நாழிகை

நாழிகை என்பது பண்டைய கால நேர அளவாகும்.
தமிழர் இந்தக் கால அளவை முறையைப் பயன்படுத்தினர்.
தற்பொழுது, பெரும்பாலும் சோதிடம், பஞ்சாங்கம் முதலியவற்றில் பயன்படுத்தும் 24 நிமிடங்கள் கொண்ட ஒரு கால அளவு. பகல் முப்பது நாழிகை; இரவு முப்பது நாழிகை. எனவே, ஒரு நாளில் (பகல் + இரவு சேர்ந்து) அறுபது நாழிகைகள் உள்ளன.

1 நாழிகை = 24 நிமிடங்கள் = 60 விநாழிகை = 3600 லிப்தம் = 216000 விலிப்தம் = 12960000 பரா = 777600000 தத்பரா[1]
2.5 நாழிகைகள் = 1 ஓரை = 1 மணித்தியாலம் = 60 நிமிடங்கள்
3.75 நாழிகைகள் = 1 முகூர்த்தம்
7.5 நாழிகைகள் = 2 முகூர்த்தம் = 1 சாமம்
60 நாழிகைகள் = 8 சாமம் = 2 பொழுதுகள் = 1 நாள்
15 நாள் = 1 பட்சம் = 0.5 மாதம்

1 மனித ஆயுள் வட்டம் = 120 வருடங்கள் = 2 வட்டங்கள் = 240 அயனங்கள் = 1440 மாதங்கள்

ஒப்பீடு

தமிழ்க் கணிய அளவைநடப்பில் உள்ள மேலையர் அளவை
24 நிமிடம் = ஒரு நாழிகை
60 நாழிகை = ஒரு நாள்
60 நிமிடம் = ஒரு மணி
24 மணி ஒரு நாள்

நாழிகை அறிதல்

பண்டைக் காலத்தில் பானையில் குறையும் நீர் போக எஞ்சிய நீர் நிற்கும் நீரின் அளவைக் கொண்டு நாழிகையைக் கணக்கிட்டுச் சொல்லும் நாழிகைக் கணக்கர் அரசவையில் இருந்தனர். பொதுமக்கள் தன் நிழலைத் தானே அளந்து பார்த்துக் காலத்தைக் கணித்துக்கொண்டனர். சிலர் காட்டுப் புல்லை நிறுத்தியும் நாழிகையைக் கணக்கிட்டுவந்தனர். இரவு வேளையில் குறிப்பிட்ட சில விண்மீன்களைப் பார்த்துக் காலத்தைக் கணித்தனர்.

குறுநீர்க் கன்னல்

குறுநீர்க் கன்னல்

பண்டைய நாட்களில் நாழிகைக் கணக்கர் என்பவர்கள், குறுநீர்க் கன்னல் என்னும் கருவியைக் கொண்டு நாழிகையைக் கணக்கிட்டுக் கூறியதாக முல்லைப்பாட்டு குறிப்பிடுகிறது[2]

பொழுதளந்து அறியும் பொய்யா மாக்கள்
தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி
எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய் நின்
குறுநீர்க் கன்னல் இணைத்தென்று இசைப்ப [3]

புல்லை நிறுத்தி அளந்து அறிதல்

பாடல், விளக்கம் பக்கம் 57
பாடல், விளக்கம் பக்கம் 58

காட்டுத் துரும்பு எடுத்துக் கண்டம் பதினாறு ஆக்கி
நீட்டுக் கடந்தது போக நின்றது நாழிகை.

