பரராசசேகரன்

பரராசசேகரன் என்பது, யாழ்ப்பாண இராசதானியை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் குடியைச் சேர்ந்த மன்னர்கள், தங்களுக்கு மாறிமாறி வைத்துக்கொண்ட அரியணைப் பெயர்களுள் இரண்டில் ஒன்றாகும். இன்னொரு பெயர் செகராசசேகரன் என்பதாகும்.

யாழ்ப்பாண வைபவமாலையோ, வையாபாடலோ கைலாயமாலையோ யாழ்ப்பாணத்து அரசர்களின் அரியணைப் பெயர்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. பின்வந்த ஆய்வாளர்கள், மேற்படி நூல்களையும், பிற்காலத்தில் போத்துக்கீசரால் எழுதப்பட்ட நூல்களையும் வேறு ஆவணங்களையும் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணத்து அரசர்கள் அரியணைப்பெயர்களைக் கொண்டிருந்தனர் என்ற முடிவுக்கு வந்தனர்.

இக்குடியின் இரண்டாவது மன்னனில் தொடங்கி, 1450 இல் சப்புமால் குமாரயா என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது வரை ஐவர் பரராசசேகரன் என்னும் பெயரைத்தாங்கி ஆட்சி புரிந்துள்ளனர் என்கிறார் யாழ்ப்பாணச் சரித்திரம் [1]என்னும் நூலை எழுதிய செ. இராசநாயகம். பதினேழு ஆண்டுகளின் பின் மீண்டும் இக்குடி ஆட்சிக்கு வந்தது. 1620 இல் போத்துக்கீசர் முற்றாக யாழ்ப்பாணத்தை ஆட்கொள்ளும் வரை மேலும் ஐவர் இப் பெயருடன் ஆட்சி செய்துள்ளனர்.

இராசநாயகத்தின் குறிப்பிட்டபடி, பரராசசேகரன் என்னும் பெயர்கொண்ட யாழ்ப்பாண மன்னர்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  1. குலசேகரன் - (1246 - 1256)
  2. விக்கிரமன் - (1279 - 1302)
  3. மார்த்தாண்டன் - (1325 - 1348)
  4. வீரோதயன்- (1371 - 1394)
  5. குணவீரன் - (1417 - 1440)
  6. பெயர் தெரியாத மன்னன் - (1478 - 1519)
  7. புவிராஜபண்டாரம் - (1561 - 1565)
  8. காசிநயினார் - (1565 - 1570)
  9. புவிராஜபண்டாரம் - (1582 - 1591)
  10. எதிர்மன்னசிங்கம் - (1591 - 1615)

குறிப்புகள்

  1. இராசநாயகம் செ.,Ancient Jaffna, Colombo, 1926, AED மறுபதிப்பு: புதுடில்லி, 1993
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.