நடைவண்டி

நடைவண்டி என்பது குழந்தை பிறந்து, பின்னர் தவழ்ந்து, நிற்கத் தொடங்கிய பின்பு நடை பயில்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வண்டி அல்லது விளையாட்டுப் பொருள் ஆகும். இந்த நடைவண்டி மரத்தால் செய்யப்பட்டு மூன்று சக்கரங்களுடன் மெதுவாக தள்ளிக் கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டதாகும். தற்போது நடைவண்டிக்குப் பதிலாக புதிய வடிவிலான பொருட்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியதால் நடைவண்டி பயன்பாடு இல்லாமல் போய்விட்டது. தமிழ்நாட்டின் சில கிராமங்களில் மட்டும் இந்த நடைவண்டி பயன்பாட்டிலுள்ளது.

நடைவண்டிகள்

சங்ககாலத்தில் இதனை முக்கால் சிறுதேர் என்றனர். [1] காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கக் காப்புகளைக் காலில் கழலாக அணிந்துகொண்டு சிறுவர்கள் முக்கால் சிறுதேர் உருட்டி விளையாடினர். குதிரை இல்லாமல் ஓட்டப்பட்ட தேர் இது. மகளிர் உணவு தானியங்களை முற்றத்தில் காயவைத்துக்கொண்டிருந்தனர். அந்தத் தானியங்களைக் கவர்ந்து உண்ணக் கோழிகள் வந்தன. அவற்றை ஓட்ட மகளிர் தம் காதுகளில் அணிந்திருந்த குழைகளைக் கழற்றி வீசினர். அந்தக் குழைகள் சிறுவர் உருட்டும் நடைவண்டித் தேருக்குத் தடைக்கற்களாக இருந்தனவாம். இது செல்வச் சிறுவர்களின் விளையாட்டு.

படத்தொகுப்பு

இவற்றையும் பார்க்க

நடைவண்டி ஓட்டம்

அடிக்குறிப்பு

  1. நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்
    கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
    பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்
    முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும் (பட்டினப்பாலை அடி 22-25)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.