காட்டுத் துரும்பை எடுத்துக்கொள். காட்டுத்துரும்பு என்பது காட்டில் காய்ந்து கிடக்கும் சறுகம்புள்.[4] அதனை இரண்டு இரண்டாக மடக்கி 16 அளவீடுகளைக் குறிப்பதாக மாற்றிக்கொள். மடக்கிய அளவீட்டுப் பகுதி ஒன்றில் மடக்கி 'ட' எழுத்தைப் போல் நிலத்தில் நிறுத்து. வெயில் அதன்மீது விழட்டும். நிறுத்திய துரும்பின் உச்சியானது கிடைத் துரும்பின் முனையைத் தொடுமாறு ட முனையை மாற்று. இந்த நிலையில் கிடைநிலையில் உள்ள மடிப்புகளின் எண்ணிக்கையைக் கழித்துவிட்டு நிற்கும் நிலையில் உள்ள துரும்பில் உள்ள மடிப்புகளின் எண்ணிக்கையே அளக்கும் காலத்து நாழிகை ஆகும். முற்பகலில் அளக்கும்போது பகல்-பொழுதில் இத்தனை நாழிகை ஆயிற்று என்று நிற்கும் துரும்பின் அளவீடு காட்டும். பிற்பகலில் அளக்கும்போது நிற்கும் துரும்பின் அளவீட்டைக் கழித்துவிட்டுக் கிடைத்துரும்பின் அளவு எண்ணிக்கையை, முற்பகலில் கடந்துபோன 15 நாழிகைகளையும் கூட்டிப் பகல்-பொழுது இத்தனை நாழிகை ஆயிற்று எனக் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்.

விரல் நிழலால் நாழிகை அறிதல்

சுட்டால் விரல் மடக்கிச் சூரியனை வலமாக்கி
எட்டாம் விரல் இரட்டிக்க – முட்டாய் கேள்
அடியளந்து பார்த்து அலையநீ வேண்டாம்
நொடி அளவில் சொல்லும் இது.

காலடியால் நிலத்தை அளந்து பார்த்து நாழிகையைக் கணக்கிடாமல் கைவிரலை உயர்த்தி நாழிகை கணக்கிடும் முறை இது.

ஆள்-காட்டி விரல் என்னும் சுட்டு-விரலைச் செங்குத்தாக நிறுத்தி, பிற விரல்களை மடக்கி, சூரியன் வலப்புறம் இருக்கும்படி நின்றுகொண்டு, செங்குத்தாக உச்சி நோக்கி நிறுத்தப்பட்டுள்ள சுட்டு-விரலின் நிழல் மடக்கியுள்ள பிற விரல்களின்மேல் விழுமாறு செய்தல் வேண்டும். முற்பகல் 15 நாழிகை. மடக்கியுள்ள விரல்கள் மூன்று. சுண்டு-விரலில் நிழல் விழுந்தால் முதலாவது ஐந்து நாழிகை. மோதிர விரலில் நிழல் விழுந்தால் 5-10 நாழிகை. நடு-விரலில் நிழல் விழுந்தால் 11`-15 நாழிகை. பிற்பகலில் பார்க்கும்போது எதிர்-வரிசையில் அளவீடுகள் அமையும். இதனை முற்பகல் 15 நாழிகையுடன் கூட்டிக்கொள்ள வேண்டும்.

தன் நிழலை அளந்து நாழிகை அறிதல்

தன் காலடியால் தன் நிழலைத் தானே அளந்து பார்த்து, பொழுது புலர்ந்து எப்போது எத்தனை நாழிகை ஆயிற்று என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

தன் நிழலைத் தானே அளந்து கண்ட தப்படி எண்ணிக்கைபொழுது புலர்ந்து அப்போது இத்தனை நாழிகை ஆயிற்று என்பது
981
452
283
194
145
10.56
87
68
4.59
3.510
2.511
1.7512
113
0.514
தன் நிழல் தன் கீழ்15

பொழுது சாயும் காலத்தில் இந்த நிரல் எதிர்-திசையில் அளவிட்டு மதியம் வரையிலான 15 நாழிகையைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய கட்டுரை

இரவில் நாழிகை அளந்தறியும் முறையை விண்மீன் தொகுதி உருவம் என்னும் தலைப்பில் காணலாம்.

மேற்கோளும், குறிப்பும்

  1. சக்திக்குமரன் விஜயராகவன் (2010-09-10). "நாழிகை, விநாழிகை, லிப்தம், விலிப்தம், பரா, தத்பரா தெரியுமா?". பார்த்த நாள் 2013-12-15.
  2. ரிஷியா (2010-1/2-15). "பண்டைய நாழிகை காட்டிகள்". varalaaru.com. பார்த்த நாள் 2013-12-15.
  3. முல்லைப்பாட்டு : 55-58
  4. இது ஒரு முழ நீளத்துக்குக் குறையாமல் இருந்தால் ஏந்தாக இருக்கும்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.