போர்த்துகல் வரலாறு

ஐரோப்பிய மற்றும் அத்திலாந்திய நாடான போர்த்துக்கலின் வரலாறு முன்நடுக்காலம் வரை பழமை வாய்ந்ததாகும். கண்டுபிடிப்புக் காலமாகிய 15ம் மற்றும் 16ம் நூற்றாண்டுகளில் இது உலக வல்லரசு எனும் நிலைக்கு உயர்ந்தது. இக்காலப்பகுதியில் போர்த்துக்கல் பரந்த பேரரசொன்றை உருவாக்கிக் கொண்டது. இதன் ஆதிக்கம் தென்னமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா மற்றும் ஆசுத்திரலேசியா (ஓசானியா) வரை விரிந்திருந்தது. அடுத்த இரு நூற்றாண்டுகளுக்கு போர்த்துக்கல் தனது பெரும்பாலான குடியேற்றங்களைப் பாதுகாத்துக்கொண்டாலும், தனது செல்வம் மற்றும் உலக ஆதிக்கத்தை சிறிது சிறிதாக இழக்கத் தொடங்கியது. டச்சு, ஆங்கில மற்றும் பிரெஞ்சுப் படைகள் சிதறிக் காணப்பட்ட போர்த்துக்கீச வணிக நிலையங்களைச் சூழ்ந்து கொண்டமையாலும், அவற்றைக் கைப்பற்றிக் கொண்டமையாலும் போர்த்துக்கீசரின் வணிக நடவடிக்கைகளுக்கு அடிப்படையாய் அமைந்த வாசனைத் திரவிய மற்றும் அடிமை வணிகத்தைத் தம் வசப்படுத்திக்கொண்டன. இதனால் போர்த்துக்கல் கடல்வழி வாணிபம் மேற்கொள்வதற்கான வளங்கள் குறைவடைந்தன. இதனால் போர்த்துக்கல் தமது குடியேற்றங்களில் நாட்டத்தை இழந்தது.

மிகுந்த சேதம் விளைந்த இரு போர்களுடன் இராணுவ ஆதிக்கம் வீழ்ச்சியடைவதற்கான அறிகுறிகள் தோன்றின. 1578ல் மொரோக்கோவில் நடைபெற்ற அல்கேசர் குய்பர் போர் அவற்றுள் ஒன்றாகும். மற்றையது, 1588ல் தோல்வியில் முடிவடைந்த எசுப்பானியாவின் இங்கிலாந்து மீதான ஆக்கிரமிப்பாகும். இக்காலப்பகுதியில் போர்த்துகல் எசுப்பானியாவுடன் ஒன்றிணைந்திருந்ததுடன் எசுப்பானிய ஆக்கிரமிப்புக்கு கப்பல்களையும் வழங்கியது. 1755ல் அதன் தலைநகரைத் தாக்கி அழித்த பூகம்பத்தினாலும், நெப்போலியப் போர்களின் போதான முற்றுகை காரணமாகவும், 1822ல் அதன் மிகப்பெரிய குடியேற்றமான பிரேசிலை இழந்தமையாலும் இந்நாடு மிகவும் பலவீனமடைந்தது. 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 1950களின் பிற்பகுதி வரையான காலப்பகுதியில், கிட்டத்தட்ட 2 மில்லியன் போர்த்துக்கீசர் ஐரோப்பாவிலிருந்து பிரேசிலுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் புலம்பெயர்ந்தனர்.[1]

1910ல் இடம்பெற்ற புரட்சி காரணமாக முடியாட்சி ஒழிக்கப்பட்டது. ஊழல், தேவாலயம் மீதான ஒடுக்குமுறை, நாட்டின் மோசமான நிதிப்பற்றாக்குறை என்பவற்றுக்கிடையே 1926ல் ஏற்பட்ட இராணுவக் கலகம் காரணமாக சர்வாதிகார ஆட்சிமுறையொன்று நிறுவப்பட்டது. 1974ல் இன்னொரு கலகம் ஏற்படும் வரை இது நிலைத்திருந்தது. புதிய அரசாங்கம், மக்களாட்சிச் சீர்திருத்தங்களை மேற்கொண்டதுடன், 1975ல் போர்த்துகலின் அனைத்து ஆபிரிக்கக் குடியேற்றங்களுக்கும் விடுதலையளித்தது.

போர்த்துகல்லானது, வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு மற்றும் ஐரோப்பிய சுதந்திர வணிகக் கூட்டமைப்பு என்பவற்றின் உருவாக்கல் அங்கத்துவ நாடாகும். இது 1986ல் ஐரோப்பிய சமூகத்தில் (தற்போது ஐரோப்பிய ஒன்றியம்) இணைந்தது.

மேற்கோள்கள்

  1. "Portugal Seeks Balance of Emigration, Immigration". Migrationinformation.org (2002-08-09). பார்த்த நாள் 2010-08-22.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.