பிளைமவுத் குடியேற்றம்

பிளைமவுத் குடியேற்றம் (Plymouth Colony), அல்லது புது பிளைமவுத் அல்லது பிளைமவுத் விரிகுடா குடியேற்றம்) 1620 முதல் 1691 வரை வட அமெரிக்காவில் அமைந்திருந்த ஆங்கிலக் குடியேற்றமாகும். கப்பல்தலைவர் ஜான் இசுமித் முன்னதாகச் சென்று நில அளவை செய்து நியூ பிளைமவுத் எனப் பெயரிட்டிருந்த இடத்தில் பிளைமவுத் குடியேற்றத்தின் முதல் குடியிருப்பு உருவானது. தற்போதைய மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் பிளைமவுத்தில் இருந்த இந்த முதல் குடியிருப்பே இந்தக் குடியேற்றத்தின் தலைநகரமாக விளங்கியது. தனது உச்ச காலத்தில் தற்கால மாசச்சூசெட்ஸ் மாநிலத்தின் பெரும்பாலான தென்பகுதியை அடக்கியிருந்தது.

பிளைமவுத் குடியேற்றம்
இங்கிலாந்துக் குடியேற்றம்
1620-1686
1689-1691


பிளைமவுத் குடியேற்றத்தின் சின்னம்

தலைநகரம் பிளைமவுத்
மொழி(கள்) ஆங்கிலம்
சமயம் பியூரிட்டன்கள், சமயப் பிரிவினையாளர்கள்
அரசாங்கம் தன்னாட்சி
சட்டசபை பிளைமவுத் பொது அறமன்றம்
வரலாறு
 - உருவாக்கம் 1620
 - முதல் நன்றி தெரிவித்தல் நாள்
 - பீக்குவாட் போர்
 - பிலிப் அரசர் போர் 1675–1676
 - நியூ இங்கிலாந்து டொமினியனின் அங்கம் 1686–1688
 - குலைவு 1691
தற்போதைய பகுதிகள்  மாசச்சூசெட்சு மாநிலம்
பிளைமவுத் குடியேற்றத்தில் ஊர் அமைவிடங்களைக் காட்டும் நிலப்படம்

பிளைமவுத் குடியேற்றத்தை நிறுவியவர்கள் சமயச் செலவர் என அறியப்படும் ஆங்கிலிக்கர்களும் சமயப் பிரிவினையாளர்களான பிரவுன் பின்பற்றாளர்களும் ஆவர். வட அமெரிக்காவில் ஆங்கிலேயர்களால் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட முதல் குடியேற்றமாக இது இருந்தது. இதே காலகட்டத்தில் வர்ஜீனியாவில் ஜேம்சுடவுன் மற்றும் பிற குடியிருப்புகள் உருவாயின. முதல் குறிப்பிடத்தக அளவிலான நிரந்தர குடியேற்றம் நியூ இங்கிலாந்து பகுதியில் உருவானது. பிளைமவுத் குடியேற்றம் மாசச்சூசெட் இனத்தவருடன் உடன்பாடு கண்டு தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொண்டனர். இதற்கு தொல்குடி அமெரிக்கரான இசுக்குவான்ட்டோ உதவியாக இருந்தார். இந்த உறவில் ஏற்பட்ட பிணக்கினால் பிலிப் அரசர் போர் (1675-1678) என அழைக்கப்படுகின்ற முதல் செவ்விந்தியப் போர் நிகழ்ந்தது. 1691இல் இந்தக் குடியேற்றம் மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்துடனும் மற்ற குடியேற்றங்களுடனும் இணைக்கப்பட்டு மாசச்சூசெட்சு விரிகுடா மாகாணம் உருவானது.

இந்தக் குடியேற்றம் மிகக் குறுகிய காலமே இருந்தபோதும், ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் இதற்கு சிறப்பான பங்குண்டு. பிளைமவுத்தின் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை சமய ஒறுத்தலிலிருந்து தப்பி வந்தவர்கள்; தங்களின் புரிதலின்படி வழிபட இடம் தேடி வந்தவர்கள். ஜேம்சுடவுன் போன்ற மற்றக் குடியேற்றங்கள் வணிக நோக்கில் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்டவை. பிளைமவுத் குடியேற்றத்தின் சமூக, சட்ட அமைப்புகள் ஆங்கில வழமைகளை ஒட்டியே இருந்தன. இங்கு நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அமெரிக்க நாட்டுக்கதைகளின் அங்கமாயிற்று. இவர்கள் தொடர்புள்ள நன்றி தெரிவித்தல் நாள் வட அமெரிக்காவின் மரபாயிற்று; பிளைமவுத் பாறை நினைவுச்சின்னம் ஆயிற்று.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.