மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைதமிழ் என்ற நூல் பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. இது பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படுகிறது. மதுரையில் எழுந்தருளியுள்ள மீனாட்சியம்மையைப் பாட்டுடைத்தலைவியாகக் கொண்டு குமரகுருபரர் என்ற புலவரால் பாடப்பட்டது. காலம் 17 ஆம் நூற்றாண்டு.

நூலமைப்பு

பிள்ளைத்தமிழ் என்றவுடன் நினைவிற்கு வரும் நூல் இதுவாகும்.பொருள்நலம், கலைவளம் ஆகியவற்றால் சிறந்து விளங்கும் இந்நூலின் முதலில் விநாயகர் வணக்கம் இடம் பெற்றுள்ளது. காப்புப் பருவத்தில் திருமால், சிவபெருமான், சித்திவிநாயகக் கடவுள், முருகக்கடவுள், பிரமதேவர், தேவேந்திரன், திருமகள், கலைமகள், துர்க்கை, சத்தமாதர்கள், முப்பத்துமூவர் ஆகியோரிடம் பாட்டுடைத்தலைவியாகிய மீனாட்சியம்மையைக் காக்குமாறு பதினோரு பாடல்களில் குமர குருபரர் வேண்டுகிறார். ஏனைய தால், செங்கீரை முதலிய ஒன்பது பருவங்களில் பருவத்துக்குப் பத்து பாடல்கள் வீதம் தொண்ணூறு பாடல்கள் அருளப்பெற்றுள்ளன. மொத்தம் 102 பாடல்கள் உள்ளன.

நூலாசிரியர்

மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் குமர குருபரர். சிவத்தொண்டில் சிறந்து விளங்கியவர். இளமையிலேயே முருகன் அருள் பெற்றவர். இவர் பிறந்து ஐந்தாண்டுகள் பேசவில்லை. அதைக் கண்ட இவர் தம் பெற்றோர் திருச்செந்தூர் முருகனை வேண்ட இவர் பேசும் பேறு பெற்றார் என்பர். கல்வி கேள்விகளில் சிறந்த குமர குருபரர் முருகனுக்குக் காணிக்கையாக முதற்கண் கந்தர் கலிவெண்பா என்னும் பாமாலை இயற்றினார். முருகன் இவர் கனவில் வந்து காட்சி தந்து நீ குருபரனாகுக! என்றருளிச் சென்றார். அது முதல் இவர் குமர குருபரர் என அழைக்கப் பட்டார்.
மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் மட்டுமின்றி மீனாட்சியம்மைக் குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை,சிதம்பரச் செய்யுட்கோவை,சிவகாமியம்மை இரட்டைமணிமாலை,பண்டார மும்மணிக்கொவை, காசிக்கலம்பகம், சகலகலா வல்லிமாலை ஆகிய சிற்றிலக்கியங்களையும் இயற்றியதால் இவர் 'சிற்றிலக்கிய வேந்து' எனப் போற்றப்படுகிறார்.
இவர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றத்தின் போது இறைவியே எழுந்தருளி இவருக்குப் பரிசளித்தாள் என்பது வரலாறு. இவரின் காலம் கி.பி. பதினேழாம் நூற்றாண்டு என்பர். பாண்டி நாட்டிலுள்ள திரு வைகுண்டம் என்ற ஊரில் தோன்றி வாழ்ந்தவர். இவரின் பெற்றோர் சண்முக சிகாமணிக் கவிராயரும், சிவகாமி அம்மையும் ஆவர்.

