பீட்டர் பாண்டியன்
பீட்டர் பாண்டியன் என்று மக்களால் அழைக்கப்பட்ட ரௌஸ் பீட்டர் (Rous Peter) (ஆகஸ்ட் 24, 1785 - ஆகஸ்ட் 6, 1828) என்பார் மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளை வகித்த கிழக்கிந்திய கம்பெனி அலுவலர் ஆவார்.
பெயர்க்காரணமும், மக்கள் செல்வாக்கும்
காலனிய ஆட்சியாளரான ரௌஸ் பீட்டர் எல்லா மதத்தினரையும் சமமாக மதித்து நடத்தியதாகவும் அதன்பொருட்டு அவரை மக்கள் பாண்டிய ஆட்சியாளர்களின் வழித்தோன்றலாகவே வரித்து பீட்டர் பாண்டியன் என்று அழைத்ததாகவும் கருதப்படுகிறது[1]. கன்னிவாடி, பெரியகுளம், போடி நாயக்கனூர் பகுதிகளில் காட்டு யானைகள் மக்களைத் தொந்தரவு செய்தபோது தாமே அவற்றை வேட்டையாடி மக்களால் பாராட்டப் பெற்றிருக்கிறார். ஏழை எளியவர்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். மீனாட்சியம்மன் கோயிலுக்கும், கள்ளழகர் கோயிலுக்கும் கொடைகள் தந்துள்ளார். பாண்டிய மன்னன் திரும்ப வந்து ஆள்வதாகவே கருதி மதிக்கப்பட்ட இவரின் கொடைத் திறத்தையும், வீரத்தையும் பாராட்டி நாட்டுப்புறப் பாடல்கள் வழங்கி வந்திருக்கின்றன. இப்போது காணக்கிடைக்காத பீட்டர் பாண்டியன் அம்மானை என்ற நூலும் எழுந்திருக்கிறது[2].
மீனாட்சியம்மன்பால் பற்று
ஜூலை 31, 1801-இல் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின்படி மதுரை உள்ளிட்ட பகுதிகளின் ஆட்சியதிகாரம் ஆற்காட்டு நவாப்புகளிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனி வசம் கைமாறியதைத் தொடர்ந்து மீனாட்சியம்மன் கோயிலின் நிர்வாகப் பொறுப்பும் மாவட்ட ஆட்சியர் வசமே வந்தது. ஆட்சியரே கோயிலின் தக்காராகவும் பொறுப்பு வகித்தார். அவ்வாறு கோயிலின் பொறுப்பை ஏற்ற ரௌஸ் பீட்டர் தினமும் குதிரையில் ஒருமுறை கோயிலை வலம்வந்த பிறகே அன்றாட அலுவல்களைத் தொடங்குவாராம்.
மின்னலும் இடியுமாக இருந்த ஒரு மழை நாளில் மூன்று வயதுச் சிறுமி ஒருத்தி அவரை கைப்பிடித்து வெளியே அழைத்துச் சென்றதாகவும், அவ்வாறு அழைத்துச் சென்ற சற்றைக்கெல்லாம் அவரது வசிப்பிடம் மின்னல் தாக்கி இடிந்ததாகவும், அச்சிறுமி கோயிலுக்குள் சென்று புகுந்ததாகவும், அவ்வாறு சிறுமி வடிவில் வந்து தம்மைக் காப்பாற்றியது மீனாட்சி அம்மனே என்று கருதிய பீட்டர் மாணிக்கக் கற்கள் பதித்த தங்க அங்கவடிகளை (குதிரைச் சேணத்திலிருந்து தொங்கும் பாதந்தாங்கிகள்) அம்மனுக்கு அளித்ததாகவும் கூறப்படுகிறது. இன்றும் சித்திரைத் திருவிழாவின் ஐந்தாவது நாளில் அம்மன் மாசி வீதிகளில் தங்கக்குதிரை வாகனத்தில் உலா வரும்போது இந்த பாதக்கொளுவிகளையே அணியக் காணலாம் [3][4].மற்றொரு முறை யானை தாக்க வருகையில் மீனாட்சியம்மனை வணங்கி ரௌஸ் பீட்டர் ஒரே குண்டில் சுட்டுத் தப்பித்ததாகவும் கதை வழங்குகிறது[3].
மறைவு
தம் பொருளையும் அரசாங்கக் கருவூலப் பணத்தையும் தனித்துப் பார்க்காத இவரது கொடைமடம் கையாடல் புகார்களுக்கு வழிவகுத்திருக்கிறது. இவருக்குக் கீழ் பணிபுரிந்தவர்களும் தவறுகள் புரிந்திருக்க வாய்ப்புள்ளது. 1819-இலேயே அரசாங்கப் பணத்தையும் எடுத்துச் செலவழித்திருப்பதை ஒத்துக்கொண்டு கடிதம் எழுதி மூடி முத்திரையிட்டு வைத்த ரௌஸ் பீட்டர் 1828-இல் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார்[2].
