மோகன் ராம்
மெயில் ராம் என்னும் மோகன் ராம் (Mohan Ram) (1933, நவம்பர் 13- 1993 நவம்பர் 3) என்பவர், ஒரு பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஆவார்.
துவக்ககால வாழ்கை
மோகன் ராம் தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டம் வேலூரைச் சேர்ந்தவர். இவர் முனுசாமி அம்சம்மா ஆகியோருக்கு மகனாக 1933, நவம்பர் 13 அன்று பிறந்தார். அவரது தந்தை மாவட்டக் கல்வி அலுவலராகப் பணியாற்றியதால் அன்றைய சென்னை மாகாணத்தின் பல்வேறு இடங்களில் பள்ளிக் கல்வி கற்றார். வேலூர் ஊரிசு கல்லூரியில் இண்டர்மீடியட்டும் பொருளாதாரத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. (ஹானர்ஸ்) பட்டப் படிப்பும் முடித்த பின், புதுக்கோட்டை ராஜா கல்லூரியில் சிறிதுகாலம் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கல்லூரி நாள்களில், வேலூரில் மாணவ நண்பர்களுடன் சேர்ந்து ‘ரெனய்ஸான்ஸ் நூலகம்’ என்னும் படிப்பு வட்டத்தை உருவாக்கி மார்க்ஸிய விவாதங்களில் ஈடுபட்டு வந்த்தார்.
பத்திரிக்கைத் துறையில்
1960 இல் சென்னையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் பத்திரிகையாளராக இணைந்து பணிகளைத் தொடங்கினார். எனினும் அவர் நீண்டகாலம் பணியாற்றியது மெயில் நாளேட்டில்தான். அதன் பிறகு தில்லியில் பிடிஐ-யில் பணியாற்றிய காலம்தொட்டு, ஃபார் ஈஸ்டர்ன் எகனாமிக் ரெவ்யூ போன்ற வெளிநாட்டு இதழ்களுக்கும் கொல்கத்தாவில் இடதுசாரிக் கவிஞர் சோமர் சென் நடத்திய நவ், ஃப்ரன்டியர் ஆகியவற்றுக்கும் செய்திக் கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதிவந்தார். 1980-களின் இறுதியில் இந்தியா போஸ்ட்டின் வெளிநாட்டு நிருபராகப் பணியாற்றிய அவர், கடைசியாக தில்லியிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த பயனீர் நாளேட்டில் எழுதிவந்தார்.
ஆய்வுக் கட்டுரைகள்
அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்த ஏராளமான ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லியில் 1990-களின் தொடக்கம் வரை எழுதினார். இந்திய அரசின் புவிசார் அரசியல், பொருளாதாரக் கொள்கை, நாகாலாந்து பிரச்சினை, இந்திய-சீன எல்லைப் பிரச்சினை, சிலி நாட்டின் நிலச்சீர்திருத்தம், கியூபாவின் உயர் கல்விக் கொள்கை, நெருக்கடிநிலை, பொதுத்துறை நிறுவனங்களின் ஊழல், இந்தியாவில் அமெரிக்க உளவு நிறுவனங்கள், இந்திய சோவியத் ஆயுத ஒப்பந்தம், ஒடுக்குமுறைச் சட்டங்கள், மத்திய அரசாங்கத்தின் மொழிக் கொள்கை, யூரோ கம்யூனிசத்தின் தோல்வி எனப் பல்வேறு விசயங்கள் குறித்த ஆய்வுகள் அவரது கட்டுரைகளாக வெளிவந்தன.[1]
எழுதிய நூல்கள்
மேற்கோள்கள்
- எஸ். வி. ராஜதுரை (2017 செப்டம்பர் 23). "அறிவு நாணயம் வேண்டாமா தோழர்?". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 24 செப்டம்பர் 2017.
- "Hindi Against India: The Meaning of DMK.". https://books.google.co.in/books.+பார்த்த நாள் 24 செப்டம்பர் 2017.
- "Indian Communism: Split Within a Split". https://books.google.co.in/books.+பார்த்த நாள் 24 செப்டம்பர் 2017.