பர்கனா

பர்கனா (pargana) (இந்தி: परगना, parganā) என்பது தில்லி சுல்தானகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பர்கனா எனில் நிலப்பரப்பை அளவிடும் முறையாகும். வேளாண் நில அலகு எனப்படும் பர்கனா என்ற சொல் பாரசீக மொழிச் சொல்லாகும். ஒரு பர்கனா என்பது மௌசா (mouza) எனப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிராமங்களின் சிறு தொகுப்பாகும். பர்கனாவின் பெரிய தொகுப்பிற்கு தரஃபு (கால் பகுதி) எனப்படும்.[1]

சேர் சா சூரியின் ஆட்சிக் காலத்தில் பர்கனாக்களின் நிர்வாகத்தை வலுப்படுத்த கிராம அளவில் காவலர் (தலையாரி) (Shiqdar), நாட்டாண்மை அல்லது முன்சீப் (Amin or Munsif), கர்ணம் (கணக்குப் பிள்ளை-karkun or record keeper) போன்ற பதவிகள் ஏற்படுத்தப்பட்டது.

மொகலாயர் காலம்

மொகலாயர் ஆட்சியின் போது பதினாறாம் நூற்றாண்டில் அக்பர் மொகலாய பேரரசை பெரு நிலப்பரப்பை சுபா (province) என்றும், சுபாக்களை சர்க்கார் எனப்படும் மாவட்டங்களாக பிரித்தார். சர்க்கார் எனும் பகுதிகளை பர்கனாக்கள் என பிரிக்கப்பட்டது.

ஒவ்வொரு பர்கனாவும் தனக்குரிய பாரம்பரிய நிலவரி, வாடகை, கட்டணங்கள், கூலி மற்றும் அளவை முறைகள் கொண்டிருக்கும்.

ஆங்கிலேயர் காலம்

பிரித்தானியர் காலத்தில் பர்கனா நில அலகு முறை முதலில் ஏற்கப்பட்டாலும், பின்னர் 1793-ஆம் ஆண்டில் கவர்னர் ஜெனரல் காரன் வாலிஸ் காலத்தில் பர்கனா முறை ஒழிக்கப்பட்டு, ஜமீந்தாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. நிலப்பரப்புகள் மாகாணம், மாவட்டங்கள், வருவாய் வட்டங்கள், வருவாய் கிராமங்கள் என பிரிக்கப்பட்டது. நில அளவைத் துறையால் அனைத்து நிலங்கள் ஏக்கர், செண்ட் மற்றும் சதுர அடி கணக்கில் அளக்கப்பட்டு உரிய பதிவேடுகளில் பதியப்பட்டது.

விடுதலை இந்தியாவில்

இந்திய விடுதலைக்குப் பின்னர் பர்கனா முறை அடியோடு மறைந்து விட்டது. ஆனால் பர்கனா என்ற பெயர் வங்காளப் பகுதிகளில், குறிப்பாக தெற்கு 24 பர்கனா மாவட்டம் மற்றும் வடக்கு 24 பர்கனா மாவட்டங்களில் பேச்சு வழக்கில் மட்டும் உள்ளது.

மேற்கோள்கள்

  • Hunter, William Wilson, Sir, et al. (1908). Imperial Gazetteer of India, Volume 12. 1908-1931; Clarendon Press, Oxford.
  • Markovits, Claude (ed.) (2004). A History of Modern India: 1480-1950. Anthem Press, London.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.