தாம் இறந்த பின்பு கண்கள் மீனாட்சியம்மன் கோயிலை நோக்கியிருக்கும் வகையில் புதைக்கும்படி கேட்டுக்கொண்டார் என்றும் அதன்படியே புதைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரது கல்லறை மதுரையில் மேலஆவணி மூல வீதி தெற்காவணி மூலவீதியோடு சந்திக்கும் இடத்திற்கருகில் உள்ள பரிசுத்த ஜார்ஜ் ஆலயத்தின் நிலவறை ஒன்றில் உள்ளது[1].
வாழ்க்கைக் குறிப்பு[5]
ஆகஸ்ட் 24, 1785 | பிரிட்டனின் கார்ன்வால் மாவட்டத்தில் உள்ள ஹார்லி என்ற இடத்தில் பிறந்தார் |
1798 முதல் 1800 வரை | தெவோன்ஷயரில் உள்ள கிங்ஸ்பிரிட்ஜ் என்னும் இடத்தில் வில்காக்ஸ் என்பாரிடம் பயின்றார் |
ஜூலை 24, 1801 | இந்தியா வந்து புனித ஜார்ஜ் கோட்டையில் எழுத்தராகச் சேர்ந்தார் |
ஆகஸ்ட் 31, 1801 | வில்லியம் கோட்டை கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார் |
1804 | சிறப்பாகப் பரிமளித்திராத நிலையில் கல்லூரியைவிட்டு வெளியேறினார் |
ஜூன் 6, 1804 | திருச்சிராப்பள்ளி மற்றும் அதைச் சார்ந்த பாளையங்களின் ஆட்சியரிடம் உதவியாளர் பணி |
ஜூன் 12, 1805 | திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூரின் முதன்மை ஆட்சியரிடம் பதிவாளர் பணி |
ஜூன் 18, 1806 | திருச்சிராப்பள்ளி ஜில்லாவின் பதிவாளர் |
அக்டோபர் 10, 1807 | மதுரை, திண்டுக்கல் ஆட்சியருக்கு உதவியாளர் பணி |
மார்ச் 11, 1812 | மதுரை, திண்டுக்கல் ஆட்சியர் மற்றும் நீதித்துறை நடுவர் பதவி |
1809 - 1812 | மதுரைப் பகுதியில் பருவந் தவறியதாலும், விஷக் காய்ச்சல் பரவியதாலும் ஏராளமான மனிதர்களும், கால்நடைகளும் மடிய நேரிட்டது. நகரத்தின் தூய்மைக்கேடும், மக்களின் ஏழ்மைநிலையும் உயிரிழப்புகளுக்குக் காரணமாகக் கூறப்பட்டன. இத்தகைய கவலைக்குரிய நிலைமையை முன்னமேயே தெரிவிக்காததற்காக இயக்குனர் அவை ரௌஸ் பீட்டரைக் கடிந்துகொண்டது |
1824 | மதுரைப் பகுதியில் வறட்சியும், கடும் பஞ்சமும், காலராவும் |
மே 10, 1825 | மதுரையின் முதன்மை ஆட்சியர் மற்றும் நீதித்துறை நடுவர் |
ஆகஸ்ட் 6, 1828 | கிழக்கிந்திய கம்பெனிக்குத் தரவேண்டியிருந்ததாகக் கருதப்படும் 70,000 - 100,000 பவுண்டுகளுக்காக தமது எஞ்சியிருந்த சொத்துக்களைப் பறிமுதல் செய்து எடுத்துக்கொள்ளும்படியாக 1819-இலேயே உயில் எழுதி மூடி முத்திரை வைத்திருந்த அவர் தற்கொலை செய்துகொண்டார் |
மேற்கோள்கள்
- "A church and a graveyard". தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ். பார்த்த நாள் 02 ஆகஸ்ட் 2015.
- தொ.பரமசிவன் (2006). பண்பாட்டு அசைவுகள். காலச்சுவடு பதிப்பகம். பக். 106-107. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-87477-07-5.
- "Enthralling story of ruby-studded stirrups". தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ். பார்த்த நாள் 02 ஆகஸ்ட் 2015.
- "நரசையாவின் "ஆலவாய்: மதுரை மாநகரத்தின் கதை" என்ற நூலுக்கு "சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்" என்ற தலைப்பில் வெங்கட் சாமிநாதன் எழுதிய மதிப்புரையில் மேற்கோள்". தமிழ்ஹிந்து.காம். பார்த்த நாள் 02 ஆகஸ்ட் 2015.
- Hugh Charles Lord Clifford (1842). A letter to the editor of the Bombay Times, with prefactory remarks and an appendix. W.Davy. பக். 59-60.