நான்கு பேரரசர்களின் ஆண்டு

நான்கு பேரரசர்களின் ஆண்டு (Year of the Four Emperors) என்பது உரோமப் பேரரசின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டு. கிபி 69 இல் உரோமப் பேரரசில் அரசியல் நிலையின்மை நிலவியது. உள்நாட்டுப் போர் மூண்டு அவ்வாண்டில் நான்கு பேரரசர்கள் உரோமப் பேரரசை ஆண்டனர். அவர்கள்: கால்பா, ஓத்தோ, விட்டெல்லியஸ் மற்றும் வெஸ்பேசியன்.

உரோமப் பேரரச மரபுகள்
நான்கு பேரரசர்களின் ஆண்டு
காலக்கோடு
கால்பா 68–69
ஓத்தோ 69
விட்டெல்லியஸ் 69
வெஸ்பேசியன் 69–79
அரசு மாற்றம்
முன் இருந்தது
ஜூலியோ குளாடிய மரபு
பின் வந்தது
ஃபிளாவிய மரபு

கிபி 68 இல் ஜூலியோ குளாடிய மரபைச் சேர்ந்த இறுதிப் பேரரசர் நீரோ தற்கொலை செய்து கொண்டார். இதன் பின் ஓராண்டு காலம் உரோமப் பேரரசில் உள்நாட்டுப் போர் நடந்தது. முதலில் எசுப்பானிய மாகாணத்தின் ஆளுனர் கால்பா பேரரசரானார். ஆனால் அவரது செயல்பாடுகளால் பேரரசின் பல்வேறு குழுக்கள் கடும் அதிருப்தி கொண்டன. இதைப் பயன்படுத்திக்கொண்ட ஓத்தோ அரச பாதுகாவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து கால்பாவைப் படுகொலை செய்தார். ஓத்தோவைப் பேரரசராக செனட் அவை உடனடியாக ஏற்றுக்கொண்டது. ஆனால் ஜெர்மானியப் படைப்பிரிவுகளின் தளபதியான விட்டெலியஸ் அதை ஏற்கவில்லை. தன்னைத் தானே பேரரசராக அறிவித்த அவர் உரோம் நகரின் மீது படையெடுத்தார். போரில் தோல்வியடைந்த ஓத்தோ தற்கொலை செய்து கொண்டார். விட்டெலியசை செனட் அவை பேரரசராக அறிவித்தது. அவர் தனது குறுகிய ஆட்சி காலத்தில் குடிமக்களுக்கு பல கொடுமைகளை இழைத்தார். அவரது ஊதாரித்தனமான போக்கு அரச கருவூலத்தை காலிசெய்தது. இதனால் மக்கள் கடும் அதிருப்தி கொண்டனார். கிழக்குப் படைப்பிரிவுகளின் தளபதியான வெஸ்பேசியன் தன்னைத் தானே பேரரசராக அறிவித்துக் கொண்டார். இத்தாலி மீது படையெடுத்து, விட்டெலியசைக் கொன்று செனட் அவையின் ஏற்பையும் பெற்றார். டிசம்பர் 21, கிபி 69 இல் தொடங்கிய வெஸ்பேசியனின் ஆட்சி உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.