முடுக்கம்
இயங்கியலில் முடுக்கம் அல்லது ஆர்முடுகல் (acceleration) என்பது திசைவேகம் நேரத்துடன் மாறும் வீதத்தைக் குறிக்கும். நியூட்டனின் இரண்டாம் விதியில் விளக்கப்பட்டுள்ளபடி, பொருளொன்றின் முடுக்கமானது, அப்பொருளின் மேல் தொழிற்படும் ஏதாவது, மற்றும் அனைத்து விசைகளினாலும் ஏற்படக்கூடிய நிகர விளைவாகும்.[1] முடுக்கமானது அனைத்துலக முறை அலகுகள் இன்படி, மீ/செ2 (மீட்டர்/செக்கன்2 அல்லது மீட்டர்/விநாடி2) ஆல் கொடுக்கப்படும்.

எடுத்துக்காட்டாக நிலையாக இருந்த பொருளொன்று (அதாவது சார்பு திசைவேகம் பூச்சியம்), அதிகரித்துச் செல்லும் வேகத்துடன் ஓர் நேர்கோட்டில் நகருமாயின், தான் நகரும் திசையில் முடுக்கப்பட்டுள்ளது அல்லது ஆர்முடுகல் அடைந்துள்ளது எனலாம். அந்தப் பொருள் வேறொரு திசைக்குத் திரும்புமாயின், அந்த புதிய திசையில் முடுக்கம் அடந்துள்ளது எனலாம். குறிப்பிட்ட பொருளின் நகர்வு வேகம் குறைந்து செல்லுமாயின், அதனைப் பொருள் நகரும் திசைக்கு எதிர்த் திசையிலான முடுக்கம் எனலாம். இது அமர்முடுகல் (deceleration) எனவும் அழைக்கப்படுவதுண்டு.[2]
பொது வழக்கில் முடுக்கம் என்பது வேக அதிகரிப்பைக் குறிக்கும். வேகம் குறைவது எதிர்முடுக்கம் அல்லது அமர்முடுகல் எனப்படும். இயற்பியலில், வேக அதிகரிப்பு, வேகக் குறைவு இரண்டுமே முடுக்கம் என்றே குறிக்கப்படுகிறது. திசைவேகத்தின் திசை மாற்றமும் முடுக்கமே. இது மைய நோக்கு முடுக்கம் எனப்படுகிறது. வேகம் மாறும் வீதம் தொடுகோட்டு முடுக்கம் ஆகும்.

இது நேரம் சார்பாக திசைவேகத்தின் முதல் வகைக்கெழு (derivative) என வரைவிலக்கணம் கூறுவர். நேரம் சார்பாக நிலையின் (position) இரண்டாவது வகைக்கெழு என்றும் இதனை வரையறுக்கலாம். இது L T−2 என்னும் பரிமாணங்களைக் கொண்ட ஒரு திசையன் (காவி) கணியம் ஆகும்.
மேற்கோள்கள்
- Crew, Henry (2008). The Principles of Mechanics. BiblioBazaar, LLC. பக். 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-559-36871-2.
- Raymond A. Serway; Chris Vuille; Jerry S. Faughn (2008). College Physics, Volume 10. Cengage. பக். 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780495386933. https://books.google.com/books?id=CX0u0mIOZ44C&pg=PA32.