நாத்திகம் பி. இராமசாமி

"நாத்திகம்" பி. இராமசாமி (1932 - செப்டம்பர் 24, 2009) தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்று மிகச் சிறந்த பகுத்தறிவுப் பிரச்சாரகராகவும், காமராசரின் தலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சியின் தலை சிறந்த பேச்சாளராகவும் இருந்தவர். நாத்திகம் என்ற பத்திரிகையை நடத்தி வந்தவர்.

"நாத்திகம்" பி. இராமசாமி

வாழ்க்கைச் சுருக்கம்

1932ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தைச் சேர்ந்த மேல்ஆழ்வார் தோப்பில் பிச்சைக்கனி – பூவம்மாள் தம்பதியின் முதல் மகனாகப் பிறந்தவர் இராமசாமி. 17 வயதில் சென்னைக்கு வந்த இராமசாமி பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது இயக்கத்தில் சேர்ந்தார். பெரியார் நடத்திய பல போராட்டங்களிலும் பங்கு பெற்று சிறை சென்றிருக்கிறார். நாத்திகம் இராமசாமிக்கு ஆறு மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சுயமரியாதை திருமணம் செய்து வைத்தார். இதில் இரண்டு திருமணங்கள் சாதி மறுப்பு திருமணமும் கூட.

பத்திரிகையாளராக

1958 செப்டம்பர் 18 ஆம் நாளன்று பெரியாரின் கொள்கைகளை பரப்புவதற்காக நாத்திகம் பத்திரிகையை துவங்கினார். ஆரம்பத்தில் தினசரியாக இருந்து, பின்னர் பத்திரிகை வார இதழாக தொடர்ந்து வெளிவந்திருக்கிறது. 51 ஆண்டுகளாக நாத்திகம் பத்திரிகையை அவர் பல நட்டங்களுக்கிடையில் விடாது நடத்தி வந்தார். மூடநம்பிக்கை எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, அனைத்து மதங்களையும் விடாது அம்பலப்படுத்துதல், திரைப்படம், தொலைக்காட்சி, பண்பாட்டு சீரழிவுகளை சாடுதல் போன்றவற்றை உள்ளடக்கிய அவரது இந்த எழுத்துப்பணி இறக்கும் வரை வரை இடைவெளியில்லாமல் நிறைவேறியது.

பெரியாரின் தொண்டனாக விளங்கிய இவர் பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தலைவர் காமராசரின் சாதனைகளையும், பகுத்தறிவுக் கட்டுரைகளையும் தான் நடத்திவந்த நாத்திகம் இதழில் வெளியிட்டு வந்தார்.

இலக்கியவாதியாக

சிறந்த இலக்கிய வாதியாகவும் திகழ்ந்தார், நாத்திக சிங்கம் பகத் சிங், இதுதான் பார்பன ஆட்சி, ஜெயலலிதா ஆட்சி கொடுமைகள், RRS இந்து பாசிசம், சங்கர மடத்துக்கு சவுக்கடி 1,2,3, சங்கர மடம் பற்றிய உண்மைகள், பெரியார் சிறு கதை தொகுப்பு, சு.சமுத்திரமும் கடலூர் வீரமணியும் போன்ற எண்ணற்ற புத்தகங்களை எழுதியுள்ளார். இலங்கை தமிழருக்காக இலக்கிய வழியிலும் கொள்கை வழியிலும் நம்பிக்கையாக இருந்தார்.

தமிழக அரசின் பெரியார் விருது, இலக்கிய விருது போன்றவற்றை பெற்றுள்ளார். இவர் நாத்திகம் பிக்சர் என்ற சினிமா நிறுவனம் தொடக்கி மாதவி வந்தாள் என்ற படத்தை எடுத்தார்.

மறைவு

இதய நோயால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 2009, செப்டம்பர் 24 மாலை காலமானார்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.