மா. நன்னன்

மா. நன்னன் (30 சூலை 1924 - 7 நவம்பர் 2017) ஒரு தமிழறிஞரும், எழுத்தாளரும் ஆவார்.

மா. நன்னன்
பிறப்புசூலை 30, 1924
காவனூர் கிராமம்,
விருத்தாசலம்.
இறப்புநவம்பர் 07, 2017
சென்னை, சைதாப்பேட்டை
பணிபேராசிரியர்
அறியப்படுவதுபெரியார் பற்றாளர், தமிழறிஞர், நூலாசிரியர்
வலைத்தளம்
http://www.maanannan.com

இளமையும் வாழ்வும்

இவர் விருத்தாசலத்தை அடுத்த காவனூர் எனும் ஊரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருஞானசம்பந்தன். தமிழ் மீது கொண்ட பற்றால், தன் பெயரை ‘நன்னன்’ என மாற்றிக் கொண்டார்.[1] அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் உயர்நிலைப்பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகியவைகளில் பணிபுரிந்தார். மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, பின் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராக 11.2.1980 முதல் 31.5.1983 வரை பணியாற்றியவர்.[2] வயது வந்தோர் கல்வி வாரியத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். எழுத்தறிவித்தலில் நன்னன் முறை எனும் புதிய முறையை ஏற்படுத்தியவர்.

சென்னைத் தொலைக்காட்சியில் 17 ஆண்டுகள் எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் கற்பித்தார். பல பாடநூல்களையும் துணைப்பாடநூல்களையும் எழுதிய நன்னன், 1990-2010 காலகட்டத்தில் சுமார் எழுபது நூல்களை எழுதினார். பெரியார் கொள்கைகளின் மீது பற்று கொண்டவர். கடவுள் மறுப்பு, பகுத்தறிவுக்கொள்கை, கலப்புத் திருமணம்,எழுத்துச் சீர்திருத்தம் ஆகியவற்றை ஆதரித்தார். சீர்திருத்தத் திருமணங்களை நேரம் பார்க்காமலும் தாலி கட்டாமலும் விடுமுறை நாள்களிலும் நடத்தவேண்டும் என்று கூரியதுடன் அத்தகை திருமணங்களை நடத்தியும் வைத்தார். எக்காரணம் கொண்டும் கையூட்டு இலஞ்சம் கொடுக்க மறுத்தார். உரிய தொகைக்கு மேல் சிறு அன்பளிப்பு (டிப்ஸ்) என்று தருவதும் கூடாது என்னும் கொள்கை உடையவர். பெரியார் கொள்கைகள் குறித்து பல நூல்களை எழுதினார். இவர் எழுதிய “பெரியாரைக் கேளுங்கள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமூகவியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றது. இவர் பெரியார் விருது, தமிழ்ச் செம்மல் விருது, திரு. வி. க. விருது போன்ற விருதுகளையும் பெற்றவர்.

குடும்பம்

இவரது பெற்றோர் பெயர் மீனாட்சி, மாணிக்கம். இவரது வாழ்க்கைத் துணைவி ந. பார்வதி. இவருக்கு வேண்மாள், அவ்வை என்ற மகள்கள்; இவர் மகன் அண்ணல், மருத்துவப் படிப்பு முடித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டே மருத்துவமும் பார்த்து வந்தார். மூட்டு வலிக்கான புதிய மருந்து பற்றிய ஆய்வில் வெற்றி பெற்றிருந்த நிலையில் திடீரென்று இறந்தார். தம் மகன் அண்ணல் பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தி ஆண்டுதோறும் பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி நடத்தி மாணவர்களுக்குப் பரிசும் அவர்களது பள்ளிகளுக்குச் சான்றிதழும் வழங்கி வந்தார்.

