பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம்

பன்னாட்டுக் காற்பந்துச் சங்க வாரியம் (International Football Association Board, IFAB[1]) காற்பந்தாட்டம் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் தீர்மானிக்கும் அமைப்பு ஆகும்.

பன்னாட்டுக் காற்பந்துச் சங்க வாரியம்
(ஐஎஃப்ஏபி)
உருவாக்கம்1886
சேவைப் பகுதிஉலகெங்கும்
உறுப்பினர்கள்
எஃப்ஏ
எஸ்எஃப்ஏ
எஃப்ஏடபுள்யூ
ஐஎஃப்ஏ
ஃபிஃபா

செயற்பாடு

பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம் ஐக்கிய இராச்சியத்தின் ஒவ்வொரு முன்னோடியான காற்பந்துச் சங்கங்களும் —இங்கிலாந்தின் கால்பந்துச் சங்கம் (எஃப்ஏ), இசுக்கொட்லாந்தின் இசுக்கொட்லாந்து கால்பந்துச் சங்கம் (எஸ்எஃப்ஏ), வேல்சின் வேல்சு கால்பந்துச் சங்கம் (எஃப்ஏடபுள்யூ) மற்றும் வடக்கு அயர்லாந்தின் அயர்லாந்து கால்பந்துச் சங்கம் (ஐஎஃப்ஏ)—காற்பந்தாட்டத்திற்கான உலக கட்டுப்பாட்டு அமைப்பான பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பும் பங்கேற்கும் அமைப்பாகும். ஒவ்வொரு ஐக்கிய இராச்சியத்தின் சங்கத்திற்கும் ஒரு வாக்கும் பிபாவிற்கு நான்கு வாக்குகளும் உள்ளன. இந்த வாரியத்தின் முடிவுகள் முக்கால்வாசி வாக்குகளைப் பெற்றாலே, அதாவது ஆறு வாக்குகள், அங்கீகரிக்கப்பட்டதாகும். எனவே இந்த வாரியத்தின் முடிவுகளை செயலாக்க ஃபிஃபாவின் ஆதரவு இன்றியமையாதது; ஆனால் அது மட்டுமே விளையாட்டு விதிகளை மாற்றவியலாது. குறைந்தது இரண்டு ஐக்கிய இராச்சிய சங்கங்கள் உடன்பட வேண்டும். மேலும் கூட்டம் நடத்த ஐந்து உறுப்பினர் சங்கங்களில் குறைந்தது நான்கு சங்கங்களாவது பங்கேற்க வேண்டும்; அதில் ஃபிஃபாவின் பங்கேற்பு கட்டாயமானது.


ஒருமுறை ஆட்ட விதிகளை வேண்டுமானால் மாற்றுவதற்காகவும் பிறிதொருமுறை தனது உள்நிர்வாக விடயங்களுக்காகவுமாக இந்த வாரியம் ஆண்டுக்கு இருமுறை கூடுகிறது. முதல் கூட்டம் வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) எனவும் இரண்டாவது வருடாந்திர செயற்பாட்டுக் கூட்டம் (Annual Business Meeting,ABM) எனவும் அழைக்கப்படுகிறது. வருடாந்திர பொதுக்கூட்டதிற்கு நான்கு வாரங்கள் முன்பே உறுப்பினர் சங்கங்கள் தங்கள் வழிமொழியுரைகளை நடத்தும் சங்கத்தின் செயலாளருக்கு அனுப்பிட வேண்டும். ஃபிஃபா அனைத்து பரிந்துரைகளையும் அச்செடுத்து தனது அனைத்துச் சங்கங்களுக்கும் அனுப்புகிறது. இந்த பொதுக்கூட்டம் பொதுவாக பெப்ரவரி அல்லது மார்ச்சு மாதத்திலும் செயற்பாட்டுக் கூட்டம் செப்டம்பர் அல்லது அக்டோபரிலும் நடைபெறுகிறது. [2] தேவையேற்படுமானால், இந்த இரண்டுக் கூட்டங்களைத் தவிர சிறப்புக் கூட்டம் ஒன்றை வாரியம் நடத்தலாம். திசம்பர் 2012 நிலவரப்படி கடைசி சிறப்புக் கூட்டம் சூரிக்கு நகரில் சூலை 5, 2012 இல் நடத்தப்பட்டது.[3]

ஒவொரு ஆண்டு வருடாந்திர பொதுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் சூலை 1 முதல் அனைத்துக் கூட்டமைப்புக்கள் மற்றும் உறுப்பினர் சங்கங்களைக் கட்டுப்படுத்தும். ஆனால் நடந்துகொண்டிருக்கும் காற்பந்தாட்டப் பருவம் சூலை 1 அன்று முடிவுறாவிட்டால் அந்த உறுப்பினர் சங்கங்கள் மட்டும் புதிய விதிகளை கடைபிடிப்பதை அடுத்த பருவம் வரை தள்ளிப் போடலாம். [4]

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.