முட்டைகள் உள்ள உணவு
முட்டைகள் பல்வேறு பெண் உயிரினங்களால் குறிப்பாக பறவைகள், ஊர்வன, நீர்நில வாழ்வன மற்றும் மீன்கள் ஆகியவற்றால் இடப்பட்டு, மனிதர்களால் ஆயிரக்கணக்கான வருடங்ககளாக சாப்பிடப்பட்டு வருகிறது. பறவைகள் மற்றும் ஊர்வன இடும் முட்டைகள் மஞ்சள் மற்றும் வெள்ளைக்கருக்களைக் கொண்டு ஓடுகளால் பாதுகாக்கப்படுகின்றன.[1] மக்களின் முக்கிய உணவாக கருதப்படுகிறது. வாத்து, காடை மற்றும் கெளதாரி முட்டைகளையும் விருப்பமான உணவாக உண்ணப்படுகிறது.

முட்டையில் குறிப்பிடத்தக்க அளவு புரதமும், உயிர்ச்சத்து கோலினும் உள்ளது.[2] முட்டைகள் சமையலில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. முட்டைகள் ஊட்டச்சத்துக்களை கொண்டிருந்த போதிலும், கொலஸ்ரோல் உள்ளடக்கம், சலமெனெல்லா நோய்க்கிருமியின் மாசுபாடு மற்றும் முட்டை ஒவ்வாமை போன்றவற்றால் சுகாதார பிரச்சினைகள் எழக்கூடும்.
கோழி முட்டைகளின் பெருமளவிலான உற்பத்தி உலகளாவிய தொழிலாகும். 2009 ஆம் ஆண்டில், உலகளவில் 6.4 பில்லியன் கோழிகளினால் 62.1 மில்லியன் மெட்ரிக் தொன் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டன.
வரலாறு
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே பறவைகளின் முட்டைகள் மதிப்புமிக்க உணவுப்பொருட்களாக இருந்தன. வேட்டையாடும் சமூகங்கள் மற்றும் பறவைகள் வளர்க்கப்பட்ட சமீபத்திய கலாச்சாரங்களிலும் இவை செல்வாக்கு செலுத்தின. கிமு. 7500 இற்கு முன்னர் கோழிகள் அவற்றின் முட்டைகளுக்காக வளர்க்கப்பட்டன. பண்டைய ரோமில் பல முறைகளினால் முட்டைகள் பாதுகாக்கப்பட்டன.[3]
1878 ஆம் ஆண்டில் மிசூரியின் செயிண்ட லூயிசில் உள்ள நிறுவனமொன்று உலர்த்தும் செயல்முறையைப் பயன்படுத்தி முட்டையின் மஞ்சள் கரு மற்றும் முட்டையின் வெள்ளை நிறத்தை வெளிர்-பழுப்பு, உணவு போன்ற பொருளாக மாற்றத் தொடங்கியது.[4] இரண்டாம் உலகப் போரின் போது உலர்ந்த முட்டைகளின் உற்பத்தி கணிசமாக அதிகரித்தது. 1911 ஆம் ஆண்டில் பிரித்தானிய கொலம்பியாவைச் சேர்ந்த ஜோசப் கோய்ல் என்பவரால் முட்டை அட்டைப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. முட்டைகள் உடைவால் ஏற்படும் சர்ச்சைகளை தீர்க்க முட்டை அட்டைப்பெட்டிகள் காகிதத்தால் செய்யப்பட்டன.[5]
வகைகள்
பறவைகளின் முட்டைகள் சமையலில் பயன்படுத்தப்படும் பல்துறை உணவுப் பொருட்களில் ஒன்றாகும். முட்டைகள் நவீன உணவுத்துறையின் முக்கிய இடத்தை பெறுகின்றன.[6] கோழி, வாத்து ஆகியவற்றின் முட்டைகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. சிறிய முட்டைகளான காடை முட்டைகளும் உணவுகளில் சேர்க்கப்படுகின்றன. சீனா, தாய்லாந்து போன்ற ஆசியாவின் பல பகுதிகளில் முட்டைகள் அன்றாட உணவாகும். 2013 ஆம் ஆண்டில் உலகளாவிய முட்டைகளின் மொத்த உற்பத்தியில் 59 சதவீதத்தை ஆசியா வழங்கியது.[7] மிகப் பெரிய முட்டையான தீக்கோழிகளின் முட்டைகள் ஆடம்பர உணவாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. நீள் சிறகுடைய பறவைகளின் முட்டைகள் இங்கிலாந்திலும், ஸ்காண்டிநேவிய நாடுகளிலும், நோர்வேயிலும் சுவைக்காக பயன்படுத்தப்படுகின்றன.