இறைமை

இறையான்மை (Sovereignty) என்பது ஓர் அரசின் அல்லது ஒரு நாட்டின் முக்கியக் கூறாக அமைவது. இது அரசின் முழுமையான அதிகாரம் ஆகும். அதாவது எவராலும் எதிர்க்கப்பட முடியாத முறியடிக்கப்பட முடியாத அரசியல் அதிகாரம் 'இறையான்மை' என அழைக்கப்படுகிறது.[1] சட்ட வரையறைகளையும் ஆட்சியதிகாரங்களையும் உருவாக்குவதற்கும், வேண்டியபோது நீக்குவதற்கும், மாற்றியமைப்பதற்கும் உள்ள தத்துவம் இறையான்மை எனப்படும். அரசினை உருவாக்குகின்ற நான்கு அடிப்படைக் கூறுகளுள் இன்றியமையாத ஒரு கூறு இறைமை ஆகும். மற்றவை மக்கள், நிலப்பரப்பு, அரசாங்கம் ஆகிய மூன்றாகும்.[2] இறைமை மக்களுக்குரிதாக இருப்பது சனநாயகத்தின் அடிப்படைப் பண்பாக கொள்ளப்படுகிறது.[3]

பெயர்க் காரணம்

இறைமை எனப்பொருள்படும் ஆங்கிலச் சொல் ' சாவரின்டி ((Sovereignty))என்பதாகும். இலத்தீன் மொழியில் 'சூப்பரானசு'(Superanus) என்ற சொல்லிலிருந்து பெற்றப்பட்டது. சூப்பரானசு என்றால் மேலானது என்று பொருள். அரசின் விருப்பம் அனைத்து மக்களையும் கட்டுப்படுத்தும் மேலாண்மை பெற்று மேலானதாகத் திகழ்கிறது. இந்த அரசின் விருப்பமே இறைமை எனப்படும். அரசின் எல்லைக்குள் அதன் விருப்பத்தை எவரும் எதிர்க்கப்பட முடியாத அதிகாரம் இறைமை ஆகும். ஓர் அரசின் அரசியல் ரீதியான வாழ்வைப் பிற அரசுகள் ஒப்புக்கொண்டு அதன் எல்லைகளை அங்கீகரித்து மதிப்பதும் இறைமையின் ஓர் அம்சமாகும்.[4]

அறிஞர்களின் விளக்கங்கள்

இறைமை பற்றி பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. இதன் வாயிலாக இறைமையின் சிறப்புத் தன்மைகளை உணரலாம்.

போதன்

மக்கள் மீதான எல்லையற்ற அதிகாரமே இறைமை. அரசின் இந்த அதிகாரத்தை எவரும் எதிர்க்க முடியாது.

டர்கய்ட்

அரசின் கட்டளையிடுகின்ற அதிகாரமே இறைமை. அரசின் எல்லைக்குள் வசிக்கின்ற குடிமக்கள் மீது நிபந்தனையற்ற ஆணைகளைப் பிறப்பிக்கின்ற அதிகாரம் அரசிற்குண்டு.

பர்கஸ்

அரசுக்கு மக்கள் மீதான- மூலமான முழுமையான வரையற்ற அதிகாரமே இறைமை

இறைமையின் சிறப்புத்தன்மைகள்

  • இறைமை முழுமையானது.(absolute)
  • அனைவருக்கும் பொருந்தும் தன்மையுடையது.(universality)
  • அரசிடமிருந்து பிரிக்கப்பட முடியாத தன்மையுடையது.(inalienability)
  • நிலையானது.(Permanent)
  • துண்டாக்க முடியாதது(indivisible)

இறைமையின் வகைகள்

பெயரளவிலான மற்றும் உண்மையான இறைமை

இறைமை ஒரு தனிநபர் அல்லது நபர்கள் அடங்கிய அமைப்பிடமோ இருக்கலாம். இறைமையைச் செலுத்துகின்ற நபர் அல்லது அமைப்பு இறைமையாளர்(sovereign) எனக் கொள்ளப்படும். அவ்வாறு இறைமையாளர் என ஏற்றுக் கொள்ளப்பட்டவரிடமோ அல்லது வேறு ஒரு நபரிடமோ அல்லது அமைப்பிடமோ இறைமை இருக்கலாம். இவ்வாறு உண்மையில் இறைமை செலுத்தபவரிடம் உள்ள இறைமை உண்மையான இறைமை என்ப்படும். பெயரளவிலான இறைமை வைத்திருப்பதைப் போன்ற தோற்றமளிப்பவர் பெயரளவிலான இறைமையாளர் எனப்டுவார். அவரிடமுள்ள இறைமையே பெயரளவிலான இறைமையாகும். அதாவது இங்கிலாந்து அரசியாரின் கைகளைல் இறைமை இருப்பது போல் தோன்றினாலும் அவர் அந்நாட்டின் பிரதமரையும் நாடாளுமன்றத்தையும் மீறி எதனையும் செய்துவிட முடியாது. எனவே அரசியாரைப் பெயரளவிலான இறைமையாளர் என்றும் பிரதமரை உண்மையான இறைமையாளர் என்றும் அழைக்கலாம்.[4]

