பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்

பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் சங்ககாலப் புலவர். இரண்டு அகத்திணைப் பாடல்கள் இவரால் பாடப்பட்டுள்ளன; அவை: அகநானூறு 373, குறுந்தொகை 156.

ஏனாதி என்பது சிறந்த போர்வீரனைப் பாராட்டி அக்காலத்தில் வழங்கப்பட்ட விருதுப்பெயர். இந்தப் புலவர் நெடுங்கண்ணனார் பாண்டிய அரசன் ஒருவனால் ஏனாதி பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.

பாடல் சொல்லும் செய்தி

தாள் கை பூட்டிய தனிநிலை

பொருளீட்டச் செல்லும் வழியில் அவன் அவளை நினைக்கிறான்.

அவள் முழங்காலை மடக்கிக் கையால் கட்டிப் பிடித்துக்கொண்டு காத்திருப்பாளோ? கண்ணீரை விரலால் துடைத்து நகத்தால் தெறிவாளோ? முற்றுகையில் சிக்கித் தவிக்கும் ஓரெயில் மன்னன் போலத் தூங்காமல் கிடப்பாளோ? [1]

எழுதாக் கற்பின் நின் சொல்

பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! முருக்கங் கொம்பில் உள்ள நாரைக் களைந்துவிட்டு அதன் கொம்பில் கரகத்தை(கமண்டலத்தை)க் கட்டி எடுத்துச் செல்லும் படிவ நோன்பினை உடைய பார்ப்பன மகனே! நீ சொல்லும் வேதம் எழுதாமல் கற்றுக்கொண்டது என்பதை அறிவேன். அதில் இணங்காமல் பிரிந்தவரை இணங்கவைத்துச் சேர்க்கும் வசியமருந்து ஏதேனும் கூறப்பட்டுள்ளதா? [2]

மேற்கோள்

  1. அகநானூறு 373
  2. தலைவி தனக்குக் கிட்டாதபோது தலைவன் இவ்வாறு கேட்டுக் கலங்குகிறான். குறுந்தொகை 156
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.