பிர் பாஞ்சல் மலைத்தொடர்
பிர் பாஞ்சல் மலைத்தொடர் (Pir Panjal Range) இமயமலைத்தொடரின் உள்பகுதியில் இருக்கின்றது. இது தென்கிழக்குத் திசையிலிருந்து வடமேற்குத் திசைவரை பரவியிருக்கிறது. இந்த மலைத்தொடர் இமாச்சலப் பிரதேசம் , ஜம்மு காசுமீர் மற்றும் ஆசாத் காசுமீர் ஆகிய மாநிலங்களில் பரவியிருக்கிறது. இந்த மலைத்தொடர்கள் 1,400 மீட்டர் முதல் 4,100 மீட்டர் உயரமுடையவை. இமயமலையின் கீழ்ப்பகுதியிலுள்ள மிக நீண்ட மலைத்தொடர் இதுவாகும்.


சிகரங்கள்
டியோ றிப்பா (6001 மீட்டர் உயரம்) மற்றும் இந்திராசன் (6,221 மீட்டர் உயரம்) ஆகிய இரண்டும் இம்மலைத்தொடரில் உள்ள முக்கியமான சிகரங்கள் ஆகும். இவற்றை பார்வதி-பியாஸ் பள்ளத்தாக்கிலுருந்தும் மற்றும் சந்த்ரா பள்ளத்தாக்கிலிருந்தும் அடையலாம். காஷ்மீரின் மலைவாசஸ்தலமான குல்மார்க் இம்மலைத்தொடரில் அமைந்துள்ளது..[1]
கணவாய்கள்
- பிர் பாஞ்சல் கணவாய் ஸ்ரீநகரின் மேற்கே அமைந்துள்ளது.
- பானிகால் கணவாய் 2,832 மீட்டர் உயரத்தில் ஜீலம் நதியின் தொடக்கத்தில் காஷ்மீரின் தெற்குப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
- சிந்தன் கணவாய் ஜம்மு மற்றும் காஷ்மீரை கிஷ்ட்வார் உடன் இணைக்கிறது.
- பிர் கி காலி கணவாய் காஷ்மீரை பூஞ்ச் மற்றும் ரஜோரியோடு இணைக்கிறது.
- முனாவர் கணவாய் ரஜோரியில் அமைந்துள்ளது.
- ரோதங் கணவாய் 3,978 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
- காஜி பிர் கணவாய் பூஞ்ச் மற்றும் யூரி பகுதியை இணைக்கிறது.
பானிகால் தொடர்வண்டிக் குகை
பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை 11.215 கிலோமீட்டர் நீளமுடையது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பனிஹால் நகரத்தையும், காசிகுண்ட் நகரத்தையும் இணைக்கிறது. இது 26, ஜூன் 2013 முதல் இயங்கிவருகிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய தொடர்வண்டிக் குகை ஆகும். மேலும் உலகின் இரண்டாவது பெரியது ஆகும். [2]
மேலும் இம்மலைத்தொடரில் ஜவகர் குகை, செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 1எ (இந்தியா) மற்றும் ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதைகள் உள்ளது.