பர்ஃபி!

பர்ஃபி! (Barfi!) என்பது 2012 ஆம் ஆண்டு வெளியான இந்தித் திரைப்படம். இப்படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரித்தவர் அனுராக் பாசு, இத்திரைப்படத்தில் ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா, இலியானா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்பதற்கு இந்திய அரசு பரிந்துரைத்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இத்திரைப்படம் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது. டார்ஜிலிங் நகரத்தில் படப்பிடிப்பு நடந்தது. இது நகைச்சுவையான திரைப்படம் ஆகும்.

கதை சுருக்கம்

பர்பி(ரன்பீர் கபூர்) காது கேளாத, வாய் பேச முடியாத ஒரு அழகு இளைஞன். இயற்கை தனது அழகையெல்லாம் கொட்டி வரைந்திருக்கும் மலை முகடுகளில் ஒன்றான டார்ஜிலிங்கில் வசிக்கிறான். தந்தைக்கு ஏற்படும் வேலை மாற்றல் காரணமாக, டார்ஜிலிங் வரும் சுருதியை (இலியானா ) கண்டவுடன் காதல் கொள்கிறான். சுருதி ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டவள் என்று தெரிந்தும் காதலிக்கிறான். பர்பியின் சாகசங்கள், குறும்பு கொண்ட விளையாட்டுத்தனம் சுருதியை வெகுவாக கவர்கின்றன. அவளும் பர்பியை விரும்புகிறாள்.

விஷயம், சுருதியின் அம்மாவுக்கு தெரியவர, தனது பழைய காதல் அனுபவத்தை அறிவுரையாக சொல்லி, சுருதியின் மனதை மாற்றுகிறாள். அவளுக்கு நிச்சயம் செய்யப்பட்ட மணமகனையே மணம் முடித்து, கொல்கத்தா செல்கிறாள் சுருதி. காதலில் தோற்று விரக்தியுடன் இருக்கும் பர்பியின் தந்தைக்கு சிறுநீரகம் பழுதடைகிறது. ரண சிகிச்சைக்கு பணம் தேடி அலையும் பர்பி, தனது சிறுவயது பணக்காரத் தோழியான, ஆட்டிச பாதிப்புக் கொண்ட ஜில்மில்லை(பிரியங்கா சோப்ரா) கடத்திச் சென்று பணம் பறிக்க திட்டமிடுகிறான். இதில் நடக்கும் குளறுபடிக்கு நடுவில், ஜில்மில்லுக்கு தன் மேல் உள்ள பாசத்தை அறிந்து, அவளை பர்பி நேசிக்க தொடங்குகிறான். டார்ஜிலிங் காவல் அதிகாரி(சௌரப் சுக்லா) இருவரையும் தேடத் துவங்க, ஜில்மில்லும், பர்பியும் கொல்கத்தா வர நேர்கிறது.

தற்செயலாக, கொல்கத்தாவில்  தான் வேலை செய்யும் இடத்தில் பொருள்கள் வாங்க வரும் சுருதியை பர்பி பார்க்க நேர்கிறது. அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, ஜில்மில்லை அறிமுகம் செய்து வைக்கிறான். ஒருநாள், மூவரும், கடைவீதியில் சிற்றுண்டி சாப்பிடுகையில், ஜில்மில் காணாமல் போகிறாள். ஜில்மில் கிடைத்தாளா? சுருதியின் வாழ்க்கை என்ன ஆனது? பர்பியின் கதி என்ன? என்ற பல கேள்விகளுக்கு விடையுடன் படம் முடிவடைகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.