சட்டரீதியான மற்றும் அரசியல் இறைமை

சட்டத்தின் அணுகுமுறையில் ஒப்புக்கொள்ளப்படும் இறைமையைச் சட்ட ரீதியான இறைமை என்பர். அதாவது சட்டம் மற்றும் அதனைக் காக்கின்ற நீதிமன்றங்களும் அங்கீகரிக்கின்ற இறைமையாகும். பிரித்தானிய நாடாளுமன்றம் இயற்றும் சட்ட்ங்களை அங்குள்ள நீதிமன்றங்கள் கூட செல்லாதவையாக்க முடியாது. எனவே அது சட்டரீதியான இறைமையைப் பெற்ற அமைப்பாகும். சட்டரீதியான இறைமைக்குப் பின்னணியாக இருப்பது அரசியல் இறைமையாகும். மக்கள் அனைவரும் அரசியல் இறைமையின் பிரதிநிதிகள் எனலாம். ஓர் அரசில் வாக்குரிமை பெற்ற வாக்காளர்கள் அரசியல் இறைமையாளர்கள் ஆவார்கள். சட்டரீதியான இறைமையைத் தேர்ந்தெடுப்பது அரசியல் இறைமையாகும். அரசியல் இறைமை மக்களால் உருவாக்கப்படுவதாகும்.[4]

உண்மைநிலை மற்றும் சட்டநிலை இறைமை

உண்மையான அதிகாரங்களைப் பெற்ரு இறைமையைக் கையாளுவது உண்மைநிலை இறைமை எனப்படும். சட்டரீதியாக அவ்வதிகாரத்துக்கு உரியவர் சட்டநிலை இறைமை உடையவர் எனப்படுவார். அதாவது சட்டரீதியாக இறைமையைக் கையாளவேண்டிய ஒருவரிடமிருந்து இறைமையை மற்றொருவர் கையாளலா. நெப்போலியன் சட்டரீதியாக அரியணைக்கான உரிமை பெற்றவரில்லை ஆனால் தன் தோள்வலிமையாளும், வாள்திறனாலும் பிரான்சின் இறைமையைக் கையாளும் நிலை பெற்றார். அதேபோல் பல அரசுகளில் சட்டரீதியாக ஆளுகின்ற நிலை பெற்றவர்களைக் கவிழ்த்துவிட்டு அல்லது கட்டுப்பாட்டிற்குள் வைத்து தலைவர்களோ அரசியல் அல்லது இராணுவத் தலைவர்களோ ஆட்சியைக் கைப்பற்றுவது வரலாற்றில் காணப்படுகிறது. அவ்வாறு அரசியல் அல்லது இராணுவ வலிமை மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் தளபதி உண்மைநிலை இறைமையாளர் ஆகிறார்.[4]

உள் இறைமை மற்றும் வெளி இறைமை

ஓர் அரசின் எல்லைகளுக்குட்பட்ட அனைத்து மக்கள் மீதும் அந்த அர்சி இறைமை அதிகாரத்தைப் பெற்றுள்ளது உள் இறை மை எனப்படும். அரசின் எல்லைக்குள் அதனுடைய அதிகாரத்தை எதிர்க்கும் வல்லமை எவர்க்கும் இல்லை. ஒவ்வொரு இறைமைபெற்ற அரசையும் மற்ற அரசுகள் அங்கீகரிக்கின்றன. அந்த அரசின் எல்லைகளை ஒப்புக்கொள்கின்றன. இவ்வாறு பிற அரசுகளால் ஓர் அரசு ஏற்கப்படுவதை வெளி இறைமை எனலாம். ஓர் அரசின் முழுமையான சுதந்திரமான செயல்பாட்டிற்கு உள் இறைமையும் வெளி இறைமையும் அவசியமாகின்றன.[4]

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. பி. கோமதிநாயகம் (2000). அரசியல் கோட்பாடுகள். தீபா பதிப்பகம். பக். 31.
  2. பி. கோமதிநாயகம், (2000). அரசியல் கோட்பாடுகள். தீபா பதிப்பகம். பக். 29.
  3. "sovereignty". பார்த்த நாள் நவம்பர் 18, 2012.
  4. பி. கோமதிநாயகம் (2000). அரசியல் கோட்பாடுகள். தீபா பதிப்பகம். பக். 73.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.