போர்ப் பிரகடனம்

போர்ப் பிரகடனம் அல்லது போர் சாற்றுதல் (Declaration of war) என்பது ஒரு நாடு முறைப்படி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளின் மீது போர் தொடுக்கப்போவதாக அறிவிக்கும் செய்கையாகும். இந்த அறிவிப்பு பொதுமக்கள் அல்லது நாடாளுமன்றத்துக்கு ஆற்றப்படும் உரையின் மூலமோ அல்லது முறைப்படி கையெழுத்திடப்படும் அரசாணையின் மூலமோ செய்யப்படலாம். சட்டப்படி யார் போர் சாற்றலாம் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடுகிறது. பொதுவாக நாட்டின் தலைவர் அல்லது அரசின் தலைவர் போர் சாற்றும் உரிமையைப் பெற்றுள்ளார். வேறு சில நாடுகளில் நாடாளுமன்றம் அந்த உரிமையைப் பெற்றுள்ளது. போர் சாற்றுதலுக்கான சர்வதேச நெறிமுறை 1907ம் ஆண்டு கையெழுத்தான ஹாக் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 11, 1941ல் ஹிட்லர் ரெய்க்ஸ்டாகில் அமெரிக்கா மீது போர் சாற்றுகிறார்

முறைப்படி போர் சாற்றும் வழக்கம் பழங்காலத்திலேயே நிலவியதற்கான சான்றுகள் உள்ளன. கி. மு ஏழாம் நூற்றாண்டு சுமேரிய காவியமான கில்கமெஷிலும் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டிலும் போர் சாற்றுதல் குறிப்பிடப்பட்டுள்ளது. புறநானூற்றின் ஒன்பதாவது பாடலான ”ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்” என்று தொடங்கும் பாடல் போர் சாற்றுதலைக் குறிப்பிடுகிறது. தற்காலத்தில் சர்வதேச சட்டப்படி, இரு நாடுகளிட்டையே போர் நிலவுகிறது என்பதன் அதிகாரப்பூர்வ ஏற்பே போர் சாற்றுதலாகும். அண்மைக் காலத்தில் தீவிரவாதம், சமச்சீரற்ற போர்கள் (asymmetrical wars) பரவியுள்ளதால் அதிகாரப்பூர்வ போர் சாற்றுதலின் முக்கியத்துவம் குறைந்துள்ளது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.