தோற்றவமைப்பு

தோற்றவமைப்பு (Phenotype) என்பது ஒரு உயிரினத்தில் இலகுவாக அவதானிக்கப்படக் கூடிய சிறப்பியல்புகள் ஆகும். இந்த சிறப்பியல்புகள் உருவவியல், விருத்தி, உயிர்வேதியியல் அல்லது உடலியங்கியல் இயல்புகள், நடத்தை என்பவற்றை உள்ளடக்கியிருக்கும். இந்த தோற்றவமைப்பானது, ஒரு உயிரினத்தின் மரபணு வெளிப்படுத்தும் தன்மையாலும், சூழலியல் காரணிகளின் தாக்கத்தாலும், அவ்விரண்டுக்கும் இடையிலான இடைத்தாக்கத்தினாலும் முடிவு செய்யப்படும்.

இரு தடுக்கிதழ் கொண்ட Donax variabilis எனப்படும் மெல்லுடலிகளின் ஓட்டில் வெவ்வேறு நிறம், அமைப்பு கொண்ட பல தோற்றவமைப்புக்களைக் காணலாம்

ஒரு உயிரினத்தில் காணப்படும் மரபுக்குறியீடுகள் (genetic code), அவ்வுயிரினத்திற்கான மரபுவழி கட்டளைகளைக் காவிச்செல்லும் மரபணுவமைப்பு அல்லது பிறப்புரிமைப்பாகும். ஆனால் ஒரே மரபணுவமைப்பைக் கொண்ட ஒரு இனம் (உயிரியல்) இனத்தின் அனைத்து தனியன்களும் ஒரே அமைப்பைக் கொண்டிருப்பதோ, ஒரே மாதிரி இயங்குவதோ இல்லை. ஏனெனில், சூழல், விருத்தி நிலைகளால் தோற்றம், நடத்தை என்பன மாற்றியமைக்கப்படும்.

மரபணுவமைப்பில் ஏற்படும் வேறுபாட்டால் தோன்றும் தோற்றவமைப்பு வேறுபாடே கூர்ப்பு, இயற்கைத் தேர்வு என்பவற்றின் அடிப்படை தேவைகளாகும். தோற்றவமைப்பில் மாறுபாடு ஏற்படாவிடின் இயற்கைத் தேர்வோ, கூர்ப்போ ஏற்பட முடியாது.

மரபணுவமைப்பு (G) + சூழலமைப்பு (E) = தோற்றவமைப்பு (P)

இன்னும் சரியாகச் சொல்வதானால்

மரபணுவமைப்பு (G) + சூழலமைப்பு (E) + மரபணு - சூழல் இடைத்தாக்கம் (GE) = தோற்றவமைப்பு (P)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.