பூகத் மாநிலம்

பூகத் (Phuket, தாய்: ภูเก็ต) தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு மாநிலம் (சங்வாட்) ஆகும். இதில் தாய்லாந்தின் மிகப்பெரும் தீவான பூகத் தீவும் மேலும் 32 சிறு தீவுகளும் அடங்கும்.[3] தாய்லாந்தின் மேற்கு கடலோரத்தில் அந்தமான் கடலில் இந்த மாநிலம் அமைந்துள்ளது. பூகத் தீவை வடக்கிலுள்ள பாங் இங்கா மாநிலத்துடன் பாலமொன்று இணைக்கின்றது. கிழக்கில் பாங் இங்கா விரிகுடாவைக் கடந்து கிராபி மாநிலம் உள்ளது.

பூகத்
ภูเก็ต
மாநிலம்

சின்னம்

பூகத் மாநிலத்தைக் குறிப்பிடும் தாய்லாந்தின் நிலப்படம்
நாடு தாய்லாந்து
தலைநகரம்புக்கிட் நகரம்
அரசு
  ஆளுநர்மைத்திரி இந்துசூட் (அக்டோபர் 2012 முதல்)[1]
பரப்பளவு
  மொத்தம்576
பரப்பளவு தரவரிசை75வது
மக்கள்தொகை (2014)
  மொத்தம்378[2]
  தரவரிசை68வது
  அடர்த்தி1
  அடர்த்தி தரவரிசை6ஆவது
நேர வலயம்ICT (ஒசநே+7)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுTH-83

பூகத் மாநிலத்தின் பரப்பளவு 576 சதுர கிமீ (222 ச மை) ஆகும்; இது சிங்கப்பூர் பரப்பளவை விட சற்றேக் குறைவானதாகும். இந்த மாநிலம் தாய்லாந்தின் இரண்டாவது சிறிய மாநிலமாகும். முன்பு வெள்ளீயமும் இயற்கை மீள்மமும் முதன்மையான வணிகப் பொருட்களாக இருந்தன. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான வணிகப் பரிமாற்றத்தில் முதன்மையான வணிகமாற்று மையமாக விளங்கியது. போர்த்துகேய, பிரான்சிய, டச்சு, ஆங்கில நாட்டுக் கப்பல்களின் பயணக் குறிப்பேடுகளில் அடிக்கடி பூகத் குறிப்பிடப்படுகின்றது. தற்போது இதன் முதன்மையான வருவாய் ஈட்டும் தொழிலாக சுற்றுலாத் துறை உள்ளது.

பூகத் முத்திரையின் காரணம்

பூகத் முத்திரையில் தாவ் தெப் கசாத்ரி & தாவ் சிறீ சுன்தோன் நாயகியர் நினைவகம் பொரிக்கப்பட்டுள்ளது. இந்த சீமாட்டிகள் கிபி 1785இல் இம்மாநிலத்தை பர்மியர்களிடமிருந்து காப்பாற்றினர்.[4] 1785இல் மியான்மர் துருப்புக்கள் பூகத்தை தாக்கத் திட்டமிட்டிருந்தனர். பூகத்தின் படைத்துறை தலைவர் அப்போதுதான் உயிரிழந்திருந்தார். எனவே பூகத்தை தாக்க இதுவே சரியான தருணம் என பர்மியத் துருப்புக்கள் நினைத்தனர். ஆனால் இறந்த ஆளுநரின் மனைவி குன் ஜானும் அவரது சகோதரி குன் மூக்கும் தீவின் பெண்களை துருப்புகளின் உடையணிந்து நகர சுவர்களில் சுடுவதற்குத் தயாராக நிற்க ஆணையிட்டனர். இதனால் எதிரிப்படைகள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதாக எண்ணிய பர்மியத் துருப்புக்கள் தங்கள் திட்டத்தை கைவிட்டனர். உணவுப் பற்றாக்குறையால் பின்வாங்கவும் செய்தனர். இந்த இரு பெண்களும் உள்ளூர் நாயகிகள் ஆயினர். அவர்களுக்கு, தாவ் தெப் கசாத்ரி மற்றும் தாவ் சிறீ சுன்தோன், என்ற கௌரவப் பட்டங்களை அரசர் முதலாம் இராமா வழங்கினார்.[3]

இந்த முத்திரை வட்டமாக சுற்றிலும் க–நோக் வரிகள் சூழ உள்ளன; இவை பூகத் மாநில தலைவர்களின் வீரத்தைக் காட்டுவதாக உள்ளது.[5] இந்த முத்திரை 1985 முதல் புழக்கத்தில் உள்ளது.

