பிக்காசோவின் இளஞ்சிவப்புக்காலம்

பிக்காசோவின் இளஞ்சிவப்புக்காலம் (Picasso's Rose Period), எசுப்பானிய ஓவியரான பாப்லோ பிக்காசோவின் வாழ்விலும், தொழிலிலும் முக்கியமான ஒரு காலகட்டம். அத்துடன் இது நவீன ஓவியத்தின் உருவாக்கத்தில் பெருமளவு தாக்கத்தைக் கொண்டிருந்தது. இது 1904ல் பொகீமியக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் மொன்ட்மாட்ரேயில் பிக்காசோ வாழத்தொடங்கியபோது தொடங்கியது. ஏழ்மை, தனிமை, நம்பிக்கையின்மை போன்றவற்றை நீலச் சாயைகளில் வெளிப்படுத்திய பிக்காசோவின் நீலக்காலம் என அழைக்கப்படும் காலப்பகுதியைத் தொடர்ந்து இளஞ்சிவப்புக்காலம் உருவானது.

பாப்லோ பிக்காசோ, 1905, கழைக்கூத்தாடியும் இளம் கோணங்கியும் (Acrobate et jeune Arlequin), கன்வசில் நெய் வண்ணம், 191.1 x 108.6 சமீ, பார்ண்சு பவுண்டேசன், பிலடெல்பியா

இளஞ்சிவப்புக்கால ஓவியங்கள் மகிழ்ச்சிகரமான கருப்பொருட்களை உள்ளடக்கி, சிவப்பு, செம்மஞ்சள், இளஞ்சிவப்பு, மண்ணிறம் என்பவற்றை உள்ளடக்கிய தெளிவான நிறச் சாயைகளில் வரையப்பட்டன. இவ்வோவியங்களில், கோமாளிகள், களியாட்ட நிகழ்த்துனர்கள் போன்றோர் கருப்பொருட்களாயினர். இளஞ்சிவப்புக்காலத்தில், நேராடியாகக் கவனித்ததன் அடிப்படையில் அல்லாமல், உய்த்துணர்வை அடிப்படையாகக்கொண்டே பிக்காசோ ஓவியங்களை வரைந்தார்.

மேலோட்டம்

இளஞ்சிவப்புக்காலம் 1904 முதல் 1906 வரை நீடித்தது.[1] பிக்காசோ 1904ல் பேர்னாண்டே ஒலிவர் என்பவருடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக மகிழ்ச்சியாக இருந்தார். இவரது ஓவியப் பாணியில் ஏற்பட்ட மாற்றத்துக்கு இதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. நகைச்சுவைப் பாத்திரங்கள், சர்க்கசு நிகழ்த்துனர்கள், கோமாளிகள் போன்றோர் பிக்காசோவின் இளஞ்சிவப்புக்கால ஓவியங்களில் அதிகமாகக் காணப்பட்டனர். அத்துடன், இவர்கள் பிக்காசோவின் நீண்ட தொழிற்காலம் முழுவதும் அவரது ஓவியங்களில் இடம்பெற்றனர்.

மேற்கோள்கள்

  1. Wattenmaker, Richard J.; Distel, Anne, et al.,1993, p. 194
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.