மேற்கு நியூ பிரிட்டன் மாகாணம்

மேற்கு நியூ பிரிட்டன் (West New Britain) என்பது பப்புவா நியூ கினியின் மாகாணமாகும். இது நியூ பிரிட்டன் தீவில் அமைந்துள்ளது. இம்மாகாணத்தின் தலைநகர் கிம்பே ஆகும். மாகாணத்தின் பரப்பளவு 20,387 கிமீ². மக்கட்தொகை 264,264 (2011 கணக்கெடுப்பு).[1] இம்மாகாணம் பாளவெண்ணெயை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது. இம்மாகாணத்தில் நக்கனாய், பாக்கோவி, கோவே, ஊனியா, மாலேயு, கௌலோங், அரோவி என ஏழு முக்கிய இனக்குழுக்கள் வாழ்கின்றனர். இவர்கள் கிட்டத்தட்ட 25 மொழிகளைப் பேசுகின்றனர்.

மேற்கு நியூ பிரிட்டன் மாகாணம்
West New Britain Province

கொடி

பப்புவா நியூ கினியில் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணம்
நாடுபப்புவா நியூ கினி
அமைப்பு1976
தலைநகர்கிம்பே
மாவட்டங்கள்
அரசு
  மாகாண ஆளுனர்சசீந்திரன் முத்துவேல் (2012-இன்று)
பரப்பளவு
  மொத்தம்20,387
மக்கள்தொகை (2011 கணக்கெடுப்பு)
  மொத்தம்2,64,264
  அடர்த்தி13
நேர வலயம்ஆநேவ (ஒசநே+10)

மேற்கு நியூ பிரிட்டன் மக்கள் பப்புவா நியூ கினி மக்களால் "கோம்பேக்கள்" என அழைக்கப்படுகின்றனர். இது கோவே இன மக்களைக் குறிக்கிறது. இம்மக்கள் விருத்த சேதனம் செய்யும் வழக்கத்திற்காக பப்புவா நியூ கினியில் முக்கியமாக அறியப்படுகிறார்கள். இதற்காக இவர்கள் அந்நாட்டு மக்களால் "கோம்பே வெட்டு" (Kombe cut) எனப் பரவலாக அழைக்கப்படுகிறார்கள். இவ்விருத்த சேதன வழக்கம் நியூ கினித் தீவின் வடக்குக் கரையோரப் பகுதிகளிலும் நடைமுறையில் உள்ளது. ஏனைய பகுதிகளில் வழக்கொழிந்து போயுள்ளது.

இங்குள்ள பெரும்பான்மை மக்கள் கத்தோலிக்கர் ஆவர். ஆனாலும், இம்மாகாணத்தின் மேற்கு முனையில் குறிப்பிடத்தக்க அளவு ஆங்கிலிக்கரும் உள்ளனர்.

மாகாணத்தின் வடக்குக் கரையோயோரப் பகுதிகளில், முக்கியமாக கிம்பே பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு எண்ணெய்த்தால (oil palm) உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள வாலிண்டி நீர்ப்பாய்ச்சல் பகுதி பப்புவா நியூ கினிக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைக் கவரும் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும்.

மேற்கு நியூ பிரிட்டன் மாகாண ஆளுனராக இந்திய வம்சாவழித் தமிழரும், தொழிலதிபருமான சசீந்திரன் முத்துவேல் 2012 சூலை 22 முதல் பதவியில் உள்ளார். இவர் 2012 நாடாளுமன்றத் தேர்தலில் மாகாண உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]

மாவட்டங்களும் உள்ளூராட்சிகளும்

இம்மாகாணத்தில் இரண்டு மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்று அதற்கு மேற்பட்ட உள்ளூராட்சிகள் உள்ளன. மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்காக ஒவ்வொரு உள்ளூராட்சியும் பல வட்டாரங்களாகப் (wards) பிரிக்கப்பட்டுள்ளன.[3]

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மாகாணமும், ஒவ்வொரு மாவட்டமும் பப்புவா நியூ கினி நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு பிரதிநிதிகளைக் கொண்டுள்ளன.

தொகுதிஉறுப்பினர் (2012 தேர்தல்)
மேற்கு நியூ பிரிட்டன் மாகாணம்சசீந்திரன் முத்துவேல்[2]
காண்டிரியன்-குளொஸ்டர் ஓப்பன்யோசப் லெலாங்
தலசி ஓப்பன்பிரான்சிசு மாருசு[4]

மேற்கோள்கள்

  1. "PAPUA NEW GUINEA". City Population.de. Thomas Brinkhoff. பார்த்த நாள் 26 சூன் 2012.
  2. "Hon. Sasindran Muthuvel". National Parliament of PNG. பார்த்த நாள் 18 சனவரி 2016.
  3. "National Statistical Office of Papua New Guinea". National Statistical Office of Papua New Guinea. National Statistical Office of Papua New Guinea. பார்த்த நாள் 26 June 2012.
  4. http://results.pngec.gov.pg/
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.