து பெயர்க்கப்பட்ட கிரேக்க மருத்துவத்தையே அக்கால அரபு முஸ்லிம்கள் பெரிதும் வளர்த்தெடுத்தனர். அதனாற்றான் கிரேக்க மருத்துவமான யூனானி, அரபு மருத்துவம் என்று கருதப்படும் அளவுக்கு வளர்ச்சி பெற்றுச் செல்வாக்குச் செலுத்தியது.
கல்வி
யூனானி மருத்துவ முறை பற்றிய தகவல்கள் இரண்டாம் நூற்றாண்டு முதற் கிடைக்கிறதாயினும் யூனானி மருத்துவம் பற்றிச் சிதறிக் கிடந்த தகவல்கள் பாரசீக மருத்துவரான இப்னு சீனா (980-1037) என்பவராற் தொகுக்கப்பட்டன. ஆயுர்வேதத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த யூனானி மருத்துவ முறை இந்தியாவில் மாற்று வைத்திய முறையாக நிலைப்பற்று காணப்பட்டது. யூனானி மருத்துவர்கள் இந்தியாவில் சட்டப்படி மருத்துவப் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் கொழும்புப் பல்கலைக்கழகம் 1985 ஆம் ஆண்டு முதல் யூனானி தொடர்பான வைத்திய பட்ட கற்கைநெறியொன்றை நடத்தி வருகின்றது.[3]