படிகவியல்

படிகவியல் அல்லது படிகவுருவியல் (crystallography) என்பது, திண்மங்களில் அணுக்களின் ஒழுங்கமைப்புக்களை ஆராயும் அறிவியற் துறை ஆகும். முன்னர் படிகங்கள் பற்றிய அறிவியல் என்ற பொருளிலேயே இச் சொல் பயன்படுத்தப்பட்டது.

ஊடுகதிர் விளிம்பு வளைவுப் படிகவுருவியல் (X-ray diffraction crystallography) வளர்ச்சியடைவதற்கு முன்னர், படிகங்கள் பற்றிய ஆய்வு அவற்றின் வடிவவியல் தன்மைகளின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. இது, அவற்றின் முகங்கள் அமைந்துள்ள கோணங்களை அவற்றின் அச்சுக்கள் தொடர்பில் அளத்தல், படிகங்களின் சமச்சீர்த் தன்மைகளை நிறுவுதல் என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. படிக முகங்களின் கோணங்கள் கோனியோமானி (goniometer) என்னும் கருவியினால் அளக்கப்படுகின்றன. ஒவ்வொரு படிகத்தினதும் முகங்களின் இடங்கள் வுல்ஃப் வலை (Wulff net) அல்லது லம்பர்ட் வலை (Lambert net) போன்ற ஒரு முப்பரிமாண வலையமைப்பில் வரையப்படுகின்றன.

தற்காலத்தில் படிகவுருவியல் முறைகள், மாதிரிப் படிகம் ஒன்றின்மீது செலுத்தப்படும் ஏதாவது ஒருவகைக் கற்றையில் ஏற்படும் விளிம்பு வளைவுகளைப் பகுத்தாய்வதில் தங்கியுள்ளது. ஊடுகதிர்களே (X-rays) பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன எனினும், இக் கற்றை எப்பொழுதுமே மின்காந்தக் கதிர்வீச்சாக இருப்பதில்லை. சில தேவைகளுக்கு இலத்திரன்களும், நியூத்திரன்களும் பயன்படுத்தப்படுகின்றன. துகள்களின் அலைப் பண்புகளினால் இது சாத்தியமானதாக உள்ளது. பயன்படுத்தப் படும் முறைகளுக்கு ஏற்ப அவற்றின் பெயர்களை, ஊடுகதிர் விளிம்புவளைவு என்றோ, நியூத்திரன் விளிம்புவளைவு என்றோ, இலத்திரன் விளிம்புவளைவு என்றோ படிகவுருவியலாளர்கள் விளக்கமாகக் குறிப்பிடுவர்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.