பூப்பு

பூப்பு என்பது வாழ்வின் அடிப்படைக் கூறுகளில் மிகமுக்கியமான ஒன்றான இனவிருத்திக்கு ஏற்ற வகையில் உடல் பக்குவப்படும் ஒரு நிலையாகும். இந்தப் பக்குவம் ஆண், பெண் இருபாலாருக்குமே ஏற்படுகின்றது. இதன் போது உடல், உள ரீதியான பல மாற்றங்கள் இருபாலாரிடமும் ஏற்படுகின்றன. பூப்புக்குரிய இந்த மாற்றங்கள் உடனடியாக நிகழ்ந்து விடுவதில்லை. படிப்படியாகத்தான் நிகழ்கின்றன. இந்த மாற்றங்கள் பெண் குழந்தைகளிடம் அவர்களது 8-10 வயதுகளிலும், ஆண் குழந்தைகளிடம் 10-12 வயதுகளிலும் ஏற்படத் தொடங்குகின்றன.

ஆண் பெண் வேறுபாடுகள்

பூப்பெய்தும் காலம்

ஒரு பெண்குழந்தையில் 8-10 வயதுகளில் பூப்பு அடைவதற்குரிய மாற்றங்கள் உடல், உள ரீதியாக ஏற்படத் தொடங்குகின்றன. அவளது கர்ப்பப்பையிலிருந்து பெண் உறுப்பின் வழியாக முதன்முதலாக உதிரம் வெளியேறும் நாள் அவளது பூப்பெய்தும் காலத்தின் இறுதி நாளாகக் கொள்ளப்படுகிறது. முந்தைய காலங்களில் ஒரு பெண்ணுக்கு முதல் உதிரப்போக்கு ஏற்படும் நாள் 12 இலிருந்து 16 - 17 வயதுக்குள்ளாக இருந்தது. இன்றைய காலகட்டத்தில் இந்த முதல் உதிரப்போக்கு 10 இலிருந்து 16 வயதுக்குள்ளாக நடந்து விடுவதாகக் கணிக்கப் படுகிறது. இன்றைய நிலையில் ஒரு பெண் பூப்பெய்துதலுக்கு உரிய சராசரி வயது 12.5.

ஒரு ஆண் குழந்தையில் 12-14 வயதுகளில் பூப்பு அடைவதற்குரிய மாற்றங்கள் உடல் உள ரீதியாக ஏற்படத் தொடங்குகின்றன.

உதிரப்போக்கு

சாதாரணமாக 3 இலிருந்து 7 நாட்கள் வரை உதிரப்போக்கு இருக்கும். வெளியேறும் உதிரத்தின் அளவு 20 இலிருந்து 80மி.லீற்றர் வரை இருக்கும். உதிரப்போக்கின் சராசரி அளவு 50மி.லீற்றர். தினமும் அரை மில்லிகிராம் முதல் ஒரு மில்லிகிராம் வரை இரும்புச் சத்தும் உதிரத்துடன் வெளியேறும்.

உள்ளே நடைபெறும் மாற்றங்கள்

பூப்பெய்தலுக்கான மாற்றங்கள் கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் மட்டும் ஏற்படுவதில்லை. மூளையில் இருந்து GNHR என்ற ஹோர்மோன் சுரந்து அது மூளையின் அடிப்பகுதியில் உள்ள பிட்யூட்டரி(Pitutary) என்ற சுரப்பியை தூண்டி, அந்த சுரப்பியிலிருந்து சுரக்கும் FSH(Follicular Stimulating Hormone) என்கின்ற சினைவளர்ப்பு ஹோர்மோனை நேரடியாக இரத்தத்தினுள் சுரந்து விடுகிறது. இந்த ஹோர்மோன் சினைபையினுள் போய் அங்குள்ள திசுவைவைத் தூண்டியதும், உடனே அது, ஈஸ்டிரஜன் (Estrogen) என்கின்ற இன்னொரு ஹோர்மோனை உற்பத்தி செய்து விடுகிறது. இந்த ஈஸ்டிரஜன் கர்ப்பப்பையினுள்ளும், சினைப்பையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தும். அதாவது மூளையில் ஒரு பகுதியிலிருந்து வரும் அந்த ஜி.என்.ஆர்.ஹெச் (GNHR) ஹோர்மோன்தான் அத்தனை நிகழ்வுகளுக்கும் மூலகாரணம். இது குழந்தையாக இருக்கும்போதே சுரக்க ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிறது. முதலில் அவ்வப்போது குறிப்பாக இரவு மட்டுமே சுரக்கும். பின்பு இடைவெளி குறைந்து அளவு அதிகமாகி 90 நிமிடத்துக்கு ஒரு முறை உதிரத்தத்தில் கலக்கும் அளவுக்கு சுரக்க ஆரம்பிக்கும். அப்போது சினைப்பை வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அதன் போதுதான் முதல் உதிரப்போக்கு ஏற்படத் தொடங்குகிறது.