போராட்டம்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெள்ளையனே வெளியேறு என்னும் போரிலும், திராவிட இயக்க உணர்வு பெற்றபின் தமிழிசைக்கிளர்ச்சி, இந்தி எதிர்ப்புப் போர் ஆகியவற்றில் கலந்துகொண்டும், தொடர் வண்டி நிலையங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்தும் சிறைசென்றார்.[3]

பேச்சு

1942 ஆம் ஆண்டு முதல் கல்வியியல், சமூகவியல், அரசியல், தொழிலாளரியல் ஆகியவை குறித்து பல மேடைகளில் பேசினார். படிப்படியே பெரியாரியம், பகுத்தறிவு, சிக்கன வாழ்வு, நல்லதமிழைப் பயன்படுத்துதல், ஊடகத்துறையில் உள்ள மொழிநடைக் குறைபாடுகள் பற்றிப் பேசலானார்.

தமிழ்ப் பண்ணை

மா.நன்னன் மக்கள் தொலைக்காட்சியில் அறிவோம் அன்னைமொழி என்ற தலைப்பில் தமிழைப் பிழையின்றி எழுதவும், வாக்கியங்களை அமைக்கவும் நாள்தோறும் தகவலை வழங்கிவந்தார். நிகழ்ச்சியின் வாசகர்களை தமிழ்ப் பண்ணையார்கள் என்று அழைத்தார். தமிழ்ப்பண்ணை நிகழ்ச்சியில் தினமும் காலை 7.30 முதல் 8 மணி வரை தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் உள்ள நிறை குறைகளையும், குறைகளுக்கான சரியான தீர்வுகளையும் ஆராய்ந்தார்.

நன்னன் எழுதி வெளிவந்த நூல்கள் [4]

