பூலான் தேவி

பூலான் தேவி (Phoolan Devi, ஆகத்து 10, 1963 - சூலை 25, 2001), கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பிரபலக் கொள்ளைக்காரியும் பின்னாளில் அரசியல்வாதியுமாக இவர் அறியப்படுகிறார்.

பூலான் தேவி
பிறப்புஆகத்து 10, 1963(1963-08-10)
கோர்கா கா பர்வா, உத்தரப் பிரதேசம், இந்தியா
இறப்புசூலை 25, 2001(2001-07-25) (அகவை 37)
புது தில்லி, இந்தியா
பணிகொள்ளைக்காரி, அரசியல்வாதி
வாழ்க்கைத்
துணை
உம்மத் சிங்

பிறப்பும் இளமையும்

பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் ஒடுஇக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டி பிழைத்து வந்தது. பூலான்தேவிக்கு 4 சகோதரிகள். 11 வயதில் பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன்.

திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான். அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள். முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான். சிறிது காலம் பெற்றோர் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த பூலான்தேவிக்கு அங்கும் நிம்மதி பறிபோனது.

சம்பல் கொள்ளைக்காரி

இவர் உத்தரப்பிரதேசத்தின் தாழ்த்தப்பட்ட மல்லா இனப்பிரிவைச்சார்ந்தவர். அவ்வூரில் உயர்சாதிப்பிரிவினர்க்கும் தாழ்த்தப்பட்ட சாதிப்பிரிவினர்க்கும் நிகழ்ந்த இனவெறியர்களின் இன வேற்றுமை காராணமாகவும், அவர்களின் இழி செயல்களினாலும் கொள்ளைக்காரியாக மாறினார்.

பூலான்தேவியின் உறவினரான (மாமா) மையாதீன் என்பவன் பல வழிகளிலும் தொல்லை கொடுத்து வந்தான். ஒருநாள் அந்த கிராமத்தின் பணக்கார வகுப்பினர் பூலான் தேவியின் கற்பை அவளது பெற்றோர்கள் எதிரிலேயே சூறையாடினார்கள். வாழ்க்கையில் வெறுப்படைந்த பூலான் தேவி தனது சகோதரிகளுடன் ஊரைவிட்டே ஓடினாள்.

அவளுடைய பெற்றோரை காவலர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும் மாமன், பழி தீர்க்கும் படலத்தை கைவிடவில்லை. கொள்ளைக்காரர்களுடன் பூலான்தேவிக்கு தொடர்பு இருப்பதாக கிராம மக்களை தூண்டிவிட்டு புகார் செய்தான். இதனால் காவல் பிடியில் பூலான்தேவி சிக்கினாள். சட்டம், நீதியை பாதுகாக்க வேண்டியகாவல் துறையினர் பூலான்தேவியிடம் நெறிமுறை தவறி நடந்தனர். கற்புக்கு மீண்டும் களங்கம் விளைவித்தனர். இப்படி பூலான்தேவியின் இளம் வயதில் இருந்த வறுமை, பசி, பட்டினி, பலாத்காரம், காவல் அடக்கு முறை போன்றவை மீண்டும் மீண்டும் தலைதூக்கின. எனவே இவற்றையெல்லாம் எதிர்த்து போராடவேண்டும் என்ற துணிச்சலை உள்ளத்தில் சவாலாக ஏற்றாள்.

பாலியல் கொடுமை

பூலான்தேவி மீதான வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 15 வயதில் கொடூர தாக்குதல்களுக்கு அவள் ஆளாகி இருப்பதை உணர்ந்த நீதிபதி கருணை காட்டி அவளை விடுவிக்க உத்தரவிட்டார். ஓராண்டுக்குப் பின் திடீரென்று ஒருநாள் பாபு குஜார்சிங் என்ற கொள்ளைக்காரன் பூலான்தேவியை கடத்திச்சென்றான். அந்த கொள்ளைக் கும்பலில் இருந்தபோதுதான் பூலான்தேவி குதிரை ஏற்றம் மற்றும் துப்பாக்கியால் குறி தவறாமல் சுடும் பயிற்சியை பெற்றாள்.

