பௌரி கர்வால் மாவட்டம்

பௌரி கார்வால் மாவட்டம் (Pauri Garhwal), இந்தியாவின், உத்தராகண்டம் மாநிலத்தின் பதின்மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் பௌரி நகரத்தில் அமைந்துள்ளது.

பௌரி கார்வால் மாவட்டம்
पौड़ी गढ़वाल
மாவட்டம்

உத்தராகண்டம் மாநிலத்தில் பௌரி கார்வால் மாவட்டத்தின் அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்உத்தராகண்டம்
கோட்டம்கார்வால் கோட்டம்
தலைமையிடம்பௌரி
பரப்பளவு
  மொத்தம்5,399
மக்கள்தொகை
  மொத்தம்6,97,078
  அடர்த்தி129
மொழிகள்
  அலுவல்இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
இணையதளம்pauri.nic.in

மாவட்ட எல்லைகள்

5,329 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, இம்மாவட்டம், வடக்கில் ருத்ரபிரயாக் மாவட்டம், வடகிழக்கில் சமோலி மாவட்டம், கிழக்கில் அல்மோரா மாவட்டம், தென்கிழக்கில் நைனிடால் மாவட்டம், தென்மேற்கில் பிஜ்னோர் மாவட்டம் (உத்தர பிரதேசம்), மேற்கில் அரித்துவார் மாவட்டம், வடமேற்கில் டெக்ரி கார்வால் மாவட்டம் டேராடூன் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.

தட்ப வெப்பம்

கோடைகாலத்தில் சற்று வெப்பமும், குளிர்காலத்தில் பனிப்பொழிவும் காணப்படுகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 687,271 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 326,829 மற்றும் பெண்கள் 360,442 ஆக உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 1103 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 129 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 82.02% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 92.71% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 72.60% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 83,901 ஆக உள்ளது.[1]

சமயம்

இம்மாவட்டத்தில் இந்துக்களின் மக்கள்தொகை 660,507 ஆகவும், இசுலாமியர்களின் மக்கள்தொகை 22,931 ஆகவும், கிறித்தவர்களின் எண்ணிக்கை 2,161 ஆகவும் உள்ளது. மற்றும் பிற சமயத்தினர் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

இம்மாவட்டம் பௌரி வட்டம், லான்ஸ்டோவன் (Lansdowne) வட்டம், கோட்வாரா வட்டம், தலிசைன் வட்டம், துமாகோட் வட்டம், ஸ்ரீநகர் வட்டம், சட்புலி வட்டம், சௌபட்டக்கல் வட்டம் என ஒன்பது வருவாய் வட்டங்களை கொண்டுள்ளது. மேலும் கிராமப்புற வளர்ச்சிக்காக கோட், கல்ஜிக்கல், பௌரி, பபௌ, பிரான்கோல், துவாரிக்கல், துகாட்டா, ஜெய்ரிகல், ஏகஸ்வர், ரிக்கினிகல், யாம்கேஸ்வர், நைனிதண்டா, பொக்காரா மற்றும் கிர்சு என பதினான்கு ஊராட்சி ஒன்றியங்கள் செயல்படுகிறது.[2]

கல்வி

பௌரி, கோட்வார், லான்ஸ்டோவன் மற்றும் ஸ்ரீநகர் வட்டங்கள் தரம்வாய்ந்த மருத்துவ, பொறியியல் கல்வி நிலையங்களைக் கொண்டுள்ளது.

பொருளாதாரம்

இம்மாவட்டத்தின் முக்கிய தொழில் வேளாண்மை ஆகும். மேலும் ஆங்கில மற்றும் ஆயுர்வேத மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

போக்குவரத்து வசதிகள்

இம்மாவட்டத்தின் முக்கிய போக்குவரத்து தரைவழிச் சாலைகளில் நடக்கிறது. இம்மாவட்டத்தின் ஒரே தொடருந்து நிலையம் கோட்வாராவில் அமைந்துள்ளது. [3] அருகில் உள்ள விமானம் நிலையம், பௌரி நகரத்திலிருந்து 155 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேராதூன் நகரத்தில் அமைந்துள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையமாகும்.

சுற்றுலா

பௌரி கார்வால் மாவட்டத்தில் உள்ள இயற்கை மற்றும் ஆன்மிக சுற்றுலா தலங்கள் பல உள்ளது.

கிர்சு

கிர்சு பூங்கா

பௌரி நகரத்திலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில், 1700 மீட்டர் உயரத்தில் உள்ள இமயமலையின் பனி படர்ந்த கிர்சு மலைச் சிகரங்கள் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தலமாகும்.

ஆன்மிக தலங்கள்

கண்டோலியா
  • கண்டோலியா நகரத்தில் உள்ள இலக்குமி நாராயணன் கோயில், அனுமான் கோயில் மற்றும் நாகதேவதை கோயில்கள்.
  • தண்ட நாகராஜர் கோயில்
  • ஜ்வல்பா தேவி கோயில்
  • கண்வ முனிவர் ஆசிரமம்

படக்காட்சியகம்

பௌரி கார்வால் மாவட்டத்தில் காண வேண்டியவைகள்;

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.