பிசியில் தேசிய மொழிக்கான விவாதம்

பிசித் தீவின் ஆட்சிமொழிகளாக ஆங்கிலம், பிசிய மொழி, பிசி இந்தி ஆகிய மொழிகள் உள்ளன. 1997 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பின் இம்மூன்று மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்பட்டாலும், முன்னர் ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழியாக இருந்தது.

கட்டாயப் பாடம்

பிசித் தீவின் பள்ளிகளில் விசிய மொழியையும், வாய்ப்பிருந்தால் இந்தியையும் கற்பிக்க வேண்டும் என விவாதங்கள் எழுந்திருக்கின்றன. 2005, மே, சூன் மாதங்களில் பிசித் தீவுத் தலைவர்கள் பலர் விசிய மொழியின் நிலை உயர்த்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கல்வியமைச்சராயிருந்த ரோ தெய்முமு கெபா என்பவர் விசிய மொழியை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்றும் கூறினார். விசிய மொழியை தேசிய மொழியாக அங்கிகரிப்பது தேசத்தின் ஒற்றுமையைக் காக்கும் என்று தேசத்தின் அடையாளமாகத் திகழும் என்றும் கோரியிருந்தனர்.

பிசி உழைப்பாளர் கட்சியின் தலைவர் மகேந்திர சவுத்திரியும், விசிய மொழிக்கு தேசிய மொழி என்னும் அங்கிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் என்றும் இதே நிலை இந்திக்கும் தரப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். முன்னாள் கல்வி அமைச்சர் டவுபா வகடலே என்பார், இந்தி அனைத்துப் பள்ளிகளிலும் கற்பிக்கப்படுவதை ஆதரிப்பதாகவும், அதே நேரத்தில் விசிய மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இவர் கூறியது, ”இந்தியர்கள் தங்கள் மொழியை இழந்தாலும், மீட்க முடியும், அவர்களுக்கென ஒரு கண்டமே உள்ளது. ஆனால், விசிய மொழியை உலகில் வெறும் மூன்றரை இலட்சம் பேர் மட்டுமே பேசுகின்றனர். எங்கள் மொழியை இழந்தால் மீட்க முடியாது. அதனால்தான் விசிய மொழிக்கும் முக்கியத்துவம் வேண்டுகிறோம்.”

மாவட்டக் குழு ஒன்று பள்ளிகளில் நடத்திய ஆய்வில் இரண்டாம் வகுப்ப படித்த மாணவர்கள் பலருக்கு தங்கள் தாய்மொழியைப் பேசத் தெரியவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணைப் பிரதமர் யோனி மதிராயிவிவி, “தன்னை ஆங்கிலம் படிக்க வைப்பதில் தன் பெற்றோர் முக்கியத்துவம் காட்டியதாகவும், அதனால் விசிய மொழியைக் கற்க முடியவில்லை” என்றார். மேலும், குழந்தைகள் தங்கள் தாய்மொழியைத் தானே கற்றிடுவர் என்ற எண்ணம் தவறானது என்று தெரிவித்திருந்தார்,

விசிய மொழிக்கு முன்னுரிமை

ஆரிய பிரதிந்தி சபையின் தலைவர் கமலேசு ஆரியா, ”மொழியின் வழியாகவே மக்கள் பழக்கவழக்கங்களை அறிந்துகொள்ள முடியும். எனவே, விசிய மொழி, இந்துசுத்தானி ஆகிய இருமொழிகளும் பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும்.” என்றார். இவரது அமைப்பு இந்திய சிறுவர்களுக்கு விசிய மொழியை இலவசமாகக் கற்பித்தது. விசிய மொழி புவியளவிலும், எண்ணிக்கையளவிலும், குறைந்த அளவில் பேசப்படுவதால் இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

சபாநாயகர் கப்பர் அகமது, “விசிய மொழியைத் தேசிய மொழியாக்குவதன்மூலம், தேசிய ஒருமைப்பாடு கிடைக்கும். நமக்கெல்லாம் பொது மொழியாக ஒரு மொழி கற்பிக்கப்பட வேண்டும்” என்றார். தன்னால் விசிய மொழியைப் பேச இயலாததை குறை எனக் கூறி வருந்தினார்.

மேலும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.