நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல்

நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் (land-use planning) என்பது, நிலப் பயன்பாட்டைச் செயல் திறனுள்ள வகையில், ஒழுங்கு படுத்தி முறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, பல்வேறு துறைகளையும் தழுவிய, ஒரு பொதுக் கொள்கை ஆகும்.

கனேடியத் திட்டமிடலாளர் நிறுவனம், நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலைப் பின்வருவாறு வரையறுத்துள்ளது:

நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல், என்பது, பௌதீக, பொருளாதார, சமூகச் செயல்திறன் கொண்ட வகையிலும், நகர்ப்புற, நாட்டுப்புற மக்களின் நல்வாழ்வையும், உடல் நலத்தையும் நோக்கமாகக் கொண்டும், நிலம், வளங்கள், வசதிகள், சேவைகள் ஆகியவற்றை, அறிவியல், அழகியல், மற்றும் ஒழுங்கமைவு சார்ந்த முறையில் ஒதுக்குவதைக் குறிக்கும்.

நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலின் செயற்பாடு

மிகவும் அடிப்படையான முறையில், நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலானது, வலயப்படுத்தல், போக்குவரத்து சார்ந்த உள்ளகக் கட்டமைப்பு என்பவற்றில் ஈடுபடுகின்றது. பொரும்பாலான வளர்ந்த நாடுகளில், நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலானது, சமூகக் கொள்கையின் முக்கிய பகுதியாக உள்ளது. இது, மக்களினதும், பரந்த பொருளாதாரத்தினதும் நன்மைக்காகவும், சூழல் பாதுகாப்புக்காகவும், செயல்திறன் கொண்டவகையில் நிலம் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் பின்வரும் துறைகளையும் தழுவியுள்ளது.

கட்டிடக்கலை, நகர்ப்புற வடிவமைப்பு, நிலத்தோற்றக் கலை, நகர்ப்புறப் புத்தாக்கம் என்பன, பௌதீக அமைப்பு, வளர்ச்சித் திட்டத்தின் அளவு, அழகியல், மாற்றுத் திட்டங்களுக்கான செலவின ஒப்பீடு, கட்டிடப் பொருட்கள் போன்றவை தொடர்பில் நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலுடன் தொடர்புபடுகின்றன.

சூழல்சார் திட்டமிடலானது, சூழலில் வளர்ச்சித் திட்டத் தீர்மானங்களின் தாக்கங்களை அறிவதற்கும் அளவிடுவதற்கும் உதவுகிறது. சாலைச் சத்த (roadway noise) மாதிரியமைப்பு, சாலை வளிப்பரவல் மாதிரியமைப்பு ( roadway air dispersion models), சாலை நீர்வடிதல் (surface runoff) மாதிரியமைப்பு போன்ற கணினி மாதிரியமைப்புக்கள் தொடர்பில் இத்துறை பங்களிப்புச் செய்கிறது.

இவ்வாறு பல துறைகளும் தொடர்பு பட்டிருப்பதனால், நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலாளர், கணினி மாதிரியமைப்புகள் (computer model), புவியியல் தகவல் முறைமை போன்றவற்றைப் பெருமளவுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். இவை, பகுப்பாய்வுக்கும், தீர்மானங்களை எடுப்பதற்கும் இவர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.