முதலீடு

முதலீடு (Investment) என்பது, நிதியியல், பொருளியல் ஆகிய துறைகளில் இருவேறு விதமான பொருள்களைத் தருகிறது. பொருளியலில் இது, சேமிப்பு, நுகர்வைக் குறைத்தல் போன்றவற்றோடு தொடர்புடையது. நிதியியலைப் பொறுத்தவரை, முதலீடு என்பது, இலாபத்தை எதிர்பார்த்துப் பணத்தை ஏதாவதொரு பொருளாதார முயற்சியில் போடுவதைக் குறிக்கும். இது பொதுவாக ஒரு நீண்ட கால அடிப்படையிலானது. பெரும்பாலான முதலீடுகள் தீவாய்ப்புக்களோடு (risk) கூடியவை. பங்குகள், சொத்து, நிலையான வட்டியுடனான கடனீடுகள் போன்றவற்றிலான முதலீடுகள் இத்தகையவை. நிலையான வட்டியுடனான கடனீடுகளிலான முதலீடுகளுக்குப் பணவீக்கத் தீவாய்ப்பு உண்டு.

இதற்குப் புறம்பாக குறுகிய கால இலாபத்தை எதிர்பார்த்துப் பணத்தை ஏதாவது ஒரு முயற்சியில் ஈடுபடுத்துவது சூதாட்டம், அல்லது ஊக வணிகம் ஆகும். பணம் நீண்டகால வைப்பில் இல்லாமல், அதிக தீவாய்ப்புக் கூறுகளோடு கூடிய பணப் பயன்பாடுகளும், குதிரைகளில் பந்தயம் கட்டுதல் போன்றனவும் இவ்வகையுள் அடங்குவன. நீண்டகாலம் வைத்திருக்கும் நோக்கம் இல்லாமல் குறுகியகால இலாபத்தை எதிர்பார்த்து நிறுவனப் பங்குகளை வாங்குவதும் இத்தகையதே. செயற்றிறச் சந்தைக் கருதுகோளின் அடிப்படையில், ஒரேயளவு தீவாய்ப்புக்களோடு கூடிய முதலீடுகளில் இருந்து ஒரேயளவு வருமான வீதத்தையே எதிர்பார்க்கலாம். அதாவது தீவாய்ப்புக் கூடிச் செல்லும்போது, எதிர்பார்க்கும் வருமான வீதமும் கூடிச் செல்லும். இந்தத் தொடர்பிலிருந்து பயன்பெறும் நோக்கத்துடன், நீண்டகால அடிப்படையில் முதலீடுகளைச் செய்வதும் சாத்தியமே. ஊகவணிகத்தையும் முதலீடாகக் கொள்ளும் பொதுவான போக்கு, நடைமுறையில் பல்வேறு தாக்கங்களை உண்டாக்குகிறது. இது ஊகவணிகத்தை முதலீட்டில் இருந்து பிரித்தறியக்கூடிய முதலீட்டாளரின் திறனைக் குறைக்கிறது. ஊகவணிகத்தோடு தொடர்பான தீவாய்ப்புக்கள் குறித்த விழிப்புணர்வைக் குறைக்கிறது. ஊகவணிகத்துக்குக் கிடைக்கக்கூடிய பணத்தின் அளவைக் கூட்டி, முதலீட்டுக்கான பணத்தின் அளவைக் குறைக்கிறது.

பொருளியலிலும் பருப்பொருளியலிலும்

பொருளியல் கோட்பாடு, பருப்பொருளியலில் ஆகியவை தொடர்பில், முதலீடு என்பது, ஓரலகு காலத்தில், நுகர்வுக்காக அன்றி, எதிர்கால உற்பத்திக்காக வாங்கப்பட்ட பண்டங்களின் அளவைக் குறிக்கிறது. தொடர்வண்டிப் பாதைகளை அமைத்தல், தொழிற்சாலைகளைக் கட்டுதல் என்பன இத்தகைய முதலீடுகளுக்கு எடுத்துக்காட்டுகள். மேலதிக கல்விக்கான செலவு, சேவைக்காலப் பயிற்சிகள் போன்றவை மனித வளத்தின் மீதான முதலீடுகள். இருப்பு முதலீடு என்பது, பண்டங்களின் இருப்பின் திரள்வு ஆகும். இது நேரளவாக அல்லது எதிரளவாக அமையலாம் என்பதுடன், கருதிச் செய்யப்பட்டதாகவோ, கருதாமல் ஏற்பட்டதாகவோ அமையலாம். தேசிய வருமானம், வெளியீடுகள் என்பவற்றில் அளவீடுகளில், "I" எனும் மாறியால் குறிக்கப்படும் "மொத்த முதலீடு", மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு கூறாக அமைகின்றது. இது, GDP = C + I + G + NX என்னும் தொடர்பில் அமைகிறது. இங்கே, C நுகர்வு, G அரசாங்கச் செலவினம், NX என்பது, XM என்பதால் தரப்படும் நிகர ஏற்றுமதி. இதன்படி முதலீடு என்பது, மொத்தச் செலவில் இருந்து, நுகர்வு, அரசாங்கச் செலவினம், நிகர ஏற்றுமதி ஆகியவற்றக் கழித்தபின் எஞ்சுவது ஆகும். (அதாவது, I = GDPCGNX).

"I" வாழிடமல்லாத நிலைத்த முதலீடுகள் (புதிய தொழிற்சாலைகள் முதலியன.), வாழிட நிலைத்த முதலீடுகள் (புதிய வீடுகள்), இருப்பு முதலீடுகள் ஆகியவற்றின் சேர்க்கை ஆகும். மொத்த முதலீட்டில் இருந்து தேய்மானத்தைக் கழிப்பதால் "நிகர முதலீடு" பெறப்படுகிறது. ஓராண்டில் அதிகரித்த முதல் இருப்பின் பெறுமானம் நிகர நிலைத்த முதலீடு ஆகும்.

முதலீடு என்பது, பெரும்பாலும் வருமானம், வட்டி வீதம் ஆகியவற்றின் அடிப்படையில், I = f(Y, r) என்னும் தொடர்பின் மூலம் தரப்படுகிறது. வருமான அதிகரிப்பு, முதலீட்டை ஊக்குவிக்கிறது. அதேவேளை, பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான செலவு அதிகரிப்பதால், அதிகரித்த வட்டி வீதம் முதலீட்டைக் குறைக்கிறது. ஒரு நிறுவனம், முதலீட்டுக்காகத் தனது சொந்த நிதியைப் பயன்படுத்தினாலும் கூட, அதை வெளியே வட்டிக்குக் கொடுக்காமல் முதலிடுவது என்ற அளவில் அது ஒரு பிறவாய்ப்புச் செலவாக அமைகிறது.[1]

நிதியியலில்

நிதியியலில் முதலீடு என்பது, அது வருமானத்தை உருவாக்கும் அல்லது அதன் பெறுமதி அதிகரித்து அதனைக் கூடிய விலைக்கு விற்கலாம் என்ற எண்ணத்தில், ஒரு சொத்தையோ பொருளையோ வாங்குவது ஆகும். இது பொதுவாக வங்கிகளில் அல்லது அதுபோன்ற பிற நிறுவனங்களில் பணம் வைப்பில் இடுவதை உள்ளடக்குவதில்லை. நீண்ட கால நோக்கில் குறிப்பிடும் போதே பொதுவாக முதலீடு என்னும் சொல் பயன்படுகிறது.

குறிப்புகள்

  1. Kevin A. Hassett (2008, 2nd ed.). "Investment," The Concise Encyclopedia of Economics. Library of Economics and Liberty.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.