எதிர்ப்புப் போராட்டம்

எதிர்ப்புப் போராட்டம் (protest) என்பது சமூக, அரசியல், பொருளாதார உரிமை மறுப்புக்கள், வன்முறை, அதிகார கட்டுப்படுத்தல்கள், சுரண்டல்கள் போன்ற அநீதிகளைகளையோ அல்லது அநீதிகள் என்று தாம் கருதுபவற்றையோ தனி மனிதரோ அல்லது மனிதக் குழுக்களோ எதிர்க்கும் ஒரு வழிமுறை ஆகும். தெரிந்தோ தெரியாமலோ, திட்டமிட்டோ திட்டமிடாமலோ, வழக்கமாக இயங்கிவரும் கட்டமைப்புக்களின் தன்மை காரணமாகவோ இழைக்கப்படும் அநீதிகளுக்கு பொறுப்பான மனிதர்களையோ அல்லது கட்டமைப்புக்களையோ இனம்கண்டு, எதிர்த்து விடிவு பெற வேண்டிய அவசியம் ஒவ்வொரு மனிதருக்கும் அல்லது மனிதக் குழுக்களுக்கும் எழுகின்றது. அச்சந்தர்ப்பங்களில் அநீதி அம்சங்களை எப்படி எதிர்த்து நல்வழிப் படுத்துவது, அல்லது தவறுகளை உணர வைப்பது என்பது முக்கிய கேள்வியாக எழுகின்றது.

2014 இல் மாணவர்கள் நடத்திய எதிர்ப்புப் போராட்டம்

எதிர்ப்புப் போராட்ட வடிவங்கள்

எதிர்ப்பைத் தெரிவிக்க இரண்டு முக்கிய வழிமுறைகள் உண்டு. அவை:

  1. அறவழிப் போராட்டம்
  2. ஆயுதவழிப் போராட்டம்

அறவழிப் போராட்டம்

அறவழிப் போராட்டம் வன்முறை அற்ற போராட்ட வடிவங்களை வலியுறுத்துகின்றது. போராட்டத்தின் இலக்கு அநீதியை எதிர்ப்பது மட்டுமே. அதாவது, அதற்கு பொறுப்பான மனிதர்களின் தவறை உணரவைத்து மாற்றத்தைக் கொண்டுவரவது. அந்த மனிதர்களை பழிவாங்குவதோ, அல்லது தண்டனைக்கு உட்படுத்துவையையோ அறவழிப் போராட்டம் மைய இலக்காக கொள்வது இல்லை.

அறப்போராட்ட வழிமுறையில் அகிம்சை, சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை, புறக்கணிப்புமுக்கிய போராட்ட வடிவங்கள் ஆகும். அறப்போராட்ட வழிமுறைகள் அனேக மனிதர்கள் அடிப்படையில் நல்நோக்கு கொண்டவர்கள், அனைவரும் வேண்டிய பெற்று நல்வாழ்க்கை வாழ விரும்புவர்கள் என்ற நம்பிக்கையில் அமைந்தது.

ஆயுதவழிப் போராட்டம்

ஆயுதப் போராட்டம் வன்முறைப் போராட்டம் ஆகும். பொதுவாக இது அறவழிப் போராட்ட வடிவங்கள் பயனற்றவை என்று நடைமுறையில் உணரப்படும்போது, கடைசிக்கட்ட நடவடிக்கையாக அல்லது தற்காப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுவதாகவே கூறப்படுகின்றது. ஆயுதப்போராட்ட வழிமுறையில் மரபுவழிப் போர், கரந்தடிப் போர், பயங்கரவாதம் முக்கிய வடிவங்கள் ஆகும்.

தமிழ்ச் சூழலில் எதிர்ப்பு போராட்டம்

தமிழ்ச் சூழலில் எதிர்ப்பு போராட்டம் பற்றி விரிவான ஆய்வுகள் இதுவரை இல்லை. பக்தி இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், தலித் இயக்கங்கள், ஈழப் போராட்ட இயக்கங்கள் போன்றவை தமிழ்ச் சூழலில் எதிர்ப்பு போராட்டத்தின் வினையாக்கங்கள் எனலாம். இவை பெரும்பாலும் சமய, சமூக, அரசியல் அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்தன.

பொருளாதார பிரச்சினைகளை முன்வைத்த இடதுசாரி தமிழ் அமைப்புகள் தமிழ்ச்சூழலில் வலுப்பெறவில்லை. சுற்றுசூழல் பேணலை அல்லது பாதுகாப்பை முன்னிறுத்தும் அமைப்புகளும் தமிழ்ச்சூழலில் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை.

இவற்றையும் பார்க்க

  • எதிர்ப்புப் போராட்ட தலைப்புகள் பட்டியல்

வெளி இணைப்புகள்

தமிழ்நாடு தலித் போராட்ட முனைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.