வெளியில் தெரியும் மாற்றங்கள்

பெண் குழந்தைகளில் பூப்பெய்தும் காலகட்டத்தில் (8 இலிருந்து 13 வரையுள்ள வயது) முதல் மாற்றமாக மார்பகங்கள் வளர்ச்சியடைய ஆரம்பிக்கும். அடுத்து ஒரு வருடத்துக்குள் பிறப்புறுப்பு மீது உரோமம் வளர ஆரம்பிக்கும். உடல் மெருகு ஏறி, வேகமாக வளரும். இடுப்பு எலும்பின் வளர்ச்சி அதிகமாகும். இடுப்பு சற்று விரிவடையும். இடுப்பு பகுதியில் சதைப் பற்று சற்று அதிகமாகும். இறுதியாக அக்குளில் முடி வளரத் தொடங்கும். அதன்பின் இந்த மாற்றங்களின் வெளிப்பாடாக உதிரம் வெளியேறும். இந்தப் பருவத்தில் ஒரு பெண் அதே வயதுடைய ஆணை விட வளர்ச்சி அடைந்தவளாகக் காணப்படுவாள். இதன் போதான வளர்த்தி எல்லோரிடமும் ஒரே மாதிரி அமைவதில்லை. இது குடும்ப அலகுகள், போசாக்கு உணவுகள், உடற்பயிற்சி என்பவற்றைப் பொறுத்து மாறுபடும்.

ஆண் குழந்தைகளில் பெண் குழந்தைகள் போலல்லாது சடுதியாகவே உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. சராசரியாக பதின்மூன்று வயதாயுள்ளபோது விதைகள் வளர்ச்சியுறத் தொடங்கும். ஆண்குறி சற்று பெருத்து விரிவடையும். ஆண்குறியின் தோலும் விதைப்பையும் கருநிறம் அடையும். ஆண்குறியின் அடிப்பகுதியிலும் விதைப்பையின் மீதும் உரோமம் வளர ஆரம்பிக்கும். உடல் பெண்குழந்தைகளை விட வேகமாக உயரும். தோள்கள் அகலும். தொண்டைக்கு அருகிலுள்ள சுவாசக்குழாய் விசாலமாகி குரல் கரகரப்பாக கடினமாக மாறும். தசைகள் வளரும். முகத்தில் உரோமம் வளரும். மூக்கு பெரிதாகும். உடல் மெலியும். கால்கள் பெருக்கும்.

சுழற்சி

உரிய காலத்தில் முதல் உதிரப்போக்கு வந்து விடுவது ஒரு பெண் ஆரோக்கியமாக இருக்கிறாள் என்பதையும் அவள் உடல் பக்குவப்பட்டு விட்டது என்பதையும் குறிக்கிறது. அதன் பின் இந்த உதிரப்போக்கு ஒரு சுழற்சி முறையில் நடக்கத் தொடங்கும். சாதாரணமாக இச் சுழற்சி 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும். இதுவே மாதவிடாய் எனப்படுகிறது. இந்த சுழற்சிக்குரிய நாட்கள் பெண்ணுக்குப் பெண் வேறுபடலாம். சில பெண்களுக்கு 21 இலிருந்து 35நாட்களுக்கு ஒரு முறையென்று மாதவிடாய் வருவதும் உண்டு. மாதவிடாயின் போது 3இலிருந்து 7நாட்கள் வரை உதிரப்போக்கு இருக்கும். சில பெண்களுக்கு முதல் உதிரப்போக்கு உரிய காலகட்டத்தில் வந்திருந்தாலும் சுழற்சி நேர்சீராக வர ஒரு வருடம் தேவைப்படுவதுண்டு.

கலாசாரம்/பண்பாட்டு நோக்கல்கள்

பூப்பெய்தல் நிகழ்வு ஒவ்வொரு சமூகத்தினராலும் ஒவ்வொரு விதமாக வரவேற்கப்படுகிறது. அனேகமான எல்லாச் சமூகத்தினருமே இந்நிகழ்வை ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதுகிறார்கள். ஒரு பெண் பூப்படைந்தால்தான் அவள் கருத்தரிப்பதற்கு உரிய பருவத்தை அடைந்து விட்டாள் என்பதே இதற்குரிய அடிப்படைக் காரணம். 15வயதாகியும் ஒரு பெண் பூப்படையவில்லை என்றால் அவள் குடும்பத்தினர் அதையிட்டுக் கவலைப் படத் தொடங்கி விடுவார்கள். 17வயதாகியும் ஒரு பெண் பூப்படையவில்லை என்றால் அது யோசிக்க வேண்டிய விடயமே. அதன் பின் மருத்துவரை நாட வேண்டியது அவசியம்.