வரலாறு

அரசர் நராய் முன்னிலையில் பிரான்சிய தூதர் செவாலியே டெ சோமோன்

17வது நூற்றாண்டில் டச்சு, இங்கிலாந்து நாட்டு வணிகர்கள் பூகத் தீவுடன் வணிகம் செய்யப் போட்டியிட்டனர்; 1680களுக்குப் பிறகு இவர்களுடன் பிரான்சு நாட்டு வணிகர்களும் போட்டியிட்டனர். அப்போது இத்தீவு "ஜங் சிலோன்" எனப்பட்டது. இங்கிருந்த வெள்ளீயம் இவர்களைப் பெரிதும் கவர்ந்தது. செப்டம்பர் 1680இல் இங்கு வந்த பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல் தனது முழு சரக்குக் கொள்ளளவிற்கும் வெள்ளீயத்தை ஏற்றிச் சென்றது.

ஓரிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சயாமிய அரசர் நராய் பூகத்திற்கு ஆளுநராக பிரான்சிய மருத்துவர் ரெனெ சார்போன்னொயை நியமித்தார். சார்போன்னொ 1685 வரை ஆளுநராக இருந்தார்.[6]

1685இல் பூகத்தின் வெள்ளீயத்தில் பிரான்சிற்கு முழுமையான உரிமை வழங்கினார்.[7] பிரான்சியத் தூதர் சோமோனின் நண்பர் சேயுர் டெ பில்லி ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[8] இருப்பினும் 1688இல் நடந்த சயாமின் புரட்சிக்குப் பின்னர் பிரான்சிய ஆளுநர் வெளியேற்றப்பட்டார். ஏப்ரல் 10, 1689இல் டெசுபார்கெசு தலைமையில் பிரான்சு பூகத்தை கைப்பற்ற முயன்றது.[9] தன் முயற்சி தோல்வியுற டெசுபார்கெசு சனவரி 1690இல் புதுச்சேரிக்குத் திரும்பினார்.[10]

1785இல் மியான்மர் துருப்புக்கள் பூகத்தைத் தாக்கினர். அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன கப்பலின் தலைவர் பிரான்சிசு லைட் உள்ளூர் மக்களுக்கு மியான்மர் தாக்க முன்னேற்பாடுகள் செய்து வருவதை முன்கூட்டியே அறிவித்தார். அப்போதுதான் மறைந்த ஆளுநரின் மனைவி சானும் அவரது சகோதரி மூக்கும் உள்ளூர் மக்களைத் திரட்டினர். ஒருமாத முற்றுகைக்குப் பின்னர் மார்ச் 13, 1785இல் மியான்மர் துருப்புக்கள் பின்வாங்கினர். இந்தப் பெண்கள் உள்ளூர் நாயகிகள் ஆயினர். இவர்களுக்கு அரசர் முதலாம் இராமா தாவ் தெப் கசத்ரி மற்றும் தாவ் சி சுன்தோன் என்ற பட்டங்களை வழங்கினார். அரசர் ஐந்தாம் இராமா காலத்தில் பூகத் வெள்ளீயம் உற்பத்தி செய்யும் தெற்கு மாநிலங்களுக்கு நிர்வாக தலைநகராயிற்று. 1933இல் 1933 மோன்தோன் பூகத் (มณฑลภูเก็ต) என்ற இந்த ஏற்பாடு கலைக்கப்பட்டு பூகத் ஓர் மாநிலமாயிற்று.

மேற்சான்றுகள்

  1. Phuket Gazette "New Phuket Governor to focus on tourism development", 1 Oct 2010 Archived மே 30, 2015 at the Wayback Machine.
  2. "Population of the Kingdom" (Thai) (2014-12-31). பார்த்த நாள் 19 Mar 2015.
  3. "Phuket". Tourism Authority of Thailand. பார்த்த நாள் 2015-01-03.
  4. ตราประจำจังหวัด . Retrieved 22 Oct 2013 from http://www.phuket.go.th
  5. กุศล เอี่ยมอรุณ, จตุพร มีสกุล. Phuket. Bangkok: Sarakadee Press.
  6. New Terrains in Southeast Asian History, p.294, Abu Talib
  7. Smithies 2002, p.179
  8. Smithies 2002, p.50
  9. A History of South-east Asia p. 350, by Daniel George Edward Hall (1964) St. Martin's Press
  10. Smithies 2002, p.185

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.