நன்றி தெரிவித்தல் நாள்

நன்றி தெரிவித்தல் நாள் (Thanksgiving day) ஒரு வட அமெரிக்க பாரம்பாரிய விடுமுறை நாள் ஆகும். இது தைப்பொங்கல் போன்று ஒரு வகை அறுவடைத் திருநாள் ஆகும். இதன் தோற்றம் அமெரிக்க முதற்குடிகளின் பாரம்பரியத்தில் இருக்கிறது. வந்த ஐரோப்பியரும், முதற்குடிகளும் ஒன்றாக கொண்டாடும் ஒரு நாள் நன்றி தெரிவித்தல் நாள் என்பது கனடாவில் வழங்கும் தோற்ற வரலாறு.

நன்றி தெரிவித்தல் நாள்
Thanksgiving Day
Saying grace before carving a turkey at Thanksgiving dinner, Pennsylvania, U.S., 1942
கடைபிடிப்போர் கனடா
 லைபீரியா
 நோர்போக் தீவு
 ஐக்கிய அமெரிக்கா
 புவேர்ட்டோ ரிக்கோ
வகைபொது விடுமுறை நாள், கலாசார
நாள்அக்டோபரின் 2ம் திங்கட்கிழமை (கனடா)
நவம்பரின் 1வது வியாழன் (லைபீரியா)
நவம்பரின் கடைசி புதன் (நோர்போக் தீவு)
நவம்பரின் 4வது வியாழன் (ஐக்கிய அமெரிக்கா)

இது கனடாவில் அக்டோபர் மாதத்தின் இரண்டாம் திங்களன்றும், ஐக்கிய அமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் நான்காம் வியாழனன்றும் கொண்டாடப்படுகிறது.

இந்நாளின் பன்முக வெளிப்பாடு

இன்று ஐக்கிய அமெரிக்க நாடுகளில் கொண்டாடப்படுகின்ற "நன்றி தெரிவித்தல் நாள்" அரசியல், சமூக, கலாச்சார, சமய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. விடுமுறை நாள் என்னும் விதத்தில் இந்நாள் ஒரு குடும்ப விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நீண்ட தூரம் பயணம் செய்து தம் பெற்றோர், உடன்பிறப்புகளோடு சேர்ந்து விழாக் கொண்டாடுகின்றனர்.

இந்நாளில் மக்கள் உண்ணும் விருந்தில் சில உணவுகள் மரபுவழி சமையல் செய்யப்படுகின்றன. வான்கோழியை முழுக் கோழியாக வைத்து அவித்தல், வறட்டியெடுத்தல், பொரித்தல் போன்ற வகைகளில் சமைப்பர். குடல் பகுதியை நீக்கிவிட்டு, அதில் அப்பத்துண்டுகள் மற்றும் மூலிகைகள் கொண்ட கலவையை வைத்திருப்பர். வான்கோழி இறைச்சி தவிர மக்காச் சோளம் அவித்து உண்ணப்படும். மேலும், கிரான்பெரி என்னும் பழங்களைக் கலவையாக்கி உணவோடு அருந்துவர். அமெரிக்க பூசணியிலிருந்து செய்யப்படும் கேக் உண்ணுவதும் வழக்கம்.

அமெரிக்க முதல்வர் வான்கோழியை "மன்னித்தல்": ஜான் எப். கென்னடி (1963). இவ்வழக்கம் 1985இலிருந்து தொடர்கிறது.

நன்றி தெரிவித்தல் நாளில் நாடு முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதுண்டு. முக்கியமான போட்டிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். குறிப்பாக அமெரிக்க கால்பந்தாட்டம் என்று அழைக்கப்படும் விளையாட்டு பிரபலமானது.

சமயத்தைப் பொறுத்தமட்டில், அமெரிக்காவில் பல இடங்களில் கோவில் வழிபாடுகளில் நன்றி மன்றாட்டுகள் இடம்பெறும். மனித வாழ்விலும் வரலாற்றிலும் இறைவன் மக்களுக்குச் செய்துள்ள, தொடர்ந்து செய்துவருகின்ற நன்மைகளுக்கு மக்கள் நன்றிசெலுத்துவர்.

அரசியல் சார்ந்த பொருள்

அரசியல் பின்னணியில், இவ்விழா மக்களிடையே நல்லுறவை வளர்க்க பயன்படுவதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் முதற்குடிகளும் ஐரோப்பிய குடியேற்றத்தவரும் தமக்குள்ளே மோதலில் ஈடுபடாமல் நல்லுறவைப் பேணுவதன் தேவையும் இவ்விழாவின் ஒரு பொருளாக உள்ளது.

நாட்டு முதல்வர் வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கல்

இவ்விழாவைச் சார்ந்த இன்னொரு வழக்கம் அமெரிக்க முதல்வர் தமது இல்லமாகிய வெள்ளை மாளிகையில் இரண்டு வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கும் சடங்கு ஆகும். அமெரிக்க குடும்பங்களில் பல்லாயிரக் கணக்கான வான்கோழிகள் இவ்விழாவை முன்னிட்டுக் கொல்லப்படுவதால், அவ்வாறு "கொலைத் தண்டனை" பெறுவதிலிருந்து தப்பித்துப் பிழைக்கின்ற இரண்டு வான்கோழிகள் நாட்டிலுள்ள விலங்குக் காப்பகங்களுக்குப் பரிசாக அளிக்கப்படும். இவ்வாறு அவை சாவிலிருந்து தப்புகின்றன.

மேசி நிறுவனத்தின் ஊர்வலக் காட்சி

ஐக்கிய அமெரிக்காவில் கொண்டாடப்படுகின்ற நன்றி தெரிவித்தல் நாள் நிகழ்ச்சியில் நியூயார்க் நகரில் மேசி (Macy's) என்னும் மாபெரும் வர்த்தக நிறுவனம் பெரியதொரு ஊர்வலக் காட்சிக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். நன்றி விழா நாளன்று காலையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் குழந்தைகளுடன் நியூயார்க் வந்து கூடுவார்கள். அப்போது அமெரிக்க கலாச்சாரத்தில் பிரபல்யமான கார்ட்டூன் பாத்திரங்கள் பிரமாண்டமான பலூன் வடிவில் உருவமைக்கப்பட்டு ஊர்வல ஊர்திகள் உதவியோடு பவனியாகச் செல்லும். இசைக் குழுக்கள் இன்னிசை முழங்கும். அப்போது மேலிருந்து சிறு தாள் துண்டுகள் தூவப்படும்.

மேசி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்கிறது. 2012ஆம் ஆண்டு நிகழும் ஊர்வலம் அந்நிறுவனம் நடத்துகின்ற 86ஆம் நிகழ்ச்சி ஆகும்.

இந்த ஊர்வலத்தின் போது சாந்தா கிளாஸ் எனப்படும் கிறிஸ்மஸ் தாத்தா தோன்றி குழந்தைகளோடு நடனம் ஆடி விளையாடுவது ஒரு சிறப்பு நிகழ்ச்சி.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.