  • பழங்குடியினர் பூப்பெய்தலை வாழ்க்கையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகக் கருதுகின்றார்கள். அவர்கள் பூப்பெய்திய பெண்ணை சில நாட்களுக்குத் தனி இடத்தில் ஒதுக்கி வைப்பார்கள். அவளை ஓடைகளில் குளிக்க வைப்பார்கள். வேறு ஆடைகளை உடுத்தச் செய்வார்கள். முடிந்தால் புத்தாடை அணிவிப்பார்கள்.
  • சில பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பூப்பெய்திய பெண்ணை கிழக்குத் திசையில் கதிரவனப் பார்க்கும் வகையில் அமரச்செய்து நீருற்றி குளிக்கச் செய்வார்கள். நல்லெண்ணெயில் கோழிமுட்டையை பச்சையாகக் கலந்து பூப்பெய்திய பெண்ணுக்குக் கொடுப்பார்கள். பதின்மூன்று நாட்கள் கழித்து பச்சரிசி மாவில் வெல்லம் கலந்து (பச்சமாவு என்று அழைப்பர்) பருவமடைந்த பெண்ணுக்கும் மற்றும் அனைவருக்கும் கொடுப்பார்கள். அன்று முதல் தங்கள் கூட்டத்தோடு அழைத்துக் கொள்வார்கள்.
  • ஆபிரிக்கா, அரேபியா போன்ற நாடுகளில் பெண் பூப்பெய்திய உடனே, அந்த வீட்டின் வாசலில் ஒரு கொடியைக் கட்டிப் பறக்க விடுவார்கள். அந்தக் கொடியைக் கவனித்து விட்டு, பெண் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் வரிசை கட்டி வருவார்களாம்.
  • ஆபிரிக்கா சுலு (Zulu) இனத்தில் பெண் பூப்பெய்திய நாளில் ஆடு பலியிடுதல் நடக்கும். அந்தப் பெண் அவளை ஒத்த பெண்களுடன் காலையில் எழுந்து நதியில் நீராடி வந்த பின் அவள் உடல் எங்கும் சிவந்த களிமண்ணைப் பூசுவார்கள். பூப்படைந்த அந்த நாட்களில் சில உணவுகளை அவள் விலக்க வேண்டும். வயதானவர்களும் அவளைப் போல ஏற்கனவே பூப்பெய்திய பெண்களும், பூப்படைந்த பெண்ணின் உடல் மாற்றங்களையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக் கொடுப்பார்கள்
  • உரூசியாவில் பூப்பெய்திய பெண்ணின் முகத்தில் அவளது தாய் ஓங்கி அடிப்பாள். அவள் அடித்த அடியில் பெண்ணின் கன்னங்கள் சிவந்து விடுவதை அவர்கள் நல்ல அறிகுறியாக நினைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.
  • நேபாளத்தில் பெண் பூப்படைந்தவுடன் அவளை ஒரு இருட்டறையில் அடைத்து வைப்பார்கள். அவள் வெளியில் வரவோ சூரிய ஒளியைப் பார்க்கவோ கூடாது. அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் திருமணத்திற்கு தகுதி உடையவளாகி விட்டாள் என்பதை உணர்த்தும் வகையில் அவளுக்கும் சூரிய பகவானுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும்.
  • ஜப்பானில் பெண்ணின் பெருமைக்குரிய சடங்காக பூப்பெய்தல் நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். விருந்துக்கு அழைக்கும் போது விருந்துக்கான காரணத்தைச் சொல்வதில்லை. சிவந்த அரிசியும், பீன்ஸ்சும் நிறைந்த பெரிய தட்டை பூப்படைந்த பெண்ணின் முன்னால் வைத்திருப்பதன் மூலம் விருந்துக்கும் கொண்டாட்டத்திற்குமான காரணம் சொல்லப்படும்.

பூப்படையும் தன்மை

மனிதர்களைப் போல, சிம்பன்சி, பொனோபோ போன்ற மனிதகுரங்குங்களுக்கும், பூப்படையும் தன்மையும், மாதாமாதம் மாதவிடாய் உண்டாகும் தன்மையும் உண்டு.

பூப்பு (பருவமடைதல்) ஒரு அங்கியானது தனது இனத்தை தோற்ருவிக்ககூடிய பருவத்தினை எட்டுதல். பெரும்பாலும், மனிதர்களிடையே பூப்பெய்தல் என்பது ஆண்களில் 15 - 20 வயதுகளிலும் பெண்களில் 13 - 18 வயதுகளிலும் நிகழலாம்.

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.