புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னித் தொகுதியில் புதுக்குடியிருப்பு என்னும் பிரதேசத்தின் பழமையானதொரு பாடசாலை ஆகும்.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி
அமைவிடம்
புதுக்குடியிருப்பு, இலங்கை
தகவல்
வகைஅரசுப் பள்ளி
அதிபர்சி. சுப்ரமணியேசுவரன்
தரங்கள்1–13
இணையம்இணையத்தளம்

பாடசாலை வரலாறு

புதுக்குடியிருப்பு வாழ் மக்களின் உதவியுடன் சைவ வித்திய விருத்தி சங்கத்தினால் அன்றைய காலப்பகுதியில் இந்தப் பாடசாலை நிறுவப்பட்டது. அன்று அதன் பெயர் சிறி சுப்பிரமணிய வித்தியாசாலை. இப்பாடசாலையின் முதல் தலைமை ஆசிரியராக விளங்கியவர் மு. நேசரத்தினம் என்பவர். அப்போது ஆண்டு ஒன்று தொடக்கம் பத்து வரையிலான வகுப்புகளே இருந்தன. அவரைத் தொடர்ந்து நமசிவாயம், சின்னத்துரை ஆகியோர்கள் அதிபர்களாகப் பணியாற்றினர். சின்னத்துரையின் காலத்தில் முதன் முதலில் கல்லால் அமைக்கப்பட்ட கட்டடம் அமைக்கப்பட்டது. இவரைத் தொடர்ந்து தங்கராசா என்பவர் அதிபராகப் பணியேற்றார். இவரின் காலத்தில் மகாவித்தியாலமாக தரமுயர்த்தப்பட்டது. அதன் பின் பணியாற்றிய கு. வி. செல்லத்துரையின் முயற்சியால் புதிய அறிவியல் ஆய்வுகூடமும் புதிய கட்டிடங்களும் உருவாக்கப்பட்டன. இவருக்கு பின் வேலுப்பிள்ளை, அரியரத்தினம் ஆகியோர்கள் அதிபர்களாக கடமையாற்றினர்கள்.

வளர்ச்சி

1966ம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதிய மரியாம்பிள்ளை என்ற மாணவர், கலைப்பிரிவில் சித்தியடைந்து முதல் முதலாக பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி கல்லூரிக்குப் பெருமை சேர்த்தார்[1]. 1974 கல்லூரியின் அதிபர் பொறுப்பை ஏ. கே மகாலிங்கம் பெற்றார். இவருடைய காலத்தில் விஞ்ஞானப் பிரிவு இணைக்கப்பட்டது. இவரின் காலத்தில்தான் மருத்துவம், வர்த்தகத் துறைகளில் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றனர்.

இதன் பின் கல்லூரி கொத்தணிப் பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு அதன் அதிபராக ச. நாகரத்தினம் பொறுப்பெடுத்து கொண்டார். இவரின் பின் கல்லூரியின் அதிபராக பி.கே சிவலிங்கம் பொறுப்பெடுத்து கொண்டார். இவர் கல்வி மட்டும் இல்லாமல் துறைசார்ந்த ஏனைய அம்சங்களையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அத்தோடு மத்திய கல்லூரியாகவும் தரமுயர்த்தப்பட்டது. ஈழப்போரின் போது வவுனியாவில் காமினி ஒருங்கிணைக்கப்பட்ட பாடசாலையாக இயங்கி வந்தது. போரின் போது முற்றாக சேதமடைந்த இக்கல்லூரியில் புலம்பெயர் பழைய மாணவர்களும் சமூகமும் இணைந்து கல்லூரிக்குப் பொன்விழா மண்டபம், நூலகம், ஆய்வுகூடம், மாடிக் கட்டிடம் ஆகியன அமைக்கப்பட்டன. இப்பாடசாலை இப்போது தன்னுடைய சொந்த இடத்தில் இயங்கி வருகிறது. இப்போது கல்லூரியின் அதிபராக சி. சுப்ரமணியேசுவரன் இருந்து வருகின்றார்.

அதிபர்கள்

  • திரு.மு.நேசரத்தினம்
  • திரு.நமசிவய
  • திரு.சின்னத்துரை
  • திரு.தங்கராசா
  • திரு.கு.வி.செல்லத்துரை
  • திரு.அ.க.மகாலிங்கம்
  • திரு.ச.நாகரத்தினம்
  • திரு.பொ.க.சிவலிங்கம்
  • திரு.சி.சுப்பிரமனியேஷ்வரன்
  • Mr. S Ravinthiraraja
  • Mr. Nevit Juvarajah

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.