மகிபை பாவிசைக்கோ

மகிபை பாவிசைக்கோ ( இயற்பெயர் பீர் முகமது, 1942 திசம்பர் 15 - 2016 திசம்பர் 14) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர், தனித் தமிழ் இயக்க முன்னோடி, பத்திரிக்கையாளர் ஆவார்.[1]

வாழ்க்கை

மகிபை பாவிசைக்கோ தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், ம‌கிபாலன்ப‌ட்டியில் 1942 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் நாள் பிறந்தார். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த இவரது இயற்பெயர் பீர் முகமது. 12 வயதில் தமிழில் புலமை பெற்று பாட்டு இயற்றுமளவுக்கு தமிழில் புலமை பெற்றார், தன‌து நண்பர்களின் யோசனையின்பேரில் தன்பெயரை தனித்தமிழில் தான் பிறந்த மகிபாலன் பட்டியைச் பெயரையும் சேர்த்து மகிபை பாவிசைக்கோ என மாற்றிக் கொண்டார். மகிபாலன்பட்டியில் தொடக்கக் கல்வியை முடித்த இவர், திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை நக்கீரர் கழக திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார்.

பத்திரிக்கைப் பணிகள்

துவக்கத்தில் திராவிட இயக்க கருத்துகளால் ஈர்க்கப்பட்ட இவர், பின்னாளில் தமிழ்த்தேசியத்தந்தை பெருஞ்சித்திரனாரின் தனித்தமிழ் சிந்தனையில் ஈடுபாடு கொண்டார். அதிகாரத்துக்கு எதிரான புரட்சிகர கருத்துகளை எழுதிய இவர், பெருஞ்சித்திரனாரின் ‘தென்மொழி' ஏட்டின் முகவராக பணியாற்றினார். அக்காலத்தில் தமிழின உணர்வில் மேலோங்கினார். முஸ்லிம் முரசு, செம்பரிதி, ஒருமைத் தூதன், வஞ்சி மாலை உள்ளிட்ட பத்திரிகைகளில் பொறுப்பாசிரியராகவும் இருந்தார். சிறுவயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கிய‌ பாவிசைக்கோ, சிறுகதை, திரைக்கதை, புதினம், நாடகம், கட்டுரை, திறனாய்வு என பல்துறைகளிலும் தன்பங்களிப்பை வழங்கியுள்ளார்.

பொதுவாழ்வு

கல்லூரி காலத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளார். தனித்தமிழ் இயக்கச் செயல்பாடுகளினால் 1960களில் பெங்களூருவில் குடியேறினார். அங்கு தமிழ் மொழி பாதுகாப்பு போராட்டங்களையும், தமிழர்நலப் போராட்டங்களையும் முன்னின்று நடத்தியுள்ளார். தமிழ்த்தேசிய அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.

பெரியார், பெருஞ்சித்திரனார், பாரதிதாசன் உள்ளிட்ட தமிழக ஆளுமைகள் மட்டுமில்லாமல் பெருஞ்சித்திரனார் வழி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் பிரபாகரன், ஆண்டன் பாலசிங்கம், சு. ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோருடன் நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தார். நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தியபோது அவரை மீட்க பெரிதும் உதவினார். தன்மான தமிழர் பேரவை, தனித் தமிழ் சேனை உள்ளிட்ட‌ கர்நாடக தமிழ் அமைப்புகளின் நிறுவனத் தலைவராகவும் இயங்கினார்.[2]

மேற்கோள்கள்

  1. "புலவர் மாகிபை பாவிசைக்கோ காலமானார்". கட்டுரை. சங்கதி (2016 திசம்பர் 16). பார்த்த நாள் 1 சனவரி 2017.
  2. "தனித்தமிழ் இயக்க முன்னோடி புலவர் மகிபை பாவிசைக்கோ காலமானார்: பிறந்த நாளான இன்று பெங்களூருவில் உடல் அடக்கம்". செய்தி. தி இந்து (2016 திசம்பர் 15). பார்த்த நாள் 1 சனவரி 2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.