பாடுவார் முத்தப்பர்

பாடுவார் முத்தப்பச் செட்டியார் (1767 - 1829) தமிழ்நாட்டு சிற்றிலக்கியப் புலவர் வரிசையில் புகழ் பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

முத்தப்பர், தமிழ் நாடு செட்டி நாட்டில், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களின் எல்லைக்கருகில் இருக்கும் கீழச்சிவல்பட்டியில் நகரத்தார் மரபில் அழகப்ப செட்டியார், லெட்சுமி ஆச்சி ஆகியோரின் புதல்வராய் 1767 இல் பிறந்தார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வியைப் பயின்று தமிழின் இலக்கிய இலக்கணங்களை மிதிலைப்பட்டியில் வாழ்ந்த காவிராயர்களிடம் கற்றுணர்ந்தார்.

இளமையிலேயே பாடும் திறமை பெற்றிருந்த முத்தப்பர் குன்றக்குடி முருகன் பேரில் பதிகம் பாடி அருட் புலமை பெற்றார். தமது குல வழக்கமான வணிகத்தில் ஈடுபடாது தமிழை வளர்ப்பதில் ஈடுபட்டார். முருகனின் அருளால் சொல்பலிதமும் ஏற்பட்டது. பாடிய மாத்திரத்தில் ஏதும் நடந்துவிடும் அளவுக்கு அவருடைய சொல்லாற்றல் விளங்கியது. இதனால் அவர் பாடுவார் முத்தப்பர் என அழைக்கப்பட்டார்.

எழுதிய நூல்கள்

  • பழந்தமிழ் வரலாற்றுச் செய்திகளும், நகரத்தார் சமூகம் பற்றிய அரிய குறிப்புகளும் அடங்கிய நகர வாழ்த்து என்ற செய்யுள் நூலை இயற்றினார்.
  • நேமம் சிவன் கோயிலில் வீற்றிருக்கும் செயங்கொண்ட சோழீசரைப் பற்றி செயங்கொண்டார் சதகம் என்ற பெயரில் பாடியுள்ளார். 100 பாடல்களைக் கொண்ட இந்தச் சதகத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு பழமொழியை இணைத்துள்ளார். இது 1893 ஆம் ஆண்டில் அச்சாகியது.
  • திருமுக விலாசம்
  • குதிரையடி என்ற சிற்றிலக்கியம்
  • குளுவ நாடகம்
  • பழனியாண்டவர் பதிகம்
  • குன்றக்குடி முருகன் பதிகம்
  • பழநியாண்டவர் பதிகம்

செயங்கொண்டார் பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழியை இணைத்துள்ளார்.

தன்னுடைய நகர வாழ்த்து பனுவலில் நாட்டுக் கோட்டை நகரத்தாரின் பழக்க வழக்கங்களையும், திருமண நெறிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளார். எனவே அந்த நூல் ‘சமூகக் கொடை’ என்ற சிறப்பினைப் பெற்றது. மேலும் நகரத்தார் மரபில் உதித்த முதல் புலவராகக் கருதபட்டவர். "பாட்டறப் புலவர்", "பைந்தமிழ்ப் பாவலர்" என்று புகழப்பட்ட முத்தப்பர் தன்னுடைய இறப்பைக் கூட முன்னரே நயம்படத் தமிழ்க் கவிதையாக்கி வழங்கியிருந்தார்.

உசாத்துணை

  • குன்றக்குடி பெரியபெருமாள், தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள், சென்னை: 1996

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.