பா. ராகவன்

பா. ராகவன் (பிறப்பு: அக்டோபர் 8, 1971) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். புதினங்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் வரலாற்று நூல்களையும் எழுதியிருக்கிறார். தமது படைப்பிலக்கியப் பங்களிப்புகளுக்காக பாரதிய பாஷா பரிட்சத்[1] விருது பெற்றவர்.

பா. ராகவன்

பிறப்பு பா. ராகவன்
8 அக்டோபர் 1971 (1971-10-08)
சென்னை, தமிழ்நாடு
தொழில் எழுத்தாளர்
நாடு இந்தியர்
இனம் தமிழர்
இலக்கிய வகை புதினம், சிறுகதை, அரசியல், வரலாறு
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
அலகிலா விளையாட்டு, அலை உறங்கும் கடல், பூனைக்கதை, யதி, டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம்
துணைவர்(கள்) ஆர். ரம்யா
பெற்றோர் ஆர். பார்த்தசாரதி
உறவினர்(கள்) மகள்: ஆர். பாரதி
www.writerpara.com

வாழ்க்கைக் குறிப்பு

பா. ராகவனின் தந்தை பெயர் ஆர். பார்த்தசாரதி. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். வழி வழியாகப் பள்ளிக் கல்வி ஆசிரியர்களாக இருந்த குடும்பத்தில் இருந்து வந்தவர். தலைமை ஆசிரியராக, மாவட்டக் கல்வி அதிகாரியாக, பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரும் ஓர் எழுத்தாளர் ஆவார். ஆர்.பி. சாரதி என்ற பெயரில் சிறுகதைகள், கவிதைகள் பல எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பில் தீவிர நாட்டம் கொண்டவர். பாபர் நாமாவைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். புகழ்பெற்ற வரலாற்றாசிரியரான ராமச்சந்திர குஹாவின் 'India after Gandhi' நூலைத் தமிழாக்கம் செய்தவர். இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் மகாவம்சத்தையும் தமிழாக்கம் செய்துள்ளார். பணி மாறுதல்களின்போது அவர் இடம் பெயர்ந்த இடங்களுக்கெல்லாம் சென்று பா. ராகவன் தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். பிறகு சென்னை தரமணி மத்திய தொழில் நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பயின்றார். அச்சமயமே பா. ராகவனின் குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்து, சென்னையை நிரந்தர வசிப்பிடமாக்கிக்கொண்டது.

பள்ளி நாள்களிலேயே எழுத்தார்வம் ஏற்பட்டு, பத்திரிகைகளில் கவிதைகள், துணுக்குகள் எழுத ஆரம்பித்தார் பா. ராகவன். இவரது முதல் எழுத்து முயற்சியான ஒரு குழந்தைப் பாடல் கோகுலம் சிறுவர் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதினார். ஆனால் எதுவும் பிரசுரமாகவில்லை. 1989ம் ஆண்டு எழுத்தாளர் ம.வே. சிவகுமாரின் தொடர்பும் நட்பும் கிட்டிய பின்பே எழுத்தின் சூட்சுமம் பிடிபட்டதாகச் சொல்கிறார்.

1990ம் ஆண்டு கி. கஸ்தூரி ரங்கன் ஆசிரியராக இருந்த கணையாழி மாத இதழில் இவரது சிறுகதை ஒன்று பிரசுரமானது. எழுத்துலகில் பா. ராகவன் கவனம் பெற அதுவே காரணமாக இருந்தது. 1992ம் ஆண்டு இறுதியில் கல்கி வார இதழில் இவர் எழுதிய 'மொஹஞ்சதாரோ' என்ற சிறுகதை அன்றைய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி தொடர்பாக எழுந்த கலவரங்களை மையப்படுத்தி, நையாண்டி கலந்த விமரிசனத்தை முன்வைத்தது. மிகுந்த வரவேற்பைப் பெற்ற அச்சிறுகதையின் வாயிலாகவே பா. ராகவன் பத்திரிகைப் பணிக்குள் நுழைந்தார்.

1992ம் ஆண்டு டிசம்பர் முதல் 2000வது ஆண்டு வரை கல்கி வார இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்பு குமுதம் வார இதழில் மூன்றாண்டுக் காலம் பணி புரிந்தார். குமுதம் ஜங்ஷன் இதழ் தொடங்கப்பட்டபோது அதன் ஆசிரியரானார்.

2004ம் ஆண்டு பத்திரிகைத் துறையை விட்டு விலகி, பதிப்புத் துறையில் பணி புரியத் தொடங்கினார். 'நியு ஹொரைசன் மீடியா' நிறுவனத்தின் கிழக்கு பதிப்பகம் தொடங்கப்பட்டபோது அதன் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று, அந்நிறுவனத்தின் 'நலம்', 'வரம்', 'ப்ராடிஜி' உள்ளிட்ட அனைத்துத் தமிழ் பதிப்புகளையும் திறம்படத் துலக்கம் பெறவைத்தார். தமது பதிப்பாசிரியர் பணிக்காலத்தில் சுமார் ஆயிரம் புத்தகங்களைக் கொண்டு வந்தார். தமிழ் பதிப்புத் துறையில் 'கிழக்கு பதிப்பக'த்தின் தோற்றமும் பா. ராகவன் அதில் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட புத்தகங்களும் இன்றும் பிரபலமாகப் பேசப்படுபவை.

