பூமேடை ராமையா

’பூமேடை’ எஸ். ராமையா (1924-1996) நாகர்கோயிலில் வாழ்ந்த இந்திய சுதந்திரப்போராட்ட வீரர். குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்திலும் பங்கேற்றார். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியல் போராளி

வாழ்க்கை

பூமேடை ராமையா 1924 ல் நாகர்கோயிலை அடுத்த கொட்டாரம் என்ற ஊரில் பிறந்தார். சிறுவயதிலேயே இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டார். இருமுறை சிறைச்சென்றிருக்கிறார். 1953ல் குமரிமாவட்டத்தை தமிழகத்துடன் சேர்க்கும் போராட்டத்திலும் பங்குபெற்றார்.

கடைசிவரை கட்சி அரசியலுக்கும் அதிகார அரசியலுக்கும் அப்பாற்பட்டவராக விளங்கினார். எந்த அமைப்புடனும் சமரசம் செய்துகொள்ளாமல் போராடினார். ஆகவே அவர் தனிமனிதராகவே இருந்தார். நாகர்கோயிலிலும் கொட்டாரத்திலும் சொத்துக்கள் வைத்திருந்த ராமையா அவற்றை அரசியல் செயல்பாடுகளில் இழந்தார். வறுமையுற்று 1996ல் காலமானார்

ராமையா வள்ளலாரிடம் ஈடுபாடு கொண்டிருந்தார். வள்ளலாரின் ஜோதி வழிபாட்டை பின்பற்றியவர். வேறு மதநம்பிக்கைகள் இருந்ததில்லை. பூமேடை என்பது அவர் தனக்குச் சூட்டிக்கொண்ட புனைபெயர். தன் கொள்கைகளை பிரச்சாரம் செய்ய ‘மெய்முரசு’ என்ற சிறு இதழை நடத்திவந்தார்

பங்களிப்பு

பூமேடை ராமையா ஒரு தனிநபர் போராளி. தொடர்ச்சியாக நாகர்கோயிலில் அதிகார வர்க்கத்தின் ஊழல், பொறுப்பின்மை, கட்சி அரசியலின் கீழ்மைகள் ஆகியவற்றை பிரச்சராம் செய்துகொண்டே இருந்தார். அதற்கு அவர் கையாண்ட வழிமுறை தனிநபர் பொதுக்கூட்டம். அவரே சொந்த செலவில் சுவரொட்டிகள் அச்சிட்டு நகரெங்கும் ஒட்டுவார். அவரே தன் பழைய சைக்கிளில் ஒரு சிறிய கள்ளிப்பெட்டி மேஜை, சிறிய ஒலிப்பெருக்கி கருவி , எரிவாயுவிளக்கு ஆகியவற்றுடன் நாகர்கோயிலில் உள்ள நகர்மன்ற திடல், அசிசி வளாக மைதானம், வஞ்சியாதித்தன் புதுத்தெரு, வடிவீஸ்வரம் தெரு போன்ற இடங்களுக்கு மாலை ஆறு மணியளவில் வருவார். சுமார் ஒருமணிநேரம் பேசுவார்.

பூமேடை ராமையாவின் பேச்சு நக்கலும் கிண்டலும் கோபமும் கலந்ததாக இருக்கும். திருக்குறளில் இருந்தும், வள்ளலாரின் படைப்புகளில் இருந்தும் நிறைய மேற்கோள்கள் காட்டுவார். தனிப்பட்டமுறையில் எவரையும் தாக்க மாட்டார். ஆபாசமோ விரசமோ இருக்காது. அவருக்கென்று ஒரு கூட்டம் எப்போதும் இருந்தது. சுமார் இருநூறு பேர் வரை அவர் கூட்டங்களுக்கு வருவதுண்டு.

ராமையா பொதுவாக அரசியல்வாதிகளால் ஒரு வகையான கோமாளியாகவே சித்தரிக்கப்பட்டார். காந்தி தொப்பியுடன் கதர் அணிந்து அவர் நடமாடுவதே கிண்டலுக்குரியதாக காட்டப்பட்டது. அவருக்கு எவருமே பொறுப்பாக பதில் அளித்ததில்லை. அவர் அதற்காக கவலைப்பட்டதும் இல்லை. நாற்பது ஆண்டுகள் வருடத்திற்கு நூறு கூட்டம் வீதம் போட்டிருக்கிறார்.

அவர் புறக்கணிக்கப்பட்டாலும் அவரது கூட்டங்களால் பல ஊழல்கள் வெளியே கொண்டுவரப்பட்டன. நாகர்கோயில் கடை ஊழியர்கள் சங்கம் அமைப்பதற்கும், நாகர்கோயில் துப்புரவு ஊழியர்களின் சங்கச் செயல்பாடுகளுக்கும் அவர் பெரிதும் காரணமாக அமைந்தார். அவர் நாகர்கோயிலின் மனசாட்சி என்ற எண்ணம் அவர் மறைந்த பின்னரே உருவாகியது. பூமேடை எவராலும் கௌரவிக்கப்படாமல், எவராலும் மதிக்கவும் படாமல் மறைந்தார்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.