[8] கினிக்கோழிகளின் முட்டைகள் பெரும்பாலும் ஆபிரிக்க நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.[9] பல நாடுகள் காட்டு பறவைகளின் முட்டைகள் சேகரிக்கப்படுவதை அல்லது விற்பனை செய்யப்படுவதை தடைசெய்யும் சட்டங்களால் காணப்படுகின்றன. இவை சிலசமயம் ஆண்டின் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே முட்டைகளை சேகரிக்க அனுமதிக்கின்றன.[8]
உற்பத்தி
2017 ஆம் ஆண்டில், கோழி முட்டைகளின் உலக உற்பத்தி 80.1 மில்லியன் தொன்களாக இருந்தது. மொத்த உற்பத்தியில் சீனாவில் 31.3 மில்லியனும், அமெரிக்காவில் 6.3 மில்லியனும், இந்தியாவில் 4.8 மில்லியனும், மெக்ஸிகோவில் 2.8 மில்லியனும், ஜப்பானில் 2.6 மில்லியனும், பிரேசில் மற்றும் ரஷ்யா தலா 2.5 மில்லியனுக்கு அதிகமாகவும் உற்பத்தி செய்யப்பட்டன.[10] பொதுவான பெரிய முட்டை தொழிற்சாலை வாரத்திற்கு ஒரு மில்லியன் டசன் முட்டைகளை உற்பத்தி செய்கிறது.[11] 2019 ஜனவரி மாதத்தில், அமெரிக்கா 9.41 பில்லியன் முட்டைகளை உற்பத்தி செய்தது.
ஊட்டச்சத்து
சமைக்கப்பட்ட 50 கிராம் நிறையுடைய நடுத்தர அல்லது பெரிய கோரி முட்டை சுமார் 70 கலோரிகளையும் (290 கிலோ யூல்), 6 கிராம் புரதத்தையும் கொண்டுள்ளது.[12] மேலும் பிரதானமாக உயிர்ச்சத்து ஏ, ரைபோபிளோவின், பாந்தோனிக் அமிலம், உயிர்ச்சத்து பி 12, கோலின், பாஸ்ரஸ், துத்தநாகம், உயிர்ச்சத்து டி ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. சமையல் முறைகள் முட்டைகளின் ஊட்டச்சத்து மதிப்புகளை பாதிக்கின்றன. மஞ்சள் கருவொன்று பரிந்துரைக்கபட்ட தினசரி உட்கொள்ளல் அளவில் மூன்றில் இரண்டு பங்கு 300 மி.கிராம் கொழுப்பை கொண்டுள்ளது. கோழிகள் உண்ணும் உணவு முட்டைகளின் ஊட்டச்சத்து தரத்தை பாதிக்கலாம். சமைத்த முட்டைகள் இலகுவாக செரிமானம் ஆகும்.[13]
குறிப்புகள்
மேற்கோள்கள்
- Kenneth F. Kiple, A Movable Feast: Ten Millennia of Food Globalization (2007), p. 22
- "How to buy egg".
- McGee, Harold (2004). McGee on Food and Cooking. Hodder and Stoughton. p. 70. ISBN 978-0-340-83149-6.
- Stadelman, William (1995). Egg Science and Technology. Haworth Press. pp. 221–223. ISBN 978-1-56022-854-7.
- ""The Coyle Egg-Safety Carton"".
- Montagne, Prosper (2001). Larousse Gastronomique. Clarkson Potter. pp. 447–448. ISBN 978-0-609-60971-2.
- ""Global Poultry Trends 2014: Rapid Growth in Asia's Egg Output"".
- Roux, Michel; Martin Brigdale (2006). Eggs. Wiley. p. 8. ISBN 978-0-471-76913-2.
- Stadelman, William (1995). Egg Science and Technology. Haworth Press. p. 1. ISBN 978-1-56022-854-7.
- "FAOSTAT".
- Quito, Anne. "Target used 16,000 eggs to decorate a dinner party, in a grand display of design's wastefulness" (en).
- "FoodData Central".
- "Digestibility of cooked and raw egg protein in humans as assessed by stable isotope techniques".