2011ம் ஆண்டின் மத்தியில் பதிப்புத் துறையில் இருந்து விலகிய பா. ராகவன் அதன்பின் முழு நேர எழுத்தாளராக உள்ளார். இதுவரை பத்து நாவல்களும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல் வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். சென்னை குரோம்பேட்டையில் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.

எழுத்துப் பணிகள்:

இரண்டாயிரமாவது ஆண்டு வரை சிறுகதைகளும் நாவல்களும் மட்டும் எழுதிக்கொண்டிருந்த பா. ராகவன், குமுதம் வார இதழில் பணி சேர்ந்த பின்பு பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றினை ஒரு தொடராக எழுதினார். அதன் வெற்றிக்குப் பின்பு டாலர் தேசம் [அமெரிக்க அரசியல் வரலாறு], நிலமெல்லாம் ரத்தம் [இஸ்ரேல்-பாலஸ்தீன் சிக்கல்களின் வரலாறு], மாயவலை [சர்வதேச தீவிரவாத வலைப்பின்னல் குறித்த விரிவான ஆய்வு நூல்] உள்ளிட்ட ஏராளமான அபுனை நூல்களை எழுதினார். லட்சக்கணக்கான தமிழ் வாசகர்களுக்கு சர்வதேச அரசியல் விவகாரங்களை சிக்கலற்ற எளிய மொழியில் விவரிப்பவர் என்று பெயர் பெற்றார். பல்லாண்டுக் காலமாக அரசியல் நூல்களை மட்டுமே எழுதிக்கொண்டிருந்த பா. ராகவன், 2017ம் ஆண்டு தமது 'பூனைக்கதை' என்ற நாவலின் மூலம் மீண்டும் படைப்பிலக்கியத்துக்குள் திரும்பினார்.

"பூனைக்கதை கலைத்துறை சார்ந்த ஒரு நாவல். ஆனால் வண்ணமோ வாசனையோ சற்றும் இல்லாத அதன் ஒரு பகுதியை மட்டும் இது சித்திரிக்கிறது. கண்ணீரும் இல்லாத, புன்னகையும் இல்லாத ஒரு பேருலகம். இங்கும் மனிதர்கள் வசிக்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள். கஷ்டப்படுகிறார்கள். சமயத்தில் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள். இருப்பதும் இறப்பதும் இங்கும் நிகழ்கிறது. கலையுலகம்தான். ஆனால் இதன் முகமும் அகமும் வேறு. நீங்கள் இதுவரை இந்த உலகத்துக்குள் நுழைந்து பார்த்திருக்க மாட்டீர்கள். இப்போது பார்க்கலாம்." என்று தமது பூனைக்கதை குறித்து பா. ராகவன் குறிப்பிடுகின்றார். நெடுங்காலமாகத் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் வசனகர்த்தாவாகப் பங்கேற்று வந்த தமது அனுபவங்களின் அடிப்படையில் தொலைக்காட்சித் தொடர்களின் உலகினை, அதன் இருள் மூலைகளை இந்நாவலில் காட்சிப் படுத்தியிருக்கிறார்.

பூனைக்கதைக்குப் பிறகு யதி என்ற நாவலினை எழுதி வெளியிட்டார். இது சன்னியாசிகளின் உலகில் சுற்றிச் சுழலுகின்ற கதை. தனது கல்லூரிக் காலத்துக்குப் பின்பு சிறிது காலம் தீவிர ஆன்மிக வேட்கை உண்டாகி, பல சாதுக்கள், சன்னியாசிகளுடன் சுற்றித் திரிந்தவர் பா. ராகவன். மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைமைத் துறவியாக அப்போதிருந்த சுவாமி தபஸ்யானந்தாவின் சந்திப்புக்குப் பின் அவரால் அமைதிப்படுத்தப்பட்டு, துறவைக் காட்டிலும் எழுத்தே மீட்சிக்கு வழியென உணர்ந்து திரும்பியதாகக் கூறுகிறார்.

