புலமை விளையாட்டு

புலமை விளையாட்டு என்பது செய்யுள் இயற்றுவோர் தம் சொல்லாண்மையைக் காட்டக் கையாளும் ஒரு வகை உத்தி.
இதனைச் சொல்விளையாட்டு எனவும் வழங்குவர்.
சித்திரக்கவி போன்றனவும், யமகம், மாலைமாற்று போன்ற சொல்லணி வகைகளும் இதன்பால் அடங்கும்.
திருஞான சம்பந்தர், அருணகிரிநாதர் போன்றோர் சொல்லோடு விளையாடித் தம் புலமையை வெளிப்படுத்தினர்.

அருணகிரிநாதர் இயற்றிய கந்தர் அந்தாதி நூலிலுள்ள ஒரு பாடல்.

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே. பாடல் எண் 54

[1][2]

  • இப்படி ஒரு பாடல், இப்படி ஒரு உரை, இப்படி ஒரு கருத்துரை, தமிழில் விளையாடிய காலம் 15ஆம் நூற்றாண்டில் தோன்றி, மறைந்தது. தமிழ்மொழி வரலாற்றில் இது ஒரு கால கட்டம்.

அடிக்குறிப்பு

  1. பதவுரை

    திதத்தத்தத் தித்தத் - திதத்தத்தத் தித்த என்னும் தாளமானங்களை
    திதி – திருநடத்தால் காக்கின்ற
    தாதை - பரமசிவனும்
    தாத - பிரமனும்
    துத்தித் – படப் பொறியினை உடைய
    தத்தி – பாம்பினை உடைய
    தா - இடத்தையும்
    திதத் - நிலைபெற்று
    தத்து – ததும்புகிற
    அத் தித் – சமுத்திரத்தையும் பாயலாகக் கொண்டு
    ததி - தயிரானது
    தித்தித்ததே - தித்திக்கிறதென்று
    துத் - உண்ட கண்ணனும்
    துதித்து – துதி செய்து வணங்குகிற
    இதத்து – பேரினப சொரூபியான
    ஆதித - முதல்வனே
    தத்தத்து – தந்தத்தை உடைய
    அத்தித் – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
    தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு
    தாத - தாசனே
    திதே - தீமையே
    துதை - பொருந்திய
    தாது – சப்த தாகுக்களால் நிறைந்த்தும்
    அதத்து – மரணத்தோடும்
    உதி – சனனத்தோடும்
    தத்து – பல தத்துக்களோடும்
    அத்து - இசைவுற்றதுமான
    அத்தித் - எறும்பு
    (தித்தி தீதீ) – இந்தப் பகுதிக்கு உரை விடுபட்டுள்ளது.
    திதி – அந்த நாளிலே
    துதி – உன்னைத் துதிக்கும்
    தீ - புத்தி
    தொத்ததே – அனக்கே அடிமையாக வேண்டும்
    இந்தப் பாடலில் தீ – எழுவாய், தொத்த்து – பயனிலை, ஏ – அசைநிலை
    பழைய உரையைத் தழுவிச் செங்கலவராய பிள்ளை எழுதிய உரை

  2. கருத்து
    தாளத்தால் நடிக்கும் பரமசிவனும், பிரமாவும், தயிரை உண்டு, பாற்கடலையும் ஆசிசேடனையும் பாயலாகக் கொண்ட திருமாலும் வணங்குகிற முதல்வனை! தெய்வயானை தாசனே! சனன மரணத்துக்கு இடமாய், எலும்பு முதலிய தாதுக்கள் நிறைந்த பொல்லாத இந்த உடம்பை, தீயில் வேகுங்கால், உன்னைத் துதிக்கும் என் புத்தியை உன் அடி இணைக்கு ஆட்படுத்த வேண்டும்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.