பின்னியெசுடன் பாரந்தூக்கி
பின்னியெசுடன் பாரந்தூக்கி (Finnieston Crane) இசுக்கொட்லாந்தின் கிளாசுக்கோ நகரின் மையத்தில் பயனற்ற நிலையில் உள்ளதோர் மிகப்பெரிய முனைநெம்பு பாரந்தூக்கி ஆகும். தற்போது இது வேலை செய்யாவிட்டாலும் நகரத்தின் பொறியியல் பாரம்பரியத்தைக் காட்சிப்படுத்தும் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஏற்றுமதிக்கான சரக்குகளை கப்பல்களில், குறிப்பாக நீராவிக் கப்பல்களில், ஏற்ற இது பேருதவியாக இருந்தது.

கிளைடு ஆற்றில் இது போல மேலும் மூன்று பாரந்தூக்கிகள் உள்ளன; 2007 இல் ஐந்தாவதாக இருந்த பாரந்தூக்கி கழட்டப்பட்டது. உலகளவில் இதுபோன்ற பெரிய பாரந்தூக்கிகள் 11 மீதம் உள்ளன. பிபிசியின் பசிபிக் குவாய் ஒளிபரப்பில் செய்தி வாசிப்பவருக்குப் பின்னணியாக இது காணப்படுகிறது.
வரலாறு

கிளாசுக்கோவிலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்ய 61 ஏக்கர்கள் (25 ha) பரப்பளவில் குயின்சு டாக் எனப்பட்ட துறைமுகம் ஆகத்து 1877 இல் திறக்கப்பட்டது.[1] 1890 களில் 130 தொன் எடை நீராவி பாரந்தூக்கி தற்போதுள்ள பாரந்தூக்கிக்கு மேற்கே கட்டப்பட்டது. இது பின்னர் பாலமொன்று கட்டப்படும் போது அழிக்கப்பட்டது.[2][3][4] தற்போதுள்ள பாரந்தூக்கி கிளைடு ஆற்றின் மீது கட்டப்பட்ட கடைசி பெரும் முனைநெம்பு பாரந்தூக்கி ஆகும்.[5]
பின்னியெசுடன் பாரந்தூக்கி சூன் 1928 இல் திறக்கப்பட்டது. இதனை கிளைடுத் துறைமுக ஆணையம் இயக்கி வந்தனர். வணிக பயன்பாட்டிற்கு 1932 இல் கொணரப்பட்டது. [6] கோபுரத்தை கொவான்சு,செல்டன் & நிறுவனமும் முனைநெம்புப் பகுதியை கிளீவ்லாந்து பிரிட்ஜ் அண்டு எஞ்சினியரிங் நிறுவனமும் கட்டின; கிளைடு துறைமுக ஆணையத்தின் சார்பாக பொறியியலாளர் டேனியல் ஃபீபெ மேற்பார்வையிட்டார்.[7][8]
இந்த பாரந்தூக்கியை அமைக்க மொத்தமாக அடித்தளத்துடன் GB£69,000 செலவாயிற்று.[4] இது "இசுடொப்கிரோசு பாரந்தூக்கி" அல்லது "கிளைடு துறைமுக ஆணைய பாரந்தூக்கி #7" என்று அலுவல் முறையாகக் குறிப்பிடப்பட்டாலும் பின்னியெசுடன் துறைக்கு அண்மையில் இருந்ததால் பரவலாக பின்னியெசுடன் பாரந்தூக்கி எனவே அழைக்கப்படலாயிற்று.[9][10]
உசாத்துணை
- "Private Legislation Procedure (Scotland) Act, 1899. Glasgow Corporation". The Edinburgh Gazette. 19 November 1926. https://www.thegazette.co.uk/Edinburgh/issue/14288/page/1296. பார்த்த நாள்: 26 April 2014.
- Scientific American: Supplement. 47. Munn and Company. 1899. http://books.google.com/books?id=lmw3AQAAMAAJ.
- Harrison 2008, p. 94
- "Finnieston Crane". Clyde Waterfront. பார்த்த நாள் 30 March 2014.
- Riddell 1979, p. 261
- "Along the Mighty Clyde". Scotland Magazine. பார்த்த நாள் 27 March 2014.
- Crawford 2013, p. 196
- Keay & Keay 2000, p. 461