சம்பல் கொள்ளைக் காரி

அந்த கொள்ளை கும்பலில் இருந்த விக்ரம்மல்லா என்பவன் அவளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தான். அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கொள்ளை கும்பல் தலைவன் பாபு குஜர்சிங் கொல்லப்பட்டான். விக்ரம் கொள்ளைக்கூட்டத்துக்கு தலைவனாகி பூலான்தேவியை திருமணம் செய்தான். இந்த சந்தர்ப்பத்தில் பூலான்தேவி தன்னுடைய முதல் கணவன் புட்டிலாலை சந்தித்து பிரம்பால் அவனை அடித்து தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டாள். இவரை ஒரு கிராமமே வரிசையில் நின்று பாலியல் கொடுமைப்படுத்தியது. துப்பாக்கிசுடுவதில் கொள்ளைக் கூட்டத்தாரிடம் பயிற்சிப் பெற்ற இவர் கொள்ளைக்காரியாக மிகுந்த ஆரவாரத்துடன இந்தியாவில் சம்பல் பள்ளத்தாக்கில் கொள்ளைக்கூட்டத் தலைவியாக வலம் வந்தவர். இதனால் சம்பல் கொள்ளைக்காரி என்று அழைக்கப்பட்டார். விக்ரம்மல்லா உதவியோடு தனக்கு தீங்கு செய்தவர்களை ஒருவர் பின் ஒருவராக தீர்த்து கட்டினாள். ஆனாலும் அவளுடைய ஆத்திரம் தணியவில்லை.

இந்த நிலையில் 1980_ம் ஆண்டு ஆகஸ்டு 13_ந்தேதி கொள்ளை கோஷ்டிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் விக்ரம் மல்லா கொல்லப்பட்டான். இதனால் பூலான்தேவி மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டாள். தாகூர் வகுப்பைச் சேர்ந்த சிலர் பூலான்தேவியை சிறை பிடித்து சென்றனர். அவளது கற்பை சூறையாடினார்கள். பிறகு கிராமவாசிகள் உதவியுடன் காட்டுக்குள் தப்பித்துச் சென்றாள், பூலான்தேவி.

விக்ரம் மல்லாவை கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்க துடித்த பூலான்தேவி, மான்சிங் என்ற கொள்ளைக்காரனுடன் இணைந்து ஒரு புதிய கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கினாள். 1981_ம் ஆண்டு பிப்ரவரி 14_ந்தேதி வடக்கு டெல்லி அருகேயுள்ள பிக்மாய் என்ற கிராமத்துக்கு தனது கொள்ளை கோஷ்டியுடன் சென்றாள். விக்ரம் மல்லாவை கொன்றவர்களுக்கு அந்த கிராமவாசிகள் தஞ்சம் அளித்தனர் என்று குற்றம் சாட்டினாள். அந்த கிராம மக்கள் "எங்களுக்கு எதுவுமே தெரியாது" என்று எவ்வளவோ கெஞ்சியும் பூலான்தேவி அந்த கிராமவாசிகளை வரிசையில் நிற்க வைத்தாள். குருவியை சுடுவதுபோல் சுட்டாள். அதில் 22 பேர் துடிதுடித்து செத்தார்கள். 8 பேர் கை_கால்களை இழந்தார்கள்.

இந்த கொலை சம்பவம் இந்தியா முழுவதையும் உலுக்கியது. பூலான்தேவியை பற்றிய செய்தி நாடு முழுவதும் பரவியது. அது மட்டுமல்ல உத்தரபிரதேச அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச முதல் மந்திரியாக இருந்த வி.பி.சிங் 1982_ல் பதவியை ராஜினாமா செய்தார். உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய இரு மாநில போலீஸ் படைகளும் உஷார் படுத்தப்பட்டன. காடுகளில் புகுந்து பூலான்தேவியை வேட்டையாடினார்கள். ஆனாலும் அவள் சிக்கவில்லை.

பூலான்தேவியை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. போலீஸ் கண்ணில் படாமல் திரிந்த பூலான்தேவி அப்போதும் தனது எதிரிகளை தீர்த்துக்கட்டியபடியே இருந்தாள். நேபாளத்துக்கு அவள் தப்பி ஓடிவிட்டதாக பேசப்பட்டது. ஆனாலும் கொஞ்ச நாளிலேயே அவள் உ.பி.க்குள் திரும்பினாள்.1982_ம் ஆண்டு டிசம்பரில் ஜலான் மாவட்டத்தை சேர்ந்த 3 மிராசுதாரர்களை கடத்திச்சென்றாள். இதுவே அவள் கடைசியாக அரங்கேற்றிய தாக்குதலாகும்.

கைதும் விடுதலையும்

பல கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட பூலான்தேவி, 1983_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12_ந்தேதி மத்தியபிரதேசத்தில் அப்போதைய முதல்_மந்திரி அர்ஜூன்சிங் முன்னிலையில் சரண் அடைந்தாள். முதலில் குவாலியர் ஜெயிலில் பூலான்தேவி அடைக்கப்பட்டாள். பின்னர் புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லி திகார் ஜெயிலுக்கு மாற்றப்பட்டாள். 11 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயில் தண்டனை அனுபவித்ததும் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று பூலான்தேவி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்து இருந்தாள். இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் பதவி ஏற்ற முலாயம்சிங் யாதவ் தலைமையிலான கூட்டணி அரசு, பூலான்தேவிக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற்றது. மத்தியபிரதேச மாநிலத்திலும் அவள் சம்பந்தப்பட்ட வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. இந்த சூழ்நிலையில் பூலான் தேவியை பிணையத்தில் விடுதலை செய்து உச்ச நீதிமன்ற கோர்ட்டு நீதிபதிகள் 18_2_1994 அன்று உத்தரவிட்டனர். விடுதலையாகும் பூலான் தேவிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருந்தனர்.

