நால்வர் நான்மணிமாலை
நால்வர் நான்மணிமாலை என்பது சைவ சமயக் குரவர்களான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரின் சமயப் பணி பற்றிக் கூறும் நூலாகும். இது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான நான்மணிமாலை என்னும் வகையைச் சார்ந்தது. வெண்பா, கலித்துறை, விருத்தப்பா, அகவற்பா என்னும் என்னும் நான்கு பா வகைகள் மாறிமாறி அமைந்த 40 பாடல்களினால் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. வெண்பாப் பாடல்கள் சம்பந்தர் பற்றியும், கலித்துறைப் பாடல்கள் திருநாவுக்கரசர் பற்றியும், விருத்தப்பாக்கள் சுந்தரர் பற்றியும், அகவற்பாக்கள் மாணிக்கவாசகர் பற்றியும் கூறுகின்றன. சைவசமயக் குரவர்கள் பற்றிய நூலாதலால் இதனைப் பெரிய புராணச் சுருக்கம் என்றும், குட்டிப் பெரியபுராணம் என்றும் குறிப்பிடுவதுண்டு.
இந்நூல், காஞ்சீபுரத்தில் பிறந்து துறைமங்கலம் என்னும் ஊரில் வாழ்ந்தவரான சிவப்பிரகாசர் என்பவரால் இயற்றப்பட்டது. இது மிகவும் கருத்துச் செறிவு கொண்ட நூலாதலால் இதன் பொருளை விளக்கப் பிற்காலத்தில் ஏழு உரை நூல்கள் எழுதப்பட்டன. இவை,
- ஆறுமுக நாவலர் உரை, 1873.
- இராமலிங்க சுவாமிகள் உரை, 1896.
- சுவாமிநாத பண்டிதர் உரை, 1916.
- நடராஜ தேசிகர் உரை, 1955.
- பு. சி. புன்னைவனநாத முதலியார் உரை, 1960.
- கொ. இராமலிங்கத் தம்பிரான் உரை, 1966.
- வை. இரத்தின சபாபதி உரை, 1984.
என்பனவாகும்.
உசாத்துணைகள்
- குப்பன், ந., நால்வர் நான்மணிமாலை உரை ஆய்வு, தமிழ்மலர்ப் பதிப்பகம், சென்னை. 1994.
- மஞ்சுளா, கி., கற்பனைக் களஞ்சியத்தின் அற்புதச் சொற்கோயில், தினமணி, 11 Oct 2009. (16 சூலை 2010 அன்று பார்க்கப்பட்டது)