நேரடி மக்களாட்சி

தூய மக்களாட்சி என்றும் அழைக்கப்படும் நேரடி மக்களாட்சி என்பது, ஒரு வகை மக்களாட்சி முறையும், குடியியல் கோட்பாடும் ஆகும். இம்முறையில் இறைமை பங்குபற்ற விரும்பும் எல்லா மக்களையும் கொண்ட ஒரு அவையிடம் அளிக்கப்பட்டிருக்கும். இம் முறை பயன்படுத்தப்படும் விதத்தைப் பொறுத்து, இந்த அவை தீர்மானங்களை நிறைவேற்றுதல், சட்டங்களை ஆக்கல், அதிகாரிகளைத் தேர்வு செய்தல் அல்லது நீக்குதல், விசாரணை நடத்துதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம்.

நேரடி மக்களாட்சி, சார்பாண்மை மக்களாட்சியினின்றும் வேறுபட்டது. சார்பாண்மை மக்களாட்சியில் இறைமை, மக்களால் தேர்தல் மூலம் சார்பாளர்களாகத் தெரிவு செய்யப்படும் ஒரு குழுவினரைக் கொண்ட அவையிடம் இருக்கும்.

சார்பாண்மை மக்களாட்சி முறையைப் பின்பற்றும் நாடுகளிற் சில ஓரளவு நேரடி மக்களாட்சியை வழங்கக்கூடிய மூன்றுவகை அரசியல் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்றன. இவை மக்கள் முன்முயற்சிக்கு இடமளித்தல், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு, திருப்பியழைக்கும் நடைமுறை என்பனவாகும். இம்மூன்று செயல்பாடுகளிலும் குறித்த சில விடயங்களில் மக்களின் நேரடியான பங்களிப்பு நிகழ்கின்றது. மக்கள் முன்முயற்சி என்பதில் பொதுமக்களில் ஒரு குறித்த எண்ணிக்கையானோர் கையொப்பம் இட்டு விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் அது தொடர்பான சில நடவடிக்கைகளை அரசு எடுப்பதற்கு வழி செய்யப்படுகின்றது. மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு என்பது அரசின் குறித்த நடவடிக்கை ஒன்றின் மீது மக்களின் கருத்தைக் கோரும் வழியாகும். பொதுவாக அவ்விடயத்தில் "ஆம்" அல்லது "இல்லை" என்ற வகையிலான இரண்டு விருப்பத்தேர்வுகளில் ஒன்றை மக்கள் தெரிவு செய்வர். இது மக்கள் அரசின் குறித்த ஒரு நடவடிக்கையை ஆதரிக்க அல்லது எதிர்க்க மக்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது. திருப்பியழைத்தல் என்பது, தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒருவரது பதவிக்காலம் முடியுமுன்பே அவரைப் பதவியிலிருந்து திருப்பி அழைப்பதற்கு மக்களுக்கு அளிக்கப்படும் ஒரு வாய்ப்பு ஆகும்.

வரலாறு

வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் மக்களாட்சி கிமு 5 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் நடைமுறையில் இருந்த ஏதேனிய மக்களாட்சி ஆகும். இது ஒரு நேரடி மக்களாட்சி. எனினும், அப்போது, பெண்களும், அடிமைகளும் வாக்களிக்க அனுமதிக்கப்படாததால் இது ஒரு உண்மையான மக்களாட்சி அல்ல என்று கருதுவோரும் உளர். ஏதேனிய மக்களாட்சியில் மூன்று கூறுகள் இருந்தன. ஒன்று, எல்லா ஆண் குடிமக்களையும் கொண்ட ஒரு அவை. இரண்டாவது இந்த அவையில் இருந்து குலுக்கிப் போடுவதன் மூலம் தெரிவு செய்யப்படும் 500 பேர்களைக் கொண்ட பூல் எனப்படும் ஒரு குழு. மூன்றாவது, குலுக்கல் மூலம் தெரியப்படும் ஏராளமான நடுவர்களை உள்ளடக்கிய நீதிமன்றம். இந் நீதி மன்றத்தில் நீதிபதிகள் இருப்பதில்லை. 30,000 குடிமக்களில் பல ஆயிரக்கணக்கானோர் ஒவ்வோராண்டும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். பலர் பல ஆண்டுகள் இவ்வாறு இயங்கினர். ஏதேனிய மக்களாட்சி, மக்கள் நேரடியாக முடிவுகளை மேற்கொண்டதால் மட்டும் நேரடியான மக்களாட்சியாக அமையவில்லை. இங்கே அரசின் மூன்று பிரிவுகளினூடாக மக்கள் முழு அரசியல் நடவடிக்கைகளையுமே நேரடியாகக் கட்டுப்படுத்தினர் என்பதும் முக்கியமானது ஆகும்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.