மக்களவை உறுப்பினர்

கொள்ளைக்காரியாக இருந்து மனம் திருந்தி சரண் அடைந்த பூலான்தேவி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, 2 முறை "எம்.பி" ஆனார். 1991_ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த சமயத்தில் பூலான்தேவி சிறையில் இருந்தார். என்றாலும் சிறையில் இருந்தபடியே டெல்லி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.

நடிகர் ராஜேஷ் கன்னாவை (காங்.) எதிர்த்து நின்றார். ஆனால் பூலான் தேவிக்கு வெற்றிக்கனி கிட்டவில்லை. தோல்வி அடைந்தார். இருப்பினும் அரசியல் மீது அவருக்கு ஒரு கண் இருந்தது. 1994_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலை ஆனார். 1994_ம் ஆண்டு ஜுலை மாதம் 5_ந்தேதி உமத்சிங் என்பவரை பூலான்தேவி திருமணம் செய்து இல்லற வாழ்வில் நுழைந்தார்.

சமூக சேவையில் அவருக்கு அதிக ஆர்வம் உண்டாகியது. இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக ஒரு சேவை அமைப்பை தொடங்கினார். பின்னர் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். 1996_ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சா பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார். பழைய வழக்குகள் பூலான் தேவிக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தன. கோர்ட்டு படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டியது இருந்தது. இதற்காக பாராளுமன்றம் முன்பு தர்ணா நடத்தினார். பிறகு 1999_ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதே மிர்சாபூர் தொகுதியில் 2_வது முறையாக நின்று அபார வெற்றி பெற்றார்.

பூலான்தேவி 2,90,849 ஓட்டுகளும், அவரை எதிர்த்த பா.ஜனதா வேட்பாளருக்கு 84,476 ஓட்டுகளும் கிடைத்தன. அதாவது, பூலான்தேவி சுமார் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தார். "நான் பூலான்தேவி" என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாறு பற்றிய சுய சரிதையை பூலான்தேவி எழுதினார்.

"பாண்டிட் குயின்" சினிமா படம் வெளிவந்தபிறகு சர்வதேச அளவில் பேசப்பட்டார்.

படுகொலை

2001 சூலை 25 இல், பூலான் தேவி புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மகிழுந்தில் ஏறிப் புறப்படும் போது முகமூடி அணிந்த மூவரால் சுடப்பட்டு இறந்தார். அவரது தலையில் மூன்று தடவைகளும், உடம்பில் இரண்டு தடவைகளும் சுடப்பட்டன. சுட்டவர்கள் மாருதி வாகனத்தில் ஏறித் தப்பிச் சென்றனர்.[1] உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாலும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுத் தேடப்பட்டு வந்த சேர் சிங் ராணா என்பவர் பின்னர் காவல் துறையினரிடம் சரணடைந்தார்.[2] பெக்மாய் படுகொலைகளில் பூலான் தேவி உயர் வகுப்பைச் சேர்ந்த நபர்களைக் கொலை செய்தமைக்காக பழி வாங்கவே தாம் கொலை செய்ததாக ராணா கூறினார்.[3]. இது தொடர்பான வழக்கில் ராணா குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து அவருக்கு 2014 ஆகத்து 14 இல் நீதிமன்றம் ஆயுள்தண்டனையும், அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.[4]

மேற்கோள்கள்

  1. "The queen is dead". The Guardian. 26 சூலை 2001. http://www.guardian.co.uk/g2/story/0,3604,527406,00.html. பார்த்த நாள்: 9 ஆகத்து 2012.
  2. "Profile of Sher Singh Rana". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 27 சூலை 2001. http://timesofindia.indiatimes.com/Profile-of-Sher-Singh-Rana/articleshow/1154821372.cms. பார்த்த நாள்: 9 ஆகத்து 2012.
  3. "Man arrested for murder of 'Bandit Queen'". த டெலிகிராப்]]. 27 சூலை 2001. http://www.telegraph.co.uk/news/1335484/Man-arrested-for-murder-of-Bandit-Queen.html. பார்த்த நாள்: 9 ஆகத்து 2012.
  4. "Profile of life sentences". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 ஆகத்து 2014. http://timesofindia.indiatimes.com/india/Life-sentence-to-Sher-Singh-Rana-for-killing-Phoolan-Devi/articleshow/40249822.cms. பார்த்த நாள்: 14 ஆகத்து 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.