பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் -2

பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் - 2 என்பது இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணி ஆகஸ்ட் 2 1994 இல் நடத்திய அதிரடித் தாக்குதலைக் குறிக்கும். இது பலாலித் தளத்தின் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதலாகும்.

பின்னணி

1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல் என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் எதிர்பார்த்ததுபோல் அத்தாக்குதல் புலிகளுக்கு வெற்றியளிக்கவில்லை. அச்சண்டையில் 13 கரும்புலி வீரர்கள் கொல்லப்பட ஏனையோர் தளத்துக்குத் திரும்பினர்.

இந்த தோல்வியடைந்த தாக்குதலில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்தி மீண்டும் பலாலித் தளத்தின் மீதான கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்குத் திட்டமிடப்பட்டது.

தாக்குதல்

கெனடி எனப்படும் நிலவன் தலைமையில் தாக்குதலுக்கான அணி நகர்ந்தது. (நிலவன், அச்சமரில் விழுப்புண்ணடைந்து மயங்கிய நிலையில் இலங்கை இராணுவத்தினரிடம் பிடிபட்டு நீண்டகாலம் சிறையிலிருந்து பின்னர் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டார்.)

நகர்வின்போது இடையில் எதிர்பாராத விதமாக இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் தாக்குதலணி சிதறிவிட்டது. தன்னுடன் எஞ்சியிருந்த வீரர்களை அழைத்துக்கொண்டு இரவோடிரவாக விமானப்படைத் தளத்தினுள் ஊடுருவினார் அணித்தலைவர் நிலவன் அல்லது கெனடி.

ஆகஸ்ட் 2 1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலி அணியினர் அதிரடித் தாக்குதலைத் தொடங்கினர். அத்தாக்குதலில் 'பெல் 212' ரக உலங்குவானூர்தியொன்று புலிகளால் அழிக்கப்பட்டது. ஏற்கனவே எதிரியுடன் ஏற்பட்ட மோதலில் படையினரின் பவள் கவச வாகமொன்றும் தகர்க்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து நடந்த சண்டையில் கரும்புலியணியில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அணியிலிருந்து சிதறியிருந்த ஏனையவர்கள் சில நாட்களின் பின்னர் பாதுகாப்பாகத் தளம் திரும்பினர்.

இத்தாக்குதலில் கொல்லப்பட்ட கரும்புலிகள்

  • கரும்புலி கப்டன் நவரட்ணம்
  • கரும்புலி லெப். ரங்கன்
  • கரும்புலி மேஜர் ஜெயம்
  • கரும்புலி மேஜர் திலகன்
  • கரும்புலி கப்டன் திரு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.