பனிக்கட்டி உடைதூண்

பனிக்கட்டி உடைதூண் அல்லது இசெராக் (serac) என்பது, பனியாறுகளில் ஏற்படக்கூடிய பனி உடைப்புகள் அல்லது பனிப்பாறைப் பிளவு (crevasses) ஒன்றையொன்று முட்டியும் வெட்டியும் உருவாகும் பெரிய பனிக்கட்டிப் பாளங்கள் அல்லது தூண்கள் ஆகும். இவை ஒரு வீட்டின் அளவினதாகவோ அல்லது அதனிலும் பெரியதாகவோ இருக்கக்கூடும். இவை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென விழுந்து விடக்கூடும், ஆதலால் இவை மலையேறுபவர்களுக்குப் பெரும் தீங்கை (ஆபத்தை) விளைவிக்கக் கூடியனவாக உள்ளன. தொடர்ச்சியான குளிரான தட்பவெப்பநிலை காரணமாக இவை உறுதி ஏற்பட்டு இருக்கக் கூடிய நிலை ஏற்படுமாயினும் இவை பனியாறுகளைக் கடந்து செல்லும் பொழுது தீநிகழ்வூட்டக்கூடிய இடையூறாக அமைகின்றன.

பனியருவிகளில் அல்லது சரிந்து அமைந்திருக்கும் பனியாற்றுப் பகுதிகளின் கீழ்ப்பகுதிகளில் பனி உடைதூண் அல்லது இசெராக் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. பின்னதற்கு எடுத்துக்காட்டாக ஆல்ப்சு மலையில் உள்ள பிசு ரோசெகு (Piz Roseg) இன் வடகிழக்குச் சரிவுமுகமும், டென்ட் டி-எரென்சு (Dent d'Hérens) இன் வடப்பகுதியும், லைசுக்கம் (Lyskamm) இன் வட சரிமுகமும் இருக்கின்றன. இவ்வகைப் பனி உடைதூண்கள் உலகின் மிக உயர்ந்த மலைகளில் உள்ள நன்கறிந்த தீய இடையூறுகள் ஆகும். குறிப்பாக கஞ்சன்சுங்கா மலையில். உலகின் இரண்டாவது மிக உயரமான மலையாகிய கே-2 மலையில் ஆகசுட்டு 2008 இல் ஏறிய 11 பேர்களில் மிகப்பலர் இறக்கக் காரணமாக இருந்தது இந்த பெரும் பனி உடைதூண்களே.

படங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.