மரண தண்டனை குறித்த விவாதங்கள்

மரணதண்டனை பயன்பாடு குறித்த விவாதங்கள் உலகின் பல பகுதிகளில் அடிக்கடி எழுந்தவண்ணம் உள்ளன. உலகளவில் பன்னாட்டு மன்னிப்பு அவை போன்ற பல அமைப்புக்களும் நாட்டளவில் பல அமைப்புக்களும் மரண தண்டனை அடிப்படை உரிமையைப் பறிப்பதாக அது ஒழிக்கப்பட வேண்டும் எனக் கூறி வருகின்றன.[1][2] அதேவேளையில் வாழும் உரிமையை இழப்பது இயல்புரிமையாக ஜான் லாக்கர், வில்லியம் பிளாக்ஸ்டோன் போன்றோர் கருதுகின்றனர்.[3] மரண தண்டனையை ஆதரிப்போரிடையே கூட இதனை "அரிதினும் அரிதாய" வழக்குகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் வலுவடைந்து வருகிறது.

கருதுகோள் வாதங்கள்

பழிக்குப் பழி

மரண தண்டனையை ஆதரிப்போர் பலரது உயிரிழப்பு, குழந்தைக் கொலை, சித்திரவதைக் கொலை மற்றும் இனவழிப்பு, பயங்கர வாதம் போன்ற கொடூரமான நிகழ்வுகளில் குற்றம் புரிந்தவரின் உயிரைப் பறிப்பது நியாயமானதாக வாதிக்கின்றனர். மரண தண்டனை வழங்கப்படாவிட்டால் பல வழக்குகளில் தகுந்த நீதி நிலைநிறுத்த படாது என்றும் சிலர் வாதிக்கின்றனர். இத்தகைய வாதமொன்றை முன் நிறுத்தும் நியூயார்க் சட்டப் பேராசிரியர் இராபர்ட் பிளெக்கர் குற்றத்திற்கு நிகரான வலியை குற்றவாளி உணர வேண்டும் என்கிறார்.[4]. இத்தகைய குற்றமிழைத்தவர்கள் உயிருடன் இருப்பதும் விடுதலை பெறுவதும் பெரும் அநீதி என்பது இவரது பார்வைக் கோணமாகும்.

கொலைத் தண்டனையை எதிர்ப்பவர்கள் பழிக்குப்பழி என்பது ஏற்றுக்கொள்ள இயலாத வாதமாகக் கருதுகின்றனர். பழிக்குப் பழி என்பது நீதி வழங்கலின் ஓரங்கமாகக் கருதும் சிலர் கொலைத்தண்டனைக்கு மாற்றாக விடுதலையற்ற வாழ்வு (வாழ்நாள் சிறை) போதுமானதாகக் கருதுகின்றனர்.

மனித உரிமைகள்

எதிர்ப்பவர்கள் கொலைத் தண்டனையானது மனித உரிமைகளுக்கு எதிரான மீறலாகக் கருதுகின்றனர். உயிர் வாழ்தல் என்பது மிகவும் அடிப்படையான உரிமையாகும்; இதனை நீதி வழங்கல் தேவையின்றி பறிப்பதுடன் குற்றவாளிக்கு உளவியல் சித்திரவதைக் கொடுப்பதாகவும் நம்புகின்றனர். ஆல்பர்ட் கேமசு 1956ஆம் ஆண்டில் வெளியிட்ட "கிலட்டின், எதிர்ப்பு, புரட்சி மற்றும் மரணம் குறித்த எண்ணங்கள் " (Reflections on the Guillotine, Resistance, Rebellion & Death) என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்:

கொலைத் தண்டனை ஓர் எளிய உயிரிழப்பு அல்ல. எவ்வாறு சிறையும் வதை முகாமும் வேறுபடுகின்றனவோ அந்தளவில் வேறானது. [...] இரண்டும் ஒரே அளவில் இருக்க வேண்டுமானால் கொலையுண்டவருக்கு கொலையாளி தான் இந்த நாளில் கொலை செய்யப்போகிறேன் என்று அறிவித்து அதுவரை தனது கட்டில் அவரை பல மாதங்கள் வைத்திருந்திருக்க வேண்டும். அத்தகைய கொடூரமான குற்றவாளியைத் தனிவாழ்வில் காண்பதரிது.[5]

இந்த நோக்கு கொடுஞ்செயலால் தனது வாழ்வுரிமையை துறக்கும் வழமையான இயல்புரிமை கொள்கைக்கு எதிராக உள்ளது.[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.