பொருள் நலம்

பாட்டுடைத்தலைவியாகிய மீனாட்சியம்மையின் மாண்புகள் ,அம்மையிடத்துச் சிவனடியார் ஈடுபடும் பான்மை, அம்மை அடியார்களது உள்ளத்தே பெருக்கெடுத்து ஓடும் பேரானந்த வெள்ளமாய் அமையும் நிலை, தண்டமிழின் தனிச் சிறப்புகள், இறையுணர்வுக் காட்சிகள், அகப்பொருள், புறப்பொருள் நலங்கள், மதுரைத் தல வரலாற்றுச் செய்திகள், பாண்டிநாட்டின் பெருமை, பாண்டியனின் செம்மையான ஆட்சிச் சிறப்பு, மதுரை மாநகரின் இயற்கை வளம், செயற்கை நலம், தண்புனல் பெருக்கெடுத்தோடும் வையை, பொருநையின் மாண்புகள், குமரித்துறை, கொற்கைத்துறை, பொதியமலை முதலியவற்றின் வளங்கள் முதலான் செய்திகள் பல இந்நூலால் விளக்கமுறுகின்றன. எல்லாம் வல்ல இறைவி மதுரை மாநகரில் செழியர் திருமகளாய்த் தடாதகைப் பிராட்டியாய் அவதரித்தது; தனி முதல்வனாகிய சிவ பெருமான் சவுந்தர பாண்டியனாகித் தடாதகையை மணந்து தமிழாட்சி புரிந்தது; குமரவேளும் உக்கிரப் பெருவழுதியாய் உதித்தது முதலான ஒப்பற்ற திருவிளையாடல்களும் இந்நூலில் இடம்பெறுகின்றன. தமிழைப் போற்றுங்கால்,

  • வடிதமிழ்
  • மதுரம் ஒழுகிய தமிழ்
  • தெள்ளித் தெளிக்கும் தமிழ்க்கடல்
  • பண் உலாம் வடிதமிழ்
  • தெளிதமிழ்
  • தென்னந்தமிழ்
  • முதுசொற் புலவர் தெளித்த பசுந்தமிழ்
  • தெய்வத்தமிழ்
  • மதுரம் ஒழுகும் கொழிதமிழ்
  • நறைபழுத்த துறைத் தீந்தமிழ்
  • மும்மைத் தமிழ்

எனச் சிறந்த அடை மொழியுடன் போற்றுவது சிறப்பானதாகும்.

நயங்கள்

மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் ஒலிநயம் சிறந்த பல பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சந்தம், மோனை, எதுகை , தொடை நயங்கள்,முதலியன சிறந்திலங்க குமர குருபரர் இந்நூலை யாத்துள்ளார்.

சந்தம்

பாடல் -1

" தசைந்திடு கொங்கை இரண்டல எனவிரை
தருதிரு மார்பாடத்
தாய்வரு கென்பவர் பேதைமை கண்டு
ததும்புபு னகையாட" (பா.19)

பாடல்-2

"அமரர்க் கதிபதி வெளிறக் களிறெதிர்
பிளிறக் குளிறியிடா
அண்ட மிசைப் பொலி கொண்டல் உகைத்திடும்
அமரிற் றமரினொடும்"பா.30)

பாடல் -3

'அமரில் வெந்நிடும வுதியர் பின்னிடுமொ
ரபயர் முன்னிடுவ னத்தொக்க வோடவும்'(பா 12)

பாடல்-4

"குருமணி வெயில்விட மரகத நிழல்விரி
குன்றே நின்றூதும்"

இவை போன்ற இனிய சந்தம் அமைந்த பாடல்களை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் காணலாம்.

தொடை நயம்

ஆசிரிய விருத்தத்தால் அமைந்த மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் நூலில் தொடை நலம் சிறந்து விளங்குகிறது.

  • "கரைக்கும் கடாமிரு கவுட்குட முடைந்தூற்று" என கூழைமோனையும்
  • "இரைத்துத் திரைத்துத் நுரைத்தொரு"
  • "மூதண்ட வேதண்ட கோதண்டமொடு" என கூழை எதுகையும்,
  • "செங்கயல் கிடக்கும் கருங்கட் பசுந்தோகை" என கூழை முரணும்,
  • "மூலத்தலத்து முளைத்தமுழு முத்தம் தருகவே" என முற்று மோனையும்,
  • "வாளிகள் கூளிகள் காளிகள் ஞாளியிலாளியின்" என முற்று எதுகையும்,
  • "செஞ்சூட்டு வெள்ளோதிமம்", "வெண்புயலும் கரும்புயலும்" என இணை முரணும்,
*கடகளி றுதவுக பாய்மிசைப் போர்த்தவள்
கவிகுவி துறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயிறெரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடிச் சேர்த்தவள்
இடியுக அடலரி ஏறுகைத் தார்த்தவள்...."

என அடி இயைபுத் தொடையும் வந்து ஒலிநயம் சிறக்கக் காணலாம்.

கற்பனை நயம்

உருவகம்

உயர்வு நவிற்சி

உணர்த்தும் திறன்.

உசாத்துணை

கு. முத்துராசன். பிள்ளைத்தமிழ் இலக்கியம். மணிவாசகர் பதிப்பகம்.1984

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.