பாலி ஒன்பது

பாலி ஒன்பது (Bali Nine) என்பது இந்தோனேசியாவின் பாலியில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்ட ஒன்பது அவுஸ்திரேலியர்களுக்கு வழங்கப்பட்ட பெயர் ஆகும். இவர்கள் அனைவரும் ஏப்ரல் 17, 2005 ம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு 8.3 கிகி போதைப்பொருள் கடத்த எத்தனித்தபோது பாலியின் தலைநகர் டென்பசார் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டனர்.

அண்ட்ரூ சான், சீ யி சென், மைக்கல் சூகாஜ், ரினாய் லோரென்ஸ் (பெண்), டாக் டுக் தான் நியூவென், மாத்தியூ நோர்மன், ஸ்கொட் ரஷ், மார்ட்டின் ஸ்டீபன்ஸ், மயூரன் சுகுமாரன் ஆகியோரே கைது செய்யப்பட்டு மரண தண்டனை, அல்லது ஆயுட்காலச் சிறைத்தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் ஒன்பது அவுஸ்திரேலியர்களும் ஆவர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்படும் போது 18 வயதிற்கும் 28 வயதிற்கும் இடைப்பட்டோர் ஆவர்.

பெப்ரவரி 13, 2006 இல் லோரன்ஸ், ரஷ் இருவருக்கும் ஆயுட்காலச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.[1] இதற்கு அடுத்த நாள் பெப்ரவரி 14,2006 இல் சூகாஜ், ஸ்டீபன்ஸ் இருவருக்கும் ஆயுட்காலச் சிறைத்தண்டனையும், ஒன்பது பேர்களின் தலைவர்களான சான் மற்றும் மயூரன் இருவருக்கும் சுட்டுக் கொல்லும் முறையிலான மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இப்படியான மரணதண்டனைத் தீர்ப்பு அந்த நீதிமன்றின் வரலாற்றில் முதற்தடவையாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மீதியான மூவருக்கும் பெப்ரவரி 15 இல் ஆயுட்காலச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்புகள் அனைத்தும் ஆவுஸ்திரேலியா முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.

ஏப்ரல் 26, 2006 இல் லோரன்ஸ், நியூவென், ஷென் ஆகியோருக்கு மேன்முறையீட்டின் பின்னர் ஆயுட்காலத் தண்டனை 20 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது [2]. ஆனாலும் இத்தண்டனைக்கெதிராக அரச தரப்பினர் (Prosecutors) மேன்முறையீடு செய்தனர்.

செப்டம்பர் 6, 2006 இல் மேன்முறையீட்டு நீதிமன்றம் (Supreme Court), ரஷ், நியூவென், சென், நோர்மன் ஆகியோரின் 20 ஆண்டுத் தண்டனையை மரணதண்டனைக்கு உயர்த்தியது [3].

ஆக, தற்போதைய நிலவரப்படி ஸ்டீபன்ஸ், சுகாஜ் இருவரும் ஆயுட்காலச் சிறையையும், ரினாய் லோரன்ஸ் என்ற பெண் 20 ஆண்டுத் தண்டனையையும் மயூரன் உட்பட மற்றைய ஆறு பேரும் மரணதண்டனையையும் எதிர்நோக்கியிருக்கிறார்கள்.[4]

அவுஸ்திரேலியக் காவற்துறையினரே இவர்களைப் பற்றிய தகவல்களை, பெயர், கடவுச்சீட்டு இலக்கங்கள் போன்றவற்றை இந்தோனீசியக் காவற்துறைக்கு வழங்கியிருந்தனர். இத்தகவல்களின் அடிப்படையில் பாலியில் இந்த ஒன்பது பேரினதும் நடமாட்டங்களை ஒரு வாரத்துக்குக் கூர்ந்து அவதானித்தபின்னரே இந்தோனீசியக் காவற்துறையினர் இவர்களைக் கைது செய்தனர்.[5]

மூவரின் மேன்முறையீடு, 2007

இந்தோனீசிய சட்டத்தின் படி போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை வழங்க முடியாதென மயூரன், சான், மற்றும் ரஷ் ஆகியோர் சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த 9 பேர் அடங்கிய நீதிபதிகள் குழு இவ்வழக்கை அக்டோபர் 30, 2007இல் தள்ளுபடி செய்தது. ஆனாலும் 9 நீதிபதிகளில் மூன்று பேர் மரணதண்டனை சட்டத்துக்கு விரோதமானது எனத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. இத்தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்[6]. இது குறித்து அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் "அலெக்சாண்டர் டவுனர்" கருத்துத் தெரிவிக்கையில் சட்ட முறைப்படி இவர்களை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியாவிட்டால் தமது அரசு முறைப்படி இந்தோனீசிய அரசிடம் மன்னிப்புத்தரும்படி கோரும் என்றார்[7].[8]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.