படைப்புகள்

புதினங்கள்

  • அலை உறங்கும் கடல்
  • புவியிலோரிடம்
  • மெல்லினம்
  • அலகிலா விளையாட்டு
  • தூணிலும் இருப்பான்
  • ரெண்டு
  • கொசு
  • கால் கிலோ காதல் அரை கிலோ கனவு
  • பூனைக்கதை [2017]
  • யதி [2018]

சிறுகதைத் தொகுப்புகள்

  • மூவர்
  • பறவை யுத்தம்
  • நிலாவேட்டை
  • குதிரைகளின் கதை
  • மாலுமி [2018]

அரசியல் வரலாறுகள்

  • மாயவலை - சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் பற்றிய விரிவான ஆய்வு
  • பாக். ஒரு புதிரின் சரிதம் - பாகிஸ்தானின் அரசியல் வரலாறு
  • டாலர் தேசம் (அமெரிக்காவின் அரசியல் வரலாறு)
  • 9/11 : சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி (2004)
  • நிலமெல்லாம் ரத்தம் (2005)
  • அல் காயிதா : பயங்கரத்தின் முகவரி (2005)
  • ஹிஸ்புல்லா : பயங்கரத்தின் முகவரி (2006)
  • இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் (2006)
  • ஹிட்லர் (2006)
  • அன்புடையீர் நாங்கள் பயங்கரமானவர்கள் (ஸ்பெயினின் ETA போராளிகளைப்பற்றியது)
  • தாலிபன்
  • ஜமா இஸ்லாமியா
  • ஐ.எஸ்.ஐ: நிழல் அரசின் நிஜ முகம்
  • பர்வேஸ் முஷரஃப்
  • மாவோயிஸ்ட்: அபாயங்களும் பின்னணிகளும்
  • ஆர்.எஸ்.எஸ் - வரலாறும் அரசியலும்
  • காஷ்மீர்
  • சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு
  • ஆயில் ரேகை
  • பிரபாகரன் - வாழ்வும் மரணமும்
  • கலவரகாலக் குறிப்புகள்
  • ஆடிப்பாரு மங்காத்தா
  • பொன்னான வாக்கு
  • ஐ.எஸ்.ஐ.எஸ் - கொலைகாரன்பேட்டை

தனிக் கட்டுரை நூல்கள்

  • ஜெயித்த கதை
  • 154 கிலோபைட்
  • 24 கேரட்
  • ஓப்பன் டிக்கெட்
  • எக்சலண்ட்!
  • உணவின் வரலாறு
  • மூன்றெழுத்து
  • பின்கதை சுருக்கம்
  • யானி: இசைப் போராளி

நகைச்சுவை நூல்கள்

  • அன்சைஸ்
  • குற்றியலுலகம்
  • இங்க்கி பிங்க்கி பாங்க்கி
  • சந்து வெளி நாகரிகம்

வாழ்க்கை வரலாறு

  • பொலிக பொலிக - ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு

சிறுவர் நூல்கள்

  • அமெரிக்க சுதந்தரப் போர்
  • இஸ்லாம்
  • மொசார்ட்
  • இரண்டாம் உலகப் போர்
  • மகாவீரர்
  • புதையல் தீவு
  • ஐஸ் க்ரீம் பூதம்

திரைப்படங்கள்

பா. ராகவன் இரண்டு திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.

  • கனகவேல் காக்க [2010]
  • தம்பி வெட்டோத்தி சுந்தரம் [2011]

தொலைக்காட்சித் தொடர்கள்

  • வாணி ராணி (சன் டிவி)
  • கல்யாணப் பரிசு (சன் டிவி)
  • கண்மணி (சன் டிவி)
  • கெட்டி மேளம் (ஜெயா டிவி)
  • சிவசக்தி (சன் டிவி)
  • உதிரிப்பூக்கள் (சன் டிவி)
  • செல்லமே (சன் டிவி )
  • முந்தானை முடிச்சு (சன் டிவி)
  • மனெ தேவுரு (உதயா டிவி)
  • முத்தாரம் (சன் டிவி)
  • செல்லக்கிளி ( சன் டிவி )
  • தேவதை (சன் டிவி)
  • புதுக்கவிதை (விஜய் டிவி)
  • கல்யாணப்பரிசு (சன் டிவி )
  • சிவசங்கரி (சன் டிவி)
  • என் இனிய தோழியே (ராஜ் டிவி)
  • அருந்ததி (ராஜ் டிவி )

2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு டிசம்பர் வரை நீண்ட வாணி ராணி தொலைக்காட்சித் தொடர் தமிழில் வெளிவந்தவற்றுள் மிக நீண்ட தொலைக்காட்சித் தொடராகும். 1750 பகுதிகள் வெளியான இத்தொடர் முழுமைக்கும் வசனம் எழுதியவர் இவரே. இந்திய அளவில் இது ஒரு சாதனையாகக் கணிக்கப்படுகிறது.

விருதுகள்

  • பாரதிய பாஷா பரிஷத்
  • இலக்கியப்பீடம் சிறந்த நாவலாசிரியர் விருது ( அலகிலா விளையாட்டு - 2003)
  • திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு (மெல்லினம் நாவலுக்காக)
  • கம்பம் பாரதி இலக்கியப் பேரவை விருது (இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் - 2008)
  • சன் குடும்பம் சிறந்த வசன கர்த்தா விருது - வாணி ராணி தொடருக்காக [2018]
  • வாசகசாலை சிறந்த நாவலாசிரியர் விருது (பூனைக்கதை, 2018)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.