  • நூலின் பெயர்கள் அகரவரிசையில் அடுக்கப்பட்டுள்ளன.
  1. இவர்தாம் பெரியார் 3 சுயமரியாதை - 2012 ஏப்ரல்
  2. இவர்தாம் பெரியார் 1 . தோற்றம் (வரலாறு) - 2001 செப்டம்பர்
  3. இவர்தாம் பெரியார் 2 . போர் (வரலாறு) - 2001 அக்டோபர்
  4. உரைநடையா? குறை நடையா? (மூன்றாம் பதிப்பு)
  5. எல்லார்க்குந் தமிழ் - 1985 ( குறிப்பு - ஆங்கிலமொழியை அறிந்தோர் ஆசிரியர் ஒருவரின் உதவியின்றி தாமே தமிழைப் படிக்கவும், எழுதவும் பெரும் அளவுக்கு உதவும் நோக்கத்தோடு இச்சிறுநூல் உருவாக்கப்பட்டது.)
  6. எழுதுகோலா? கன்னக்கோலா? - 2008 சூலை
  7. கல்விக் கழகு கசடற எழுதுதல் - 2005 சூன்
  8. கெடுவது காட்டுங் குறி - 2009 சூலை
  9. கையடக்க நூல்கள்
  10. சும்மா இருக்க முடியவில்லை - 2012 ஏப்ரல்
  11. செந்தமிழா? கொடுந்தமிழா?
  12. செந்தமிழைச் செத்த மொழியாக்கிவிடாதீர்
  13. தடம் புரள்கிறதா தமிழ் உரைநடை
  14. தமிழ் உரைநடை போகிற போக்கு.., - 2003 அக்டோபர்
  15. தமிழ் எழுத்தறிவோம்
  16. தமிழியல் - தொல், எழுத்தும் சொல்லும் தொடருடன் - 2012 ஏப்ரல்
  17. தமிழைத் தமிழாக்குவோம் - 1
  18. தமிழைத் தமிழாக்குவோம் - 2
  19. தமிழைத் தமிழாக்குவோம் - 2
  20. தவறின்றித் தமிழ் எழுதுவோம்
  21. தவறின்றித் தமிழ் எழுதுவோம் (வழுக்குத் தமிழ்)
  22. தளர்ச்சியின் கிளர்ச்சி பாகம் 1
  23. தளர்ச்சியின் கிளர்ச்சி பாகம் 2
  24. திருக்குறள் மூலமும் விளக்க உரையும் - 2012 ஏப்ரல்
  25. தொல் - பேராசிரியர் உரைத்திறன் - 2012 ஏப்ரல்
  26. நல்ல உரைநடை எழுத வேண்டுமா? - திறனாய்வும் தீர்ப்பும்
  27. நல்ல உரைநடை எழுத வேண்டுமா? (மூன்றாம் பதிப்பு)
  28. நன்னன் கட்டுரைகள்
  29. புதுக்கப்பட்ட பதிப்புகள்
  30. பெரியார் கணினி (இரு தொகுதிகள்)
  31. பெரியார் பதிற்றுப் பத்து - 2007 சனவரி
  32. பெரியாரடங்கல் - 2004 மே
  33. பெரியாரியல் 1 . பொருள் - 1993
  34. பெரியாரியல் 2 . மொழி - 1993 செப்டம்பர்
  35. பெரியாரியல் 3 . இலக்கியம் - 1993 செப்டம்பர்
  36. பெரியாரியல் 4 . கலை - 1993 திசம்பர்
  37. பெரியாரியல் 5 . தாம் - 1994 ஏப்பிரல்
  38. பெரியாரியல் 6 . கல்வி - 1996 ஆகசுடு
  39. பெரியாரியல் 7 . ஒழுக்கம் - 1997 அக்டோபர்
  40. பெரியாரியல் 8 . திருமணம் - 1998 செப்டம்பர்
  41. பெரியாரியல் 9 . கடவுள் - 1998 சூலை
  42. பெரியாரியல் 10 . மதம் - 1998 சூலை
  43. பெரியாரியல் 11 . பார்ப்பனியம் - 2000 ஆகசுடு
  44. பெரியாரியல் 12 . சாதி - 2000 சூலை
  45. பெரியாரியல் 13 . அரசியல் - 2002 அக்டோபர்
  46. பெரியாரியல் 14 . சுயமரியாதை - 2003 அக்டோபர்
  47. பெரியாரியல் 15 . பகுத்தறிவு - 2004 திசம்பர்
  48. பெரியாரியல் 16 . கட்சிகள் - 2004 திசம்பர்
  49. பெரியாரியல் 17 . வாழ்க்கை - 2004 திசம்பர்
  50. பெரியாரியல் 18 . மனிதன் - 2005 சூலை
  51. பெரியாரியல் 19 . தொழிலாளர் - 2005 சூலை
  52. பெரியாரியல் - தாம்
  53. பெரியாரின் உவமைகள்
  54. பெரியாரின் உவமைகள் - 1998 ஆகசுடு
  55. பெரியாரின் குட்டிக் கதைகள்
  56. பெரியாரின் குட்டிக்கதைகள் - 1998 ஆகசுடு
  57. பெரியாரின் பழமொழிகள்
  58. பெரியாரின் பழமொழிகள் - 1998 ஆகசுடு
  59. பெரியாரின் புத்துலகு
  60. பெரியாரின் புத்துலகு
  61. பெரியாரைக் கேளுங்கள்
  62. பெரியாரைக் கேளுங்கள் - 24 குறுமங்கள்
  63. பெரியாரைக் கேளுங்கள் (தொகுப்பு)
  64. பைந்தமிழுரைநடை நைந்திடலாமா? - 2006 சூலை
  65. வாழ்வியல் கட்டுரைகள்

அடிக்குறிப்பு

  1. "தமிழறிஞர் பேராசிரியர் மா.நன்னன் காலமானார்". செய்தி. தி இந்து தமிழ் (2017 நவம்பர் 8). பார்த்த நாள் 8 நவம்பர் 2017.
  2. தமிழ் வளர்ச்சித்துறை இணையம்
  3. பெரியார் கணினி, மா.நன்னன். ஆசிரியர் குறிப்பு.
  4. நூல்களை வெளியிட்டோர், ஏகம் பதிப்பகம்,அஞ்சல் பெட்டி எண் 2964, 3, பிள்ளையார் கோயில் தெரு, 2 ஆம் சந்து , முதல் மாடி, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005, தொலைபேசி 044 - 2852 9194, கைபேசி 9790